ஞாயிறு, அக்டோபர் 17, 2010

அபிராமி அந்தாதி 21 & 22

அன்பர்களுக்கு அடியேனின் இனிய விஜயதசமித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. அபிராமிப் பட்டரின் அடுத்த பாடலைக் காண்பதற்கு முன்னர் சில துளிகள்...


இந்த இழையின் துவக்கத்தில் எங்கள் பகுதியில் நடைபெறும் தசராத்திருவிழாவைப் பற்றி எழுதியிருந்தேன்.. இன்றைய தினம் பத்தாவது திருநாள்.. குலசேகரன் பட்டினத்தில் அன்னை தேவி ஸ்ரீ முத்தாரம்மன், மகிடனை வதம் புரிய மகிஷாசுரமர்த்தினியாக திருவுரு எடுத்து கடற்கரையில் அருள்பாலிக்கும் திருநாள்.. அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கோடி வேண்டும்.. இந்த ஆண்டு இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் ஆலயத்துக்குச் செல்ல இயலவில்லை.. எம்மைப் போன்ற அடியவர்களுக்காக வசந்த் தொலைக்காட்சியில் சூரவதத்தை இரவு நேரலை செய்கிறார்கள்.. அன்பர்களும் கண்டு மகிழுங்கள்.. பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்ப நோன்பு நோற்று பல வேடங்கள் புனைந்து தருமம் எடுத்து அன்னைக்குத் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். அந்தத் தசராத்திருநாட்களின் இறுதி நாளான இன்று அன்னையின் திருக்காட்சியைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடுகின்றனர்.. அன்னையே... அன்று உலகத்தைத் துன்பத்தில் ஆழ்த்திய மகிடனை வதம் செய்து உலகத்தைக் காத்தாய். இன்று எங்களையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தீய குணங்களை வதை செய்து எங்கள் உள்ளத்தைக் காத்து நல்வழியில் நடத்து என்பதுதான் இந்த சூரவத நிகழ்வின் சாராம்சம். அன்னையின் திருவருளால் அன்பர்கள் அனைவருக்கும் மங்கலமே உண்டாக எங்கும் நிறைந்திருக்கும் பூரணாசல மங்கலை தேவியை வணங்குகிறேன்... வெற்றித்திருநாளான இன்று அன்னைத் தங்களனைவருக்கும் வெற்றியைத் தந்திடட்டும்... தொடர்ந்து அபிராமிப் பட்டரைக் கவனிப்போம்..

பாடல் இருபத்தொன்று

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்


சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை


பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்


பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே



விளக்கம் : என்றென்றும் மங்கலத்தை வழங்கக் கூடிய மங்கலையான அபிராமி அன்னையே... செம்மையான கலசம் போன்ற திருமுலைகளை உடையவளே, மலைமகளே, வருணபகவான் அளித்த சங்காலான வளைகளை அணிந்த செம்மையான திருக்கரங்களை உடையவளே.. அனைத்துக் கலைகளும் அறிந்த மயிலே... பாயும் கங்கையின் பொங்கு அலைகள் தங்கும் சடைமுடிகளைக் கொண்ட ஈசனைத் தன் துணையாகக் கொண்டவளே.. அவ்வீசனைத் தன் உடையவனாகக் கொண்ட உமையவளே... பொன் போன்று ஒளிர்பவளே... நீல நிறங்கொண்ட நீலியே... செம்மையானவளே... வெண்மை நிறங்கொண்டவளே, பச்சை நிறமான பெண் கொடியே....

இந்த பாடல் அன்னையின் வெவ்வேறு குணங்களையும், நிறங்களையும் போற்றிப் பாடுகிறது... மங்கலையே... என்பதற்கு என்றும் மங்கலமாக இருப்பவளே.... என்றும் பக்தர்களுக்கு என்றென்றும் மங்கலத்தை வழங்குபவளே... என்றும் பொருள் கொள்ளலாம்.. செம்மையான கலசம் போன்ற திருமுலைகளைக் கொண்டவளே... இவ்விடத்து அன்னையின் தாய் நிலையைக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... மலையாள்... மலைமகளே... இமவானிடத்துதித்த மலைமகளே... "வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில்" சங்கின் பிறப்பிடம் எது? கடல்... கடலின் அதிதேவதை...? வருணபகவான்... அன்னைத் தன் திருக்கையில் சங்காலான வளைகளை அணிந்திருக்கின்றாள்.. அவ்வளைகள் நீ பக்தருக்கு அருளும்போது அங்கும் இங்கும் அலைகின்றன... அப்படிப்பட்ட செம்மையான கரங்களைக் கொண்டவளே... அனைத்துக் கலைகளும் அறிந்தவளே... மயிலைப் போன்றவளே...."தாவு கங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்" பாய்கின்ற கங்கையின் பொங்கு அலைகள் தங்கும் நீள்முடிகளைப் பிரித்துக் கட்டக்கூடிய ஈசனைத் தன் புடையாக... துணையாகக் கொண்டவளே... அவ்வீசனைத் தன் உடையவனாக............ கணவனாகக் கொண்டவளே..... "பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே" இவ்விடத்து அன்னையின் ஐந்து நிறங்களைக் கொண்டு காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... பிங்கலை என்பதற்கு பொன்போன்று ஒளிர்பவளே... சுவர்ண தேவியே.... என்று பொருள் கொள்ளலாம்.. நீல நிறங்கொண்ட நீலியே.. துர்க்கையே...செய்யாள் - செம்மை நிறமானவளே... அருணாதேவியே... வெளியாள்... வெண்மையானவளே.... ஸ்வேதா தேவியே.... பசும் பெண்கொடியே - பச்சை நிறங்கொண்ட பெண்கொடியே... அன்னை மீனாட்சியே... அன்னையின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு பெயர் உண்டு... வடமொழியில் காணப்படும் அன்னையின் ஆயிரத்திருநாமப் போற்றிகள் இதைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்றது.. நமக்கு அதைப் பற்றிய ஞானம் குறைவு... நமக்குத் தெரிந்தவற்றை இவ்விடத்துப் பதிவு செய்துள்ளேன்.. அன்னையின் ஆயிரந்திருநாமங்களைக் கற்றோர் இவ்விடத்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.. மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் ஈசனை "நிறங்களோர் ஐந்துடையாய்" என்று குறிப்பிடுவதும் இவ்வைந்து நிறங்களையே... ஈசன் கொண்ட நிறங்களுக்கு வெவ்வேறு திருநாமங்கள் உண்டு....

மேலும் இப்பாடல் அன்னையைத் துதி செய்யத் தகுந்த பாடல்... வேறெந்த நினைவுகளும் இன்றி வேறெந்த வேண்டுதலும் இன்றி அன்னையைத் துதிப்போருக்கு இப்பாடல் மகிழ்வு தரும்...

பாடல் இருபத்திரண்டு

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த


படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்


பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே


அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

விளக்கம் : கொடியைப் போன்ற மென்மையான என் அபிராமி அன்னையே... இளமையான வஞ்சிக் கொம்பே, தகுதியற்ற எனக்குத் தானே வந்து கனிந்த கனியைப் போன்றவளே... வேதங்களின் நறுமணமே, பனி உருகும் இமயத்துதித்த பெண்யானையைப் போன்றவளே... பிரம்மன் முதலான அனைத்து தேவர்களையும் பெற்றெடுத்த என் அபிராமி அம்மையே...உனக்கு அடியேனாகிய நான் மரித்த பின்னர் இனிமேல் இவ்வுலகில் பிறவி எடுக்காத வண்ணம் நீ வந்து என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும்..

பிறவிப் பெருங்கடல் நீந்துதலின் கொடுமை அபிராமிப் பட்டருக்குப் புரிந்திருக்கின்றது.. எத்தனை துன்பம் அம்மா... பிறந்தது முதல் இறப்பு வரை இன்பங்களாலும், துன்பங்களாலும் அல்லாடும் மனது...என்செய்வதென்று புரியவில்லை.. பிறப்பை நீத்த பின்னர் மீண்டும் பிறவாத வரம் வேண்டுமென்றே ஆன்றோர்கள் வேண்டியிருக்கின்றனர்... அவ்வண்ணமே அபிராமிப் பட்டரும் தான் மரித்த பின்னர் மீண்டும் பிறவாதிருக்க அன்னை வந்து தன்னை ஆண்டுகொண்டருள வேண்டும் என்று வேண்டுகிறார்...

கொடியே... கொடியைப் போன்ற மென்மையானவளே... இளவஞ்சிக் கொம்பே... வஞ்சி என்பது ஒருவகைச் செடி... (வஞ்சிப்பூ...?) அதன் இளங்கொம்பைப் போன்றவளே... மிக மிக மென்மையானவளே... என்பது இதன் பொருள்..."எனக்கு வம்பே பழுத்த படியே.." தானாக வந்து கனிந்த கனியைப் போன்றவளே... உனது அருளைப் பெறுவதற்கு எவ்விதத் தகுதியும் எனக்கில்லை....ஆயினும் நீயே வந்து உனதருளை என் மீது பொழிந்தாய்.. யாம் விரும்பிய காலையில், காலம் மறந்து தானே கனிந்த கனியைப் போல அருள் பொழிந்த அபிராமி அன்னையே... "மறையின் பரிமளமே" வேதங்களின் நறுமணம் ஆனவளே... இறையருள் பெற்றிட வேதங்கள் ஓதுகின்றனர்... ஆனால் அவ்வேதங்களின் சாரம்சம் உனது திருநாமமே... நீயே அவ்வேதங்களை உள்ளடக்கியிருக்கிறாய்.. உன்னை வணங்கினாலே போதும்.. உனது திருநாமத்தை உச்சரித்தாலே போதும்... அவ்வேதங்களை ஓதும் பலன் உன்னைத் தொழுவதாலேயே.. உன் திருநாமத்தை உச்சரிப்பதாலேயே கிட்டுகிறது.... "பனி மால் இமயப் பிடியே" பனி உருகும் இமயமலையில் நீ ஒரு பெண்யானையாகக் காட்சியளிக்கிறாய்.. மென்மையானவளே என்று அன்னையை வர்ணித்த அபிராமிப் பட்டர் வலிமை பொருந்திய பெண் யானைக்கு அம்மையை ஒப்பிடுகிறார்... மென்மையானவளும் நீ... வலிமையானவளும் நீ... என் போன்ற அடியவரைத் தன்பக்கம் ஈர்த்து அருள் செய்யும் மென்மையானவள் நீ... எமக்குத் துன்பம் வரும் வேளையில் அதைத் துடைத்தழிக்கும் வலிமையானவளும் நீயே... என்றுரைக்கிறார் அபிராமிப் பட்டர்.. பிரம்மன் முதலிய தேவர்களையெல்லாம் பெற்றெடுத்த அபிராமி அம்மையே... எனக்கு இன்னொரு பிறப்பு வேண்டாம் என்று வேண்டுகிறார்... "இன்னுமோர் தாய் கருப்பையூர் வாராமல் கா" என்று ஈசனை வேண்டினார் பட்டினத்தார். ஆனால் அபிராமிப் பட்டரோ.... பிரம்மன் முதலிய தேவர்களையெல்லாம் பெற்றெடுத்த அம்மையே... எனக்கு இனிப் பிறவி வேண்டாம். என் பிறவியைத் தடுத்து என்னை ஆண்டருள்புரி என்று வேண்டுகிறார்.. பிறவியைக் கொடுப்பவளிடம் நீயே அனைவரையும் பெற்றெடுத்தாய்.... எனவே ... எனக்குப் பிறவியளிப்பதும், அளியாதிருப்பதும் உன் திருவருளே... தாயே... போதும்... என்னை தடுத்தாட்கொள்... நான் இறந்த பின்னர் மீண்டும் பிறவாதிருக்க வரமளி..... என்று அன்னையிடம் தன் பிறவிவேண்டா விருப்பத்தைத் தெரிவிக்கிறார் அபிராமிப் பட்டர்...

அன்பர்களே... தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில் காணலாம்...மீண்டும் சந்திப்போம் நன்றி...

கருத்துகள் இல்லை: