வெள்ளி, அக்டோபர் 08, 2010

அபிராமி அந்தாதி

அன்பர்களே... அவ்விரு பாடல்களையும் மனனம் செய்துவிட்டீர்களா? இன்றும் இரு பாடல்களைப் பார்ப்போம்....
பாடல் மூன்று
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே!
விளக்கம்.
என் தாயே... தமது முன்வினைப் பயனால், உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை நான் வெறுத்து விலகி விட்டேன். அன்பர் விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே... என் தாயே அபிராமியே... மனிதராய்ப் பிறந்த எல்லோரும்அறிய இயலாத மறைபொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன்.
அன்பர்களே... அபிராமிப் பட்டர் அன்னையின் திருவருளால் தான் ஒரு மறை பொருளை அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அது என்னவாக இருக்கும்?? இதனை நாம் ஆராயுங்கால், அதற்கான விளக்கத்தை அவரே ஒரு மறைபொருளாக அடுத்த அடியில் வெளிப்படுத்துகிறார். இன்று நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு அடிப்படைக் காரணியாக இருப்பது நமது முன்வினைப் பயனே. அவையே நாம் செய்கின்ற பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இப்பிறப்பில் நாம் செய்கின்ற தீய செயல்கள நம்மை நரகத்தில் தள்ளிவிடக் காரணியாக அமைகின்றது.. ஆகையால்தான் நாம் அன்னையின் அடியவர் பெருமையை எண்ணாது நரகில் விழக் காத்திருக்கும் மனித மந்தைகளாக உள்ளோம்.. இத்தகைய மனித மந்தையை வெறுத்து விலகி விட்டதாகக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் பின்னொன்றும் குறிப்பிடுகிறார். அன்பர் விரும்புனவெல்லாம் அளித்து அருட்செய்யும் செல்வமே... என அன்னை அபிராமியை விளிக்கும் அபிராமிப் பட்டர் அன்னையின் திருவடிகளே சரணமென்று சரண்புகுந்ததாகக் குறிப்பிடுகிறார். இவ்விடத்து நமக்கு ஒரு ஐயம் எழுகிறது.. எது மறைபொருள்? அன்னையின் அன்பர் பெருமையை எண்ணுவதா?? அல்லது எண்ணாது நரகில் விழும் மனித மந்தைகளை விட்டு விலகுவதா?? அல்லது அனைத்தும் அருளும் அபிராமியின் பொற்பாதங்களைச் சரண்புகுவதா?? எது மறைபொருள்? அவர் எதை அறிந்து கொண்டார்??? ஒன்றைத் தொடர இன்னொன்று தானே தொடரும் செயல் இது... அன்னையின் அன்பர் பெருமையை அறிந்து கொண்டால், தானாகவே நம் மனது அவள் அடியவர் பெருமை எண்ணாத மனிதரை விட்டு விலகுகிறது. நரகுக்குத் தொலைவாகிறது. நரகில் விழக் காத்திருக்கும் மனித மந்தைகளை விட்டு விலகி விடும் மனது தானாகவே அபிராமியின் பொற்பாதங்களைச் சரண்புகுகிறது...
வார்த்தைகள் விளையாட்டில் ஒரு மறைபொருளை உலகறியச்செய்த அபிராமிப் பட்டரின் புலமை நம்மை வியக்க வைக்கிறது. அன்பர் திரு. மோகனரங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதைப் போல் வார்த்தைக்கு வார்த்தை எம்மால் விளக்கம் தர இயலவில்லை.. ஏனெனில் இப்பாடல்களை ஆரம்பித்தால் அதன் முழுப்பொருள்தான் என் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டு விழுகிறது. கண்முன்னே அபிராமியின் திருவுருவம் நின்று வழிகாட்டுவதைப் போன்று உணர்கிறேன்.. இந்த விளக்கத்தில் ஏதேனும் பிழையிருப்பின் அன்பர்கள் தயவு செய்து பொறுத்தருள்க.. எமது சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்கம் தந்துள்ளேன்... தங்களது விளக்கங்களையும் அன்பர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாட்ல நான்கு
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
விளக்கம். :
மனிதர்களும், அமரர்களும், மாயாமல் வாழும் தவமுனிகளும் தலைகுனிந்து வணங்கும் செம்மைப்பாதங்களைக் கொண்ட கோமளவல்லியே.... கொன்றைப்பூவை அணிந்துள்ள தனது சடைமுடியில் மேல் குளிர்ச்சி தரும் நிலவினையும், பாம்பையும், பகீரதியான கங்கையையும் அணிந்த புனிதரான சிவபெருமானும், உமையவளான நீயும் எனது மனத்தில் என்றென்றும் நீக்கமற நிறைந்தருள வேண்டும்.
கடந்த பாடலில் மனிதர்களெல்லாம் உனது அன்பரது பெருமையை உணராது நரகுக்கு உறவானவர்களாக உள்ளார்களே எனக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் இவ்விடத்து மனிதர்கள் தலைவணங்கும் செம்மைப் பாதம் கொண்ட கோமளவல்லியே என்று குறிப்பிடுவது சற்றே முரண்பாடாகக் காட்சியளிக்கின்றது அல்லவா? அன்னையைச்சரண்புகுவதற்காக மனிதர்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகின்றனரா? தனக்கென்று வேண்டுவனவற்றைத் தந்தருள்தாயே என்று வழிபாடு நடத்தவே ஆலயம் புகுகின்றனர். சிலர் மட்டுமே. அன்னையே... உன்பாதங்களின் சரணத்தை எனக்குத் தா என்று உள்ளன்போடு வேண்டுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணம் எழவேண்டுமாயின் அன்னையின் அன்பர்கள் துணை வேண்டும். யாராவது நமக்குக் கற்றுத்தந்தால்தானே நமக்கு இதன் மகிமை விளங்கும்? அன்னையை அனைவரும் வழிபடுகின்றனர். ஆனால் அன்னையின் பெருமையை உணர்ந்தோர் சிலர். அப்பெரியோர்களது அருளாலேயே நாம் அன்னையின் மகிமைகளை உணர முடிகின்றது. ஆக அப்படி வழிகாட்டும் பெரியோர்களது பெருமைகளை எண்ணாத மனிதர்களைப்பற்றித்தான் கடந்த பாடலில் குறிப்பிட்டார். இப்பாடலில் அன்னையும் தந்தையும் எந்நாளும் எம்மனதில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். மனிதர்கள் வந்து உன்னை வணங்குகின்றார்கள் தாயே... அமரர்களும் உனைத் தேடி வந்து வணங்குகின்றார்கள். மரியாது வாழும் வாழ்வு பெற்ற தவசீலர்களும் உன்னை வந்து வணங்குகின்றார்கள். தலைகுனிந்து உனது செம்மை நிறப் பாதங்களை வணங்குகின்றார்கள் தாயே... அப்படிப்பட்ட சேவடிகளைப் பெற்ற தாயே... கோமளவல்லியே... என்று அன்னையை அழைக்கிறார் அபிராமிப் பட்டர். கொன்றைப்பூக்களை அணிந்த சடையிலேயே குளிர்தரும் நிலவையும், பாம்பையும், வற்றாத உயிரூற்றான கங்கையையும் அணிந்த புனிதரும் என்று அபிராமிப் பட்டர் சிவனைக் குறிப்பிடுங்காலை "மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த ..." என்று தென்னாடுடைய சிவனைக் கொண்டாடிய சம்பந்தரின் வரிகள் இவ்விடத்து நினைவுக்கு வருகின்றன. இப்படித் தொடர்ந்தால் பதிவு எப்படியெல்லாமோ நீண்டு விடும். எனவே... அபிராமி அந்தாதியை மட்டும் தொடர்வோம்.. அப்புனிதரான சிவனும், நீயும் எந்நாளும் எக்கணமும் என் புத்தியில், எனது மனத்தில் நீக்கமற நிறைந்தருள வேண்டும் என்று அன்னையைத் தொழுகிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்....

கருத்துகள் இல்லை: