வியாழன், அக்டோபர் 07, 2010

அபிராமி அந்தாதி

அன்பர் திரு. வேணு அவர்களது ஆணையை சிரமேற்கொண்டு அடியேன் இவ்விடம் அபிராமி அந்தாதி பற்றி மொழிகிறேன். நான் கல்லூரி பயிலும் வேளையில்தான் அபிராமி அந்தாதி முழுதும் கற்றேன். மனப்பாடமாக அவற்றைப்பாடுதற்கும் அன்னை அருள் புரிந்தாள். அதற்கு முன்னர் "தனந்தரும் .." எனத்தொடங்கும் பாடலும், "ஆத்தாளை .." எனத்தொடங்கும் நூற்காப்பும், பள்ளியில் மனப்பாடச்செய்யுளாகக் கற்றது. இவ்விடம் நாம் தரும் விளக்கத்தில் பிழையிருப்பின், அறிந்தோர் திருத்தம் செய்க... பிள்ளையார்க் காப்பும், அந்தாதியின் முதல் இருபாடல்களும் இம்மடலிற்காண்க.. தொடர்ந்து அன்னையின் அருளோடு விளக்கம் எழுதுவோம்...

பிள்ளையார் காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே -
கார் அமர் மேனிக் கணபதியே - நிற்கக் கட்டுரையே.

விளக்கம்.
எச்செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுள் கணபதியை வணங்கி துவங்குவது மரபு. இவ்விடத்தும் அபிராமிப் பட்டர் "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சதைப்பொடி செய்த அதி தீரன்" பிள்ளையாரை வணங்கித் தம் அந்தாதியைத் துவங்குகின்றார். கொன்றைப்பூமாலையும், செண்பகப் பூ மாலையும் அணிந்த தில்லையம்பதி வாழ் நாயகன் சிவனது இடப்பாகத்தைத் தன்னிடமாகக் கொண்ட உலகம் ஏழுக்கும் அன்னையான உமையாளின் மகனே... கரிய நிறங்கொண்ட எங்கள் கணபதி பெருமானே... அன்னையின் சிறப்பை விளக்கும் இந்த அபிராமி அந்தாதியானது எப்போதும் என் சிந்தையில் நின்று நான் இதனை மறவாதிருக்க அருள் செய்வாயாக....
(அன்பர்களுக்கு அந்தாதி என்பதன் விளக்கம் தெரியும் என்று நம்புகிறேன்.
முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

விளக்கம்.
காரிருளை அகற்றவல்ல செங்கதிரோனின் கதிர்களைப் போன்றது அன்னை அபிராமி தன் நுதலில் அணிந்திருக்கும் திலகம். இவ்விடத்து எங்ஙனம் கதிரவன் உலகத்து இருள் நீக்கி இன்பந்தருகின்றானோ... தாயே.. உன் குங்குமம் என் மனவிருளை நீக்கி அறிவையும் ஆற்றலையும் என் வாழ்விற்கு ஒளியையும் தந்திடும்.. (இது அடியேனின் கருத்து). அறிவுநிறை ஆன்றோர்களால் போற்றப் படும் மாணிக்கம் போன்றவள் என் அன்னை அபிராமி. மாதுளை மொட்டின் நிறங்கொண்ட கமலத்தின் மீது வீற்றிருந்து அருள்புரியும் திருமகளால் போற்றப்படும் மின்னல் கொடியினைப் போன்றவள் என் அன்னை அபிராமி. மெல்லிய மணம் கமழும் குங்குமம் கரைத்த நீரைப்போன்ற மேனியினைக் கொண்ட அன்னை அபிராமியே எனது இன்பத்திலும், துன்பத்திலும் சிறந்த துணையாக இருக்கின்றாள்.

இரண்டாம் பாடல்
துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

விளக்கம்
என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்குத் துணையாக, நான் என்றென்றும் தொழுதேத்தும் தெய்வமாக, என்னைப் பெற்ற அன்னையாக, உலகத்தின் ஆதாரங்களான வேதங்களின் கிளைகளாக, அவற்றின் இலைகளாக (சாராம்சமாக) , அவை இப்பூமியில் நிலைபெற வேதங்களின் வேறாக இருப்பவள் குளிர்ந்த மலர்க்கணையும், கரும்பினாலான வில்லையும், மெல்லிய பாசத்தையும், அங்குசத்தைய்ம் கையில் ஏந்தியிருக்கும் திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியே என்பதை நான் அறிந்து கொண்டேன்..

அந்த இருபாடல்களையும் பாடிப் பாருங்கள் நண்பர்களே... நம் மனத்தைக் கொள்ளை கொண்டது தமிழின் இனிமையா, அபிராமிப் பட்டரின் புலமையா, அன்னை அபிராமியின் பேரருளா என்பதில் நமக்கெழும் ஐயத்திற்கு அளவே இல்லை...
தொடரும் இருபாடல்களின் விளக்கத்தோடு அடுத்த மடலில் சந்திப்போம்....

கருத்துகள் இல்லை: