சனி, அக்டோபர் 16, 2010

அபிராமி அந்தாதி 19 & 20

அன்பர்களுக்கு அடியேனின் இனிய சரசுவதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்.... தொடர்ந்து அபிராமி அந்தாதியைக் கவனிப்போம்.


பாடல் பத்தொன்பது

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்


களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே


தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?


ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே



விளக்கம் : ஒளிரும் ஒன்பது கோணங்களின் நாயகியாக நவசக்தியாய் விளங்கும் அபிராமி அன்னையே.. காலன் வரும் வேளையில் நான் வேண்டியவுடன் வான வெளியில் திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும் நெஞ்சமும் அடைந்த ஆனந்த வெள்ளம் கரையற்றுப் புரண்டோடுகிறது... எனது சிந்தையுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. இப்படிப்பட்ட ஆனந்தத்தையும் அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் உள்ளத்தை எண்ணி வியக்கிறேன்..

"ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.." அன்னை அபிராமியானவள் நவராத்திரி தினங்களில் நாளொன்றுக்கொரு சக்தியாக ஒன்பது திருஅவதாரங்கள் எடுக்கிறாள்... இவ்விடத்து ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது என்று அபிராமிப் பட்டர் குறிப்ப்டுவது சக்தி வழிபாட்டில் யாகம் செய்யப்படும் ஒன்பது யாகக் குண்டங்களாக இருக்கலாம். அப்படி யாகம் செய்யப் படும்போது வெளிப்படும் ஒன்பது குண்டங்களின் சக்தியாகத் திகழும் அபிராமி அன்னையே.... என்று அன்னையை நவராத்திரி நாயகியாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர். கடந்த பாடலில் தன்னை அழைத்துச்செல்ல கொடுங்கோபத்துடன் காலன் வரும் வேளையில் அன்னை தனது திருமணக்கோலத்துடன் காட்சியளித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாரல்லவா?? அவ்வாறு வேண்டியதுமே அன்னையின் திருக்கோலம் அவருக்குக் காட்சியளித்து விட்டது... வான வெளியில் அன்னையின் திருமேனியைக் கண்டதும் அவர் விழிகளிலும் மனத்திலும் ஆனந்த வெள்ளம் கரைகடந்து ஓடுகின்றது.. அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் தென்படுகின்றது.. இது அவருக்கு வியப்பை ஏற்படுகின்றது... கவனியுங்கள்... நாம் அரிதானதொரு காட்சியைக் கண்டு விட்டாலோ அல்லது நமது மனது ஆனந்தத்தால் நிறையும்படியானதொரு நிகழ்வு நடந்து விட்டாலோ, சிந்தை தெளிவானதாக இருப்பதில்லை... ஆனந்தத்தில் குதித்துக் கொண்டே இருக்கும்... சிரித்துக் கொண்டே இருப்போம்.. அவ்வமயத்தில் நாம் செய்கின்ற செயல்களைப் பின்னர் ஆற அமர்ந்து நினைவு படுத்திப் பார்த்தால், நமக்கே அது முட்டாள்த்தனமாவும், சிறுபிள்ளைத்தனமாகவும் தெரியும்.. ஆனால் இவ்விடத்து அன்னையின் திருமேனியைக் கண்டதும் அபிராமிப் பட்டரின் கண்கள் ஆனந்த வெள்ளத்தை அடைகின்றன. அவரது மனதும் ஆனந்த வெள்ளத்தில் திளைக்கின்றது... "விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை" என்கிறார்... கரையற்று ஓடும் காட்டாற்றைப் போன்ற ஆனந்த வெள்ளம் அது... மனமும் விழிகளும் இப்படிப் பட்ட ஆனந்தத்தில் திளைக்கும் வேளையில், அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம் திகழ்கின்றது... இதென்ன அதிசயம்.. ? என்று அபிராமிப் பட்டர் வியக்கிறார்.. உனது திருவுளமே இதற்குக் காரணம் அம்மா... உனது திருவுள்ளம் அத்தனை அளப்பரிய ஆற்றல் கொண்டதம்மா என்கிறார்..

பாடல் இருபது

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ


அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்


நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ


மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

விளக்கம் : அங்கிங்கெனாதபடி எங்கும் பூரணாமாய் நிறைந்திருந்து மங்கலமளிக்கும் அபிராமி அன்னையே... நீ உறைகின்ற திருக்கோயில் யாது?? உன் தோழரான சிவபெருமானின் ஒரு பக்கமா? அல்லது ஓதப் படும் நால்வகை வேதங்களின் தொடக்கமா அல்லது முடிவா? அமிழ்தத்தால் நிறைந்து குளிர்ச்சியைத் தருகின்ற வெண்மதியா? ஆயிரம் இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலரா? அல்லது அடியேனின் உள்ளமா?? அல்லது செல்வங்களெல்லாம் மறைந்திருக்கின்ற திருப்பாற்கடலா???

அன்னை எவ்வெவ்விடத்திலெல்லாம் கோயில் கொண்டுள்ளாள் என்பதை இப்பாடல் தெளிவாகக் கூறுகின்றது.. "நின் கேள்வர் ஒரு பக்கமோ.." உனது தோழரான ஈசனது ஒரு பக்கமோ? கேள்வர் எனும் பதமானது மிக நெருக்கமான தோழர்களைக் குறிக்கப் பயன்படுகிறது... அன்னைக்கும் அப்பனுக்கும் இடையேயான தோழமை அளப்பறியது அல்லவா? ஈசனை விடுத்து உமையும், உமையை விடுத்து ஈசனும் பிரிந்திருப்பது மிக மிக அரிது... பிரிந்திருந்தாலும் அவர்தம் மனத்தளவில் ஒன்றியிருப்பதே வாடிக்கை... அப்படிப்பட்ட ஈசனைத் தான் அம்மையின் கேள்வர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றா. ஒரு தமிழாசிரியர் வேடிக்கைக்காகக் கூறிய செய்தி... ஈசனை என்ன காரணத்தால் அபிராமிப் பட்டர் கேள்வர் என்று குறிப்பிட்டார் தெரியுமா? அன்னை சொல்வதையெல்லாம் சரி சரி என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்காகத்தான் என்று... ஆம் அன்னையின் திருச்சொல்லை அப்பன் கேளாதிருந்திடுவாரோ? அந்த ஈசனின் ஒருபக்கத்தில், இடப் பாகத்தில் இருக்கின்றாயல்லவா?? அதுதான் நீ உறையும் திருக்கோவிலா?? "அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ?" ஆலயம்தோறும் உன்னை வழிபடுவதற்காக நால்வகை வேதங்களை ஓதுகின்றார்களே.... அந்த வேதங்களில் நீ எவ்விடத்துக் கோயில் கொண்டுள்ளாய்? அதன் தொடக்கத்திலா? அல்லது முடிவிலா? அமுதத்தால் நிறைந்திருக்கும் வெண்மை நிற நிலவிலா? "கஞ்சமோ?" கஞ்சம் எனும் பதம் ஆயிரம் இதழகளைக் கொண்ட வெண்தாமரை மலரைக் குறிக்கின்றது... நீ அந்த தாமரை மலரில் கோயில் கொண்டுள்ளாயா? அல்லது என்றென்றும் உனையே எண்ணித் தவிக்கும் இந்த அடியவனின் நெஞ்சத்திலா? "மறைகின்ற வாரிதியோ?" செல்வங்கள் எல்லாம் மறைந்திருக்கக் கூடிய திருப்பாற்கடலோ? "பூரணாசல மங்கலையே!" எங்கும் முழுமையாய் நிறைந்திருக்கும் மங்கலையே... மங்கலத்தை அருள்பவளே...

இவ்விடத்துப் பாடலினை இன்னொரு நோக்கிலும் காணலாம்... அம்மையே நீ எங்கெங்கோ உறைகிறாய் என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் அவள் எங்கும் நிறைந்தவள் எனவே அவளைத் தேடி எங்கெங்கோ எதற்காக அலைய வேண்டும் என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்....

தொடரும் பாடல்களின் விளக்கத்தோடு அடுத்த மடலில் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை: