திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 97&98

பாடல் தொண்ணூற்று ஏழு
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே
விளக்கம் : சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், அமரர்களின் தலைவன் இந்திரன், திருமாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன், முப்புரங்களை அழித்த சிவபெருமான், முரனை அழித்த திருமால், பொதியமலை வாழ் முனிவன் அகத்தியன், போரிடும் பெரும்படையை ஒத்த பலம் மிக்க கந்தன், அவன் அண்ணன் முதற்கடவுள் கணபதி, காமன் முதலிய சாதனை படைத்த புண்ணியம் மிக்க எண்ணற்றோர் எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்.
அத்தனை தெய்வங்களையும் இப்பாடலில் குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் என் அன்னையைப் போற்றுவார்கள் எனக் குறிப்பிடுகின்றார் அபிராமிப் பட்டர்... ஒரு பாடல் உண்டு "கந்தன் காலடியை வணங்கினால், கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே.." என்று... இவ்விடத்து அனைத்துக் கடவுள்களையும் குறிப்பிட்டு அவர்கள் எல்லோரும் அன்னையை வணங்குகின்றனர் எனக் குறிப்பிடுதலால், இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிடில் என்ன புண்ணியம் வருமோ அது அன்னையை மட்டும் வணங்கினாலே வரும் என்பது இப்பாடலின் மறைபொருள்..
"ஆதித்தன்" சூரிய பகவான், "அம்புலி" சந்திர பகவான் "அங்கி" அக்கினி, "குபேரன்" குபேரன், "அமரர் தம் கோன்" அமரர்களின் அரசன் இந்திரன் "போதிற் பிரமன்" மாலின் நாபிக் கமலத்துதித்த பிரம்மன் "புராரி" முப்புரங்களை அழித்த சிவபெருமான் "முராரி" முரன் எனும் அசுரனை வதைத்தத் திருமால், "பொதிய முனி" பொதியமலை வாழ் தமிழ் முனி அகத்தியன் "காதிப் பொரு படை கந்தன்" போரிடும் பெரும்படையை ஒத்த வலிமை மிக்க முருகன் "கணபதி" கந்தனின் அண்ணன் முழு முதற்கடவுள் கணபதி "காமன்" காமக் கடவுள் மன்மதன் "முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் " இவர்கள் முதலான சாதனைகள் பல படைத்த புண்ணியம் செய்த எண்ணற்றோர் "போற்றுவர் தையலையே" எங்கள் அன்னை அபிராமியைப் போற்றுவார்கள்...
பாடல் தொண்ணூற்று எட்டு
தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே

விளக்கம் : உண்மை நிறைந்த நெஞ்சத்தைத் தவிர்த்து ஒரு போதும் வஞ்சகரின் பொய் நெஞ்சில் புகுதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி அன்னையே... உனது திருவடித் தாமரைகளைத் தனது தலைமேல் அணிகலனாகச் சூட்டிய சங்கரனாரின் கையிலிருந்த அக்கினிச் சட்டியும், தலைமேலிருந்த கங்கையும் எங்கே மறைந்தன?
அன்னையை மணம் முடிக்க சங்கரனார் வருகின்றார்.. எந்நேரமும் சுடலையில் தியானத்தில் மூழ்கியிருக்கையில் அவர் பெருஞ்சடையில் கங்கையானவள் ஒட்டிக் கொண்டாள். அவரது கையிலோ அவரது கோபத்தையொத்த அக்கினிச் சட்டி... அன்னையின் திருப்பாதங்களைத் தனது சிரசில் சூடி அவளையே மணம் முடிக்க வேண்டி வருகின்றார்.. காண்போர் என்ன பகர்வர்? இவனா மணம் முடிக்கச் செல்லும் மணமகன்.? இதென்ன தவக்கோலம்? சுடலைக் கோலம்? என எள்ளி நகையாட மாட்டார்களா? எனவே தனது தவக்கோலத்தை மறைத்து இராச அலங்காரத்தில் வருகின்றார்... அவர்தம் கையில் நெருப்புச் சட்டியிருந்தால் அழகிய பூங்குயில் போன்ற அன்னைக்குத் தகுமா? எனவே அதை எங்கேயோ மறைத்து விட்டார்... தனது சடைமுடிமேல் கங்கையிருந்தால் அன்னை பொறுப்பாளா? இவள் எனக்குச் சக்களத்தியா? என்று சங்கரனாரிடம் சண்டை பிடிப்பாளில்லையா? அதற்காக கங்காதேவியையும் எங்கேயோ மறைத்து விட்டார்.. இப்போது அழகிய அரசகோலத்தில் அன்னையை மணம் முடிக்க வந்து கொண்டிருக்கின்றார்... பட்டருக்கு இக்காட்சித் தென்படுகின்றது.. என்னடா இது இவர் கையில் ஓர் அக்கினிச் சட்டியைக் கண்டோமே? இவர் சடையில் கங்கை குடிகொண்டிருந்தாளே...? எங்கே போயின அவை? என் அன்னையை நீ உன் தலையில் சூடிக்கொண்டதால் அவை எங்கே மறைந்து போயினவோ?? என சங்கரனாரிடம் கேட்கின்றார்... நீ இப்படிச் செய்கின்றாயே... என் அன்னையோ உண்மை பேசுவோர் நெஞ்சத்துள் மட்டுமே குடிபுகுவாளேயன்றி ஒருபோதும் பொய்யுரைக்கும் வஞ்சசர் நெஞ்சத்தில் குடிபுகுவதே இல்லையே... உன்னை எப்படியடா தன் கணவனாக ஏற்றாள்? என ஈசனைக் கிண்டலடிக்கின்றார்...அகிலத்தைப் படைத்த ஆதிபராசக்தியே ஆனாலும் அவளுக்கும் பெண்ணுக்குரிய குணங்கள் இருப்பதாலேயே நீ இப்படிச் செய்கின்றாயோ? எனவும் வினவுகின்றார். அன்னையிடமும் நீ உண்மை பேசுவோரை விடுத்து, வஞ்சகர்களின் பொய் பேசும் நெஞ்சத்தில் குடியிருப்பதில்லையே... உன்னை ஏய்க்கும் பொருட்டு சங்கரனார் வேடமிட்டு வந்திருக்கின்றானே... இவனை நீ எப்படி ஏற்றாய்? அன்னையிடமும் கேள்விக்கணையைத் தொடுக்கின்றார்.
"மெய் வந்த நெஞ்சின் அல்லால் " உண்மை பேசுவோர் நெஞ்சத்தைத் தவிர்த்து "ஒருகாலும்" ஒருபோதும் "விரகர் தங்கள்" வஞ்சகர்களின் "பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே" பொய் பேசும் நெஞ்சத்தில் புகுவதற்கறியாத அழகிய பூங்கியிலே... எங்கள் அபிராமி அன்னையே... "தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு" உன் திருவடித் தாமரைகளைத் தனது சிரசின் மேல் அணிகலனாக சூடிய சங்கரனாரின் "கை வந்த தீயும் " கையிலிருந்த அக்கினிச் சட்டியும் "தலை வந்த ஆறும்" சடைமேலிருந்த கங்கை நதியும் "கரந்ததெங்கே?" எங்கே மறைந்து போயின? அன்னை உன்னைக் கோபித்துக் கொள்வாளென்று எங்கே மறைத்து விட்டு வநதீர் சங்கரனாரே..? உம் கோலம் எல்லோருக்கும் தெரியுமய்யா... எங்கள் தாயை நீர் எப்போதும் ஏமாற்ற இயலாதய்யா....
தொடரும் இறுதி இரு பாடல்களின் விளக்கமும், அபிராமி அந்தாதி நூற்பயனின் விளக்கமும் நாளைய மடலில்... மீண்டும் சந்திப்போம்... நன்றி...

கருத்துகள் இல்லை: