திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 65, 66, 67 & 68

அன்பர்களுக்கு அடியேனின் சிரந்தாழ்ந்த வணக்கம். நேற்றையதினம் அன்பு மகளின் பெயர் சூட்டு விழா (அன்பு மகளுக்கு நாகவேணி (எ) கீர்த்தி தேவி என்ற திருப்பெயரை சூட்டினோம்) நிகழ்ந்தபடியால் இணையப் பக்கம் வர இயலவில்லை.. எனவே இன்றையதினம் நான்கு பாடல்களைப் பார்த்துவிடலாம்.  இன்றைய பாடல்களைப் பார்ப்பதற்கு முன்...
வியக்கத்தக்கதொரு நிகழ்வினைப் பற்றி இவ்விடம் பேச விழைகின்றேன். கடந்த 2009ம் ஆண்டு நவம்பர்த் திங்களின்போது நடைபெற்ற எங்கள் திருமண சமயத்தில், பெருமழை எதிர்பார்க்கப் பட்டது. பெருமழையின் காரணமாக பல நண்பர்களுக்கு அழைப்பிதழை நேரில் சென்று வழங்க இயலாது போயிற்று. எனக்கு விழாக்களை திருமண மண்டபத்தில் நடத்துவதில் விருப்பமில்லாது போனதால், வீட்டு வாசலிலேயே மணமேடை அமைத்து சடங்குகளை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தோம். திருமணத்திற்கு முந்தைய நாள் பெண் அழைப்பு. அதற்கு முந்தைய நாளும் பெருமழை.. திருமணநாளன்று இப்படி மழை பெய்தால், திருமணச்சடங்கை நடத்துவதும், வருகைதருவோருக்கு உணவு பரிமாறுவதும் கடினமாகிவிடுமே என அஞ்சியிருந்தோம்.. ஆனால் பெண் அழைப்பு தினத்தன்று மழை நின்றது. திருமணத்தன்றும் மழையில்லை.. திருமணம் முடிந்த அடுத்த நாள் மழை பெய்தது.. இதே போல் கடந்த அக்டோபர்த் திங்களில் மனையாளுக்கு வளைகாப்பு நடத்தினோம். வளைகாப்புக்கு முந்தைய இரவும் பெருமழை.. ஆனால் வளைகாப்பன்று மழை இல்லை.. வருணபகவான் காத்தருளினார். நேற்றையதினமும் இதே நிகழ்வுதான். மாமனாரின் இல்லமோ நகரத்திலிருந்து சற்று தொலைவு.. பலரையும் அழைத்திருக்கின்றோம். மகிழ்வுந்தில் வருவோர்கள் எளிதாக வந்து விடலாம். ஆனால் இருசக்கர வாகனத்தில் வருவோரின் கதி.. மனைக்கருகே இருந்த காலி இடத்தில் பந்தல் போட ஏற்பாடு செய்திருந்தோம். பந்தல் போடுபவர் மணி பதினொன்று ஆன பின்னரும் வந்த பாடில்லை.. மழை பெய்து கொண்டே இருந்தது.. அலைபேசியில் அழைத்து "மழை பெய்தாலும் பரவாயில்லை. பந்தல் போடுங்கள்" என்று சொன்ன பின்னர் வந்து மழையில் நனைந்து கொண்டே பந்தல் அமைத்துக் கொடுத்தார். சரியாக ஒரு மணிக்கு மழை நின்றது. விழாவுக்கு வந்தவர்களும் எந்த சிரமமும் இன்றி வந்து சேர்ந்தனர். விழாவும் நல்லபடியாக நடந்தது.. இம்மூன்று நிகழ்வுகளிலும் அன்னையின் திருவருளால், மழைத்தேவன் தன் திருவிளையாடல்களை சற்றே நிறுத்தி வைத்து அருள்புரிந்தான். எனவே அன்னைக்கு நன்றி... மழைத்தேவனுக்கு நன்றி... தொடர்ந்து பாடல்களைப் பார்ப்போம்.
பாடல் அறுபத்தைந்து..
ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே

விளக்கம் : மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட பெருவெளியும் காணும்படி மன்மதனின் தேகத்தை தகனம் செய்த தவத்திற்சிறந்த சிவபெருமானுக்கு, நீண்ட வலிய திருக்கரங்கள் பன்னிரண்டும், செம்மையான திருமுகங்கள் ஆறும் கொண்ட சிறந்த அறிவுடைய திருமகனான முருகன் மகனாகப் பிறக்கும் சக்தியைக் கொடுத்தது அபிராமி அன்னையே உன் வல்லமை அல்லவா?
காமதேவன் மன்மதனை ஐயன் தம் நெற்றிக்கண் திறந்தெரித்த திறமும், அத்திறம் அம்மையிடம் தோற்றுப் போன விதமும் மீண்டும் மீண்டும் அபிராமிப் பட்டரால் பாடப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வாழும் கலை ஆழ்நிலைத் தியானப் பயிற்சி முகாமுக்குச் சென்றிருந்தபோது குருதேவர் கூறிய சில செய்திகள் இதற்குப் பொருந்துகின்றன. நம் உடலின் சக்திச் சக்கரங்களைப் பற்றி விளக்கும் போது சொன்ன சில செய்திகளின் சாராம்சம் இது.. ஒவ்வொரு சக்கரத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை விளக்கிய அவர் ஒன்றிருந்தால் மற்றொன்றில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். காமம் இருக்கும் இடத்தில் ஆக்க சக்தி இருப்பதில்லை.. ஆக்க சக்தி இருக்குமிடத்தில் காமம் இருப்பதில்லை. இது ஸ்வாதிஷ்டனா சக்கரத்தின் இருபக்கங்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
காமனின் தேகத்தை அழித்த ஐயனால் ஓர் அறிவுள்ள, அழகிய திருக்குமரனைப் பெற்றெடுக்க இயன்றது. காமனை அழித்த அதே நெற்றி நெருப்பே குமரன் பிறப்புக்கும் காரணமாய் அமைந்தது.. நம் மனத்தில் இருக்கும் காம இச்சைகளை, மன்மதக் கணைகளை நாம் விலக்கும் போது அவ்விடத்தில், அறிவு ஒளிபெற்ற கந்தன் பிறக்கின்றான். காமன் இடத்தைக் கந்தன் நிரப்புகின்றான்.. காமம் முற்றிலும் குடிகொண்டிருந்தால், கந்தன் பிறப்பதில்லை. இப்பாடலின் மூலம் நாம் பெறவேண்டிய கருத்து இதுதான். உலகம் மன்மதனுக்கு அடிபணிகின்றது.. எனவேதான் யாராலும் வெல்லப்படாத தன்மை அவனுக்குக் கிட்டியது... ஆயினும் அவன் ஈசனிடம் தோற்றான். தோற்றவன் அம்மை மூலம் அவ்வீசனையும் வென்றான்.. அது அம்மையின் சக்தி...
"ககனமும் வானும் புவனமும் காண " மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட உலகமும் காணும்படி...
ககனம் எனும் பதத்தைப் பற்றி கடந்த பதிவில் நாம் விளக்கவில்லை.. இப்பதமானது சித்தர்களின் உலகத்தைக் குறிக்கின்றது. அவர்கள் மண்ணுலகிலும் இருப்பதில்லை.. விண்ணுலகிலும் இருப்பதில்லை. இடையில் அவர்களுக்கென்று ஒரு உலகம் உள்ளது. மண்ணுலகில் வாழ்வோருக்கும், விண்ணுலகின் அமரர்களுக்கும் ஒரு பாலமாக இவர்கள் செயல்படுகின்றனர்.
ஆகவே அனைவரும், அண்டசராசரத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் காணும்படி... " விற்காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு " கரும்பினாலான வில்லையுடைய காமனின் உடலை அன்று தனது நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த, தவத்திற்சிறந்த ஈசனுக்கு... "முந்நான்கு" "தடக்கையும்" நீண்ட வலிய பன்னிரு திருக்கரங்களும், "இருமூன்று" "செம்முகனும்" ஆறு அழகிய சிவந்த திருமுகங்களும், "எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது " கொண்ட பெருமைகளையுடைய அறிவில் முதிர்ந்த சிறந்த மகனான முருகன் மகனாகப் பிறந்தது "வல்லி நீ செய்த வல்லபமே" "அன்றோ" அபிராமியே... அன்னையே.... உனது வல்லமையால் அன்றோ....?
அழகிய திருக்குமரன் ஈசனுக்கு மகனாகப் பிறந்தது அம்மையின் வல்லமை என்பதை அழகுற விளக்கும் பாடல் இது...
பாடல் அறுபத்தாறு
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே
விளக்கம் : பசும்பொன்னாலான மேருமலையை வில்லாக வளைத்த ஈசனுடன் வீற்றிருக்கும் அபிராமி அன்னையே... நான் அருஞ்செயல்கள் செய்யும் வல்லமை ஒன்றும் இல்லாதாவன். மிகவும் சிறியவன். நின் மலர்த்திருவடிகளை விடுத்து வேறொன்றின் மீதும் பற்றில்லாதவன். தீவினைகள் புரிபவனாகிய நான் பாடுகின்ற பாடல்கள் குற்றமுடையதாக இருப்பினும் அவை உன் திருநாமங்களைப் போற்றும் துதிப் பாடல்கள் என நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்..
அபிராமி அந்தாதி எனும் களஞ்சியத்தை நமக்களித்த அபிராமிப் பட்டர் தம் பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிடுவது நமது அகங்காரத்தின் மீது சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போன்றுள்ளது. பாடல்கள் பாடி அம்மையை நேரில் வரச்செய்யும் வல்லமை படைத்த அவர் தான் வல்லமை ஒன்றும் அறிந்ததே இல்லை என்கிறார். பக்தியிற் சிறந்த பெரியார் (இவ்விடத்துப் பெரியவர் எனப் பொருள் கொள்க...), தம்மை சிறியவன் என்கிறார்.. ஆயினும் அன்னை மேல் கொண்ட பக்தியை உரைக்கையில் மட்டும் உண்மையை உரைக்கின்றார். உனது திருப்பாதங்களை விடுத்து வேறெந்த பொருள்மீதும் பற்றில்லை என்கிறார். தன் பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக்குறிப்பிட்டவர் அவை அன்னையைத் துதி செய்யும் தோத்திரப் பாடல்கள் எனக் குறிப்பிடுகின்றார். "பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் " பசும்பொன்னாலான மேரு மலையை வில்லாக வளைத்த ஈசனோடு வீற்றிருக்கும் அபிராமி அன்னையே.. "வல்லபம் ஒன்றறியேன் " அருஞ்செயல்கள் புரியும் வல்லமைகள் ஒன்றும் அறியாதவன். "சிறியேன்" சிறியவன்." நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் " செம்மையான உனது மலரடிகளை விடுத்து வேறெந்த பற்றுமில்லாதவன். "வினையேன்" தீவினைகள் பல புரிந்தவனாகிய நான் "தொடுத்த சொல்" தொடுத்துத் தரும் இப்பாமாலை.."அவமாயினும்" குற்றம் நிறைந்ததாயினும், " நின் திருநாமங்கள் தோத்திரமே" அவை உனது திருப்பெயர்களை துதிசெய்யும் பாடல்களே... எனவே நீ அவற்றை வெறுக்காது, தள்ளாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாடல் அறுபத்து ஏழு
தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே
விளக்கம் : அபிராமி அன்னையே.. உன்னைத் துதித்து, தொழுது, மின்னலையொத்த உன் திருமேனித் தோற்றத்தை ஒரு மாத்திரைப் பொழுதாவது தம் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள், தங்களின் வளமை, குலம், கோத்திரம், கல்வி, குணம் எல்லாவற்றிலும் குறைவுற்று, உலகெங்கிலும், தினந்தோறும் வீடுவீடாக சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்பார்கள்.
அன்னையின் அன்பர்களின் பெருமையை ஏற்றியுரைத்த அபிராமிப் பட்டர் அன்னையை மனத்தில் வையாதவர் நிலை எங்ஙனம் ஆகும் என இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.
"தோத்திரம் செய்து " அபிராமி அன்னையே உன்னைத் துதித்து "தொழுது" வணங்கி.. "மின் போலும் நின் தோற்றம் " மின்னலையொத்த நின் திருமேனித் தோற்றத்தை "ஒரு மாத்திரைப் போதும் " ஒரு மாத்திரைப் பொழுதாவது .. "மனத்தில் வையாதவர் " மனத்தில் வைத்து தியானிக்காதவர் "வண்மை" தங்களது வளமை, "குலம்" குலப் பெருமை "கோத்திரம் " கோத்திரப் பெருமை "கல்வி" கல்வியறிவு, "குணம்" நற்குணங்கள் இவை எல்லாவற்றிலும் "குன்றி" குறைவுற்று "நாளும்" தினந்தோறும் "குடில்கள் தொறும்" வீடுகள் தோறும், "பாத்திரம் கொண்டு" பிச்சைப் பாத்திரமான திருவோட்டைக் கொண்டு "பலிக்கு உழலா நிற்பர் " தேவைகளுக்காக ஏந்தி நிற்பார்கள். காத்து நிற்பார்கள்.. பிச்சைக்காக காத்திருப்பார்கள்.. “பார் எங்குமே” உலகெங்கிலுமே....
பாடல் அறுபத்தெட்டு
பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே

விளக்கம் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும், அவற்றின் தன்மைகளான, மணம், சுவை, ஒளி, தொடு உணர்வு, ஒலி இவையெல்லாம் ஒன்றுபடச் சேரும் சிறிய திருவடிகளையுடைய தலைவியான அழகி சிவகாமியின் திருவடியைச் சார்ந்திருக்கும் தவத்தினை உடையவர்களிடத்து இல்லாத செல்வம் இல்லை...
கடந்த பாடலில் அன்னையை நினையாதோர் நிலையையும், இப்பாடலில் அன்னையின் திருவடிகளைச் சார்ந்தோர் நிலையையும் அபிராமிப் பட்டர் விளக்கியுள்ளார். அன்னை சிவகாமியானவள் அழகு நிறைந்தவள். சிறிய பாதங்களையுடவள்.. ஆனால் அவளது சிறிய பாதங்கள் ஐம்பூதங்களையும், அவைகளின் தன்மைகளையும் ஒன்று சேரப் பெற்றவை.. அவளது திருப்பாதங்களைச் சேருவோரிடம் எல்லா செல்வங்களும் வந்து சேரும்.. அன்னையின் திருவடி மட்டுமே போதும். வேறெந்த செல்வங்கள் நமக்கு வேண்டும்?
“பாரும்” நிலமும், “புனலும்” நீரும், “கனலும்” நெருப்பும் “வெங்காலும்” காற்றும், “படர் விசும்பும்” எல்லாவிடத்தும் படர்ந்த ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களும் “ஊரும் “ அவற்றின் தன்மைகளாக நிற்கும் “முருகு” மணம், “சுவை” சுவை “ஒளி” ஒளி “ஊறு” தொடு உணர்வு “ஒலி” ஒலி “ ஒன்றுபடச்சேரும்” இவையெல்லாம் ஒன்று பட்டுச் சேரும் “தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார்” சிறிய திருவடிகளைப் படைத்த உலகத்தின் தலைவி, அழகிய சிவகாமி அன்னையின் திருவடிகளைச் சார்ந்திருக்கும் தவத்தை உடையவர்கள், “படையாத தனம் இல்லையே” இல்லாத செல்வம்  ஏதுமில்லை.. அதாவது எல்லா செல்வங்களும் அவர்களிடத்திருக்கும். அவர்கள் செல்வம் நிறைந்தோர்களாக, தனம் நிறைந்தோர்களாக இருப்பார்கள்.
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

கருத்துகள் இல்லை: