திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 93&94

அடுத்த பாடலுக்கு முன்னர்....
அன்பர்களே... இன்றோடு சேர்த்து இன்னும் நான்கு நாட்களில் அபிராமி அந்தாதி உரைகளும் விளக்கங்களும் பூர்த்தியாகிவிடும்... ஏற்கெனவே சொன்னது போல் நண்பர் பிரசாத் வேணு கோபால் அவர்கள் இதனைத் தொகுத்து மின் நூலாக வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார். இந்த உரைகளுடன் அன்பர்களின் விளக்கங்களையும் இணைத்து வெளியிட வேண்டும் என்பது அடியேனுடைய ஆவல். எனவே அன்பர்கள் அபிராமி அந்தாதி பற்றிய தங்களது மேலான கருத்துக்களை இந்த இழையில் பதிவு செய்யலாம்.. அல்லது எமக்குத் தனிமடலில் அனுப்பலாம். அல்லது பிரசாத் வேணுகோபால் அவர்களுக்குத் தனிமடலில் அனுப்பலாம். (அவரது மின்னஞ்சல் முகவரி prasathtf@gmail.com)  குழும நிர்வாகிகள் குழுமத்தின் சார்பில் வாழ்த்துரைகள் வழங்கி இம்முயற்சிக்கு ஆதரவளிக்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன். மேலும் தனிமடலில் இதனைப் பெறும் அன்பர்களும், பெரியோர்களும் இம்முயற்சி வெற்றிபெற அன்னையை வேண்டிக் கொள்ளுங்கள்..தங்களின் கருத்துரைகளையும் எதிர்பார்க்கின்றோம்.. இனி இன்றைய பாடல்களைப் பார்க்கலாம்...
பாடல் தொண்ணூற்று மூன்று
நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே

விளக்கம் : இந்த அகிலத்தையெல்லாம் பெற்றெடுத்த அன்னை அபிராமியின் திருமுலைகள் மொட்டினைப் போன்றுள்ளதென்றும் அவளது திருக்கண்கள் மான்களைப் போன்றுள்ளதென்றும் புகழ்வது நகைப்புக்குரிய செயல்.. எல்லையில்லாத வடிவையுடைய அபிராமியை  மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகள் என்று விளிப்பதும் வம்பே. இவளது தகைமைகளை நாம் நாடிச் சென்று அறிய விரும்புவதும் மிகையான செயல்களே...
குருடர்கள் ஆனையைத் தடவிக் கண்ட கதைதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றது... தான் அன்னையைத் துதித்துப் பாடிய பாடல்கள், அவளை வர்ணித்த வர்ணனைகள் இவையெல்லாம் நகைப்புக்குரியன என்றும், தகாதன என்றும் அவள் குணங்களை அறிய முற்படுவது மானுடரின் சக்திக்கு மிகையான செயல் என்றும் குறிப்பிடுவது நம்மை விழியுயர்த்த வைக்கின்றது.. ஒரு கோயிலைக் கட்டி அதனுள் ஒரு விக்கிரகத்தை வைத்து அதுதான் அன்னை அபிராமி என்று வழிபடுவதும் கூட ஒருவகையில் நகைப்புக்குரிய செயல்தான். ஏனெனில் அவள் முடிவற்ற வடிவுடையவள்.. அப்படியாயின் கோவிலகள் எதற்கு?? வழிபாட்டு முறைகள் எதற்கு??? இவை அன்னையைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்தவும், அவளே நம்மைப் படைத்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவும்தான்... ஆலயங்கள் மனித மனங்களை நெறிப்படுத்தவும், மனித சிந்தனைகளை ஒரே நேர்க்கோட்டில் கொணரவுமே கட்டப்பட்டன... ஆனால் அன்னையானவளோ இவற்றையெல்லாம் தாண்டி நிற்பவள்.. இருக்கும் இடத்திலிருந்து "அபிராமி" என்றழைத்தால், ஓடிவந்து கருணை செய்யும் அன்னை எளியவள்... இவள் எளியவள் என்றெண்ணி இவளை நான் அறிந்து கொண்டேன்.. என்று பெருமை பேசும் மூடருக்கு அவள் பெரியவள்.. அகிலமே அன்னையாக இருக்கையில் அங்கென்றும், இங்கென்றும் அவளைத் தேடி, அவள் அழகை மற்றவற்றோடு ஒப்பிட்டு வர்ணித்தல் அபிராமிப் பட்டருக்கு நகைப்பை ஏற்படுத்துகின்றது... உலகைப் பெற்றெடுத்தவளை, இவள் மலையரசன் பெற்றெடுத்த மலைமகள் என விளிப்பது தகாத செயல்.. அது வம்புக்குரிய செயல் என்று பகர்கின்றார்.
பெரியோர் ஒருவரது உரையில் கேட்டது. இராமனைப் பற்றி அவர் உரைத்ததன் சாரத்தை இவ்விடத்துப் பதிவுசெய்கின்றேன்.. "எந்த இடத்தில் பெருமையும், எளிமையும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இறைவன்.. இறைவன் பெருமை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அதே சமயம் நாம் அழைத்தால் வந்து அருள் செய்யும் எளியவனாகவும் இருக்கின்றான்.. உலகத்து வழக்கில் பெருமை இருக்குமிடத்தில் எளிமை இல்லை... எளிமை இருக்கும் இடத்தில் பெருமை இல்லை... இந்த தேசத்து உயர் பதவியில் இருப்பவர் பெருமை பெற்றவர்.. ஆனால் அவரை நம்மால் அவ்வளவு எளிதில் சந்திக்க இயலுமா? இயலாது. எனவே பெருமை இருக்கும் இடத்தில் எளிமை இல்லை... தெருவோரம் குப்பை நிறைந்திருக்கின்றது. எளிதில் நெருங்கி விட எளிமையாக இருக்கின்றது என்று அதனைப் பெருமை கொண்டாட இயலுமா? எனவே எளிமை இருக்குமிடத்தில் பெருமை இல்லை... ஆனால் இறைவனின் திருவடிகளோ மிகப் பெருமை வாய்ந்தது... அதே சமயம் நமக்கருள் செய்யும் வகையில் அத்தனை எளிமையானது... " இது அந்த பெரியவர் இராமனின் பெருமையையும் எளிமையையும் பற்றி உரைத்தது... அதையே இவ்விடத்து நினைவு கூர்கின்றேன்... அன்னையானவளை நாம் எளிமையான சொற்கள் கொண்டு வர்ணணை செய்கின்றோம்.. அது நகைப்புக்குரிய செயல்...ஆனால் அதையே ஏன் பட்டரும் செய்தார்... ? அன்னை அத்தனை எளிமையானவளாக அவருக்குக் காட்சியளித்ததால்தான். அவள் மலையரசனுக்கு மகளாகப் பிறந்தது தன் எளிமையை உலகிற்கு உணர்த்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல...
"இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு" இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்த தலைவிக்கு.. அபிராமிக்கு.... "முகையே முகிழ் முலை " அரும்பும் மொட்டினைப் போன்ற முலைகள் உள்ளன என்பதும்... "மானே முதுகண் " மருளும் மானைப் போன்ற விழிகள் உள்ளன என்பதும் "நகையே இது" நகைப்புக்குரிய செயலே இது.. "முடிவுயில் " எல்லையில்லாத வடிவுடையவளை... எங்கள் அபிராமியை..."மலைமகள்" "பிறவியும்" "என்பதும்" "அந்த வகையே" "வம்பே" மலையரசன் பெற்றெடுத்த மகளல்லவா என்று மலைமகள் என்று விளிப்பதும் அதைப் போன்ற நகைப்புரிய செயலே... மேலும் அது வம்புக்குரிய செயல்.... ஏனெனில் இந்த அகிலத்தைப் பெற்றெடுத்தவளும் அவளே.... அவளை இன்னொரு மானுடனுக்குப் பிறந்தவள் என்பது வம்புக்குரிய செயலல்லவா?? "நாம்" "இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே" "மிகையே" எளியோர்களாகிய நாம் இவளது அருங்குணங்களையும், பெருமைகளையும் நாடி விரும்பி அறிந்து கொள்ள முயல்வதும் மிகையான செயலே... ஏனெனில் நம்மால் அது இயலாது.. இவள் இத்தன்மையள் என்றுரைத்தால், இன்னோரிடத்து அவள் வேறு தன்மையளாய் நிற்கின்றாள்... ஓ அதுவே அவளது தன்மை என அவ்வழி சென்றால், பிறிதோரிடத்தில் அவள் இன்னொரு தன்மையளாய் நிற்கின்றாள்.. ஆக அவளை,.. அவளது தன்மைகளை வரையறுக்க இயலாது.. அவளை நம்மால் அறிந்து கொள்ளவும் இயலாது...

பாடல் தொண்ணூற்று நான்கு
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே

விளக்கம் : அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் கண்களெல்லாம் கண்ணீர் மல்கி, உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, சுய அறிவினை இழந்து, தேனுண்ட வண்டைப் போல் களித்து, சொற்கள் தடுமாறி இப்படிச் சொல்லப்பட்ட செயல்கள் எல்லாம் கொண்ட பித்தரைப் போல் ஆவார்கள் என்றால் அன்னை அபிராமியை வழிபடும் சமயம் நல்லதே....
அன்னையை முழுமனதோடு எண்ணி வழிபடும் பக்தர்கள் ஆலயம் சென்று அவளைக் காணும்போது இது போன்ற செயல்களைச் செய்வது இயற்கையானதுதான்... குலசேகரன் பட்டினத்தில் கோயில் கொண்டுள்ள முத்தாரம்மனைக் காணச் செல்லும் போதெல்லாம் நானும் இது போன்ற செய்கைகளுக்குள்ளாகின்றேன்.. காரணம் புரிவதில்லை.. அதற்குரிய காரணம் அன்னை மேல் நாம் கொண்டுள்ள அதீத அன்பே... சொல்லொண்ணா ஆனந்தம் அதிகமாகி அவளையே நேரில் கண்டது போன்ற உணர்வு மேலோங்கும்போது விழி தானே நீரைச் சொரிகின்றது... மெய்யோ மயிர்சிலிர்த்து ஆடுகின்றது... சுய அறிவு அற்றுப்போகின்றது... தேனுண்ட வண்டைப் போல் மனம் ஆனந்த நடனமாடுகின்றது... இவற்றையெல்லாம் காண்போர் இவனென்ன பைத்தியக்காரனைப் போல் செயல்படுகின்றானே என இகழ்ந்துரைக்கின்றனர். அபிராமிப் பட்டரை அப்படித்தான் பித்தனென்றனர்.. ஆனால் பட்டரோ இப்பித்த நிலையை அபிராமி சமயம் எனக்குத் தருமானால் அது நல்ல சமயமே... என்றுரைக்கின்றார்...
கிறித்தவ நண்பர்களும் இதைப் படித்து வருகின்றீர்கள்... இந்துக்களின் ஆலயங்களில் தன்னை மறந்து ஆடும் பக்தர்களைப் பேய் பிடித்து ஆடுகின்றான் எனக் கிண்டல் செய்கின்றார்கள்... ஆனால் இதையேதான் "பரிசுத்த ஆவி" நிறைந்து ஆடுவதாக அவர்களும் அனுபவிக்கின்றனர்.. ஆக ஆழ்ந்த இறையனுபவம் இதைப் போன்ற செயல்களைத் தருவதாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது தன்னை மறந்த ஆனந்த நிலை என்பது அனுபவிக்காதோருக்குப் புரியாது...
"விரும்பித் தொழும் அடியார்" அன்னை அபிராமியை விரும்பித் தொழுகின்ற அடியவர்கள் "விழி நீர் மல்கி" கண்களில் கண்ணீர் வழிந்தோட "மெய் புளகம் அரும்பித்" உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து... (இதைத்தான் கிராமத்தில் "புல்லரிப்பது" என்பார்கள்). "ததும்பிய ஆனந்தம் ஆகி" ஆனந்தம் ததும்பி "அறிவு இழந்து" தங்கள் சுய அறிவினை இழந்து "கரும்பின் களித்து" தேனுண்ட வண்டினைப் போல் களித்து "மொழி தடுமாறி" சொற்கள் தடுமாறி "முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்" இவ்வாறு சொன்ன செய்கைகளை எல்லாம் செய்யும் பித்தர்கள் ஆவர் என்றால்.... உலகத்தோரின் பார்வையில் பைத்தியக்காரனைப் போல் ஆவார்கள் என்றால் "அபிராமி சமயம் நன்றே" அபிராமியை வழிபடுவதற்கு வழிகாட்டும் இந்த அபிராமியின் சமயம் மிகவும் நல்லதே.. உயர்ந்ததே....
இந்த பாடலைப் பாடும்போதே அந்தப் பரவச நிலை ஏற்படுகின்றது... கண்கள் மூடி அபிராமியை மட்டுமே மனத்தில் எண்ணி அவள் திருவுருவை மனத்தில் நிறுத்தி ஒரு நொடி இருந்தால் போதும் .. நம் கண்கள் பனிக்கும்... இதயம் இனிக்கும் (கலைஞரைக் காப்பியடித்துவிட்டேனோ?) 
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

கருத்துகள் இல்லை: