திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 63 & 64

பாடல் அறுபத்து மூன்று
தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே

விளக்கம் : நற்கதிக்குச் செல்லவேண்டிய இடத்திற்கு நாம் தேறிச் சென்றடைவதற்குரிய வழியைக் காட்டுபவள் அன்னை அபிராமியே ஆகும். ஆறு சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் இவளே என்று அறிந்திருந்தும், வேறு சமயங்கள் உண்டு என்று கொண்டாடும் வீணர்களின் செயலானது ஒரு மலையை சிறு தடியினைக் கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலைப் போன்றதாகும்..
சமயச் சண்டைகள் அக்காலத்திலேயே மிகவும் பயங்கரமானதாக நடைபெற்றிருக்கின்றன.. பெரும்பாலும், சமண சமயத்திற்கும், சைவ சமயத்திற்கும் இடையேயான பூசல்கள், சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையேயான பூசல்கள் என சமயப் பூசல் தொடர்ந்து  கொண்டேயிருந்திருக்கின்றன... இந்து சமயத்தை நெறிப்படுத்திய ஆதி சங்கரர் ஆறு வகையான வழிமுறைகளை முறைப்படுத்தினார், அவை, சக்தியை முதன்மைப் படுத்தும் சாக்தம், சிவபெருமானை முதன்மைப் படுத்தும் சைவம், திருமாலை முதன்மைப் படுத்தும் வைணவம், கணபதியை முதன்மைப் படுத்தும் காணபத்யம், முருகனை முதன்மைப் படுத்தும் கௌமாரம், சூரியனை முதன்மைப் படுத்தும் சௌரம். அபிராமிப் பட்டர் இவ்வாறு சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் அன்னை அபிராமியே எனக் குறிப்பிடுகின்றார்.
"தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் " நற்கதிக்குச் சென்றடைவதற்கு, தேறுவதற்குரிய நெறிமுறைகளைத் தருபவள் அன்னை அபிராமியே.... "சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்" அவளால் நெறிப்படுத்தப் பட்ட ஆறு சமயங்களுக்குத் தலைவியாய் இவளே இருப்பதை அறிந்திருந்தும்... “வேறும் சமயம் உண்டு என்று” வேறு சமயங்கள் உண்டு.. அவையே உயர்ந்தது என்று ..”கொண்டாடிய வீணருக்கே..” கொண்டாடும் வீணர்களின் செயலானது... “குன்றில் கொட்டும் தறி குறிக்கும்” மலையை சிறு தடியைக் கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலுக்கு ஒப்பானதாகும்..
இன்றைக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரக்கூடிய மோசமான நிகழ்வு இதுதான்.. கல்லையும் மண்ணையும் கடவுளென்று வணங்காதீர்கள்.. எங்களிடம் வாருங்கள்.. உண்மையான கடவுளைக்காட்டுகிறேன் என்று பேசி மதமாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி பெரும்பாலும் நடந்து வருகின்றது.. அந்தக் காலத்திலேயும் இதைப் போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. அதைத்தான் அபிராமிப் பட்டர்.. எங்கள் அன்னை வழிப்படுத்திய சமயங்கள் ஆறு... அவை ஆறுக்கும் தலைவி இவளே... இதை விடுத்து வேறு சமயங்களைப் பரப்ப நினைக்கும் அறிவிலிகளே... உங்களால் அது முடியாது... உங்கள் செயல் முட்டாள்த்தனமானது.. மலையை சிறுதடியைக் கொண்டு தகர்க்க நினைக்கும் செயலைப் போன்றது.. எனவே அம்முட்டாள்த்தனத்தை விட்டொழியுங்கள்.. என்கிறார்...

பாடல் அறுபத்து நான்கு
வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே
விளக்கம் : வீணாகப் பலிகளை வாங்கும் மற்ற தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு செய்ய மாட்டேன்.. உன்னிடம் மட்டுமே அன்பு செய்வேன். உன்னைப் புகழும் புகழ்ச்சியைத் தவிர வேறு யாரையும் புகழ மாட்டேன்.. மண்ணிலும், விண்ணிலும், நான்கு திசைகளிலும், எல்லாவிடத்திலும் உனது திருமேனி பிரகாசத்தையன்றி வேறெதுவும் பார்க்க மாட்டேன்..
கடந்த பாடலில் வேறு சமயங்கள் உயர்ந்தவை எனப்பேசும் வீணர்களின் செயலைப் பற்றி விமர்சித்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், மற்ற தெய்வங்களின் செயல்களைப் பற்றிப் பேசுகிறார்.. தேவையான நற்பலன்களை அளிக்க இயலாத தெய்வத்திற்கு செய்யப்படும் பூசனைகள், பலிகள் அனைத்தும் வீணே... அதைத்தான் வீணே பலிகவர் தெய்வம் எனக் குறிப்பிடுகின்றார்.
“வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று “ தனக்கு பலி கொடுப்பவனின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் வீணாக பலிகளை வாங்கும் சிறு தெய்வங்களிடம் சென்று “மிக்க அன்பு பூணேன் “ அவர்கள் மேல் அன்பு பூண மாட்டேன்.. எனக்குத் தேவையானவற்றைத் தருவதற்குரிய சக்தியில்லாத வேறு தெய்வங்களிடத்து நான் ஏன் அன்பு பூணவேண்டும். நான் அதைச் செய்ய மாட்டேன்.. ஏனெனில் “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் “ நான் உன்மேல் அன்பு பூண்டு கொண்டேன்.. எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் அன்பு அன்னையே... அபிராமியே... உன்மேல் மட்டுமே அன்பு பூண்டிருக்கின்றேன்.. “நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும்” எப்போதும் உன்னைப் புகழ்வதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டேன்.. வேறு யாரையும் புகழ மாட்டேன்..  “திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே”  மண்ணுலகிலும் சரி..விண்ணுலகிலும் சரி.. நான்கு திசைகளிலும் சரி... எல்லாவிடத்திலும் சரி. உனது திருமேனிப் பிரகாசத்தையன்றி வேறெதுவும் காண மாட்டேன்... “எங்கெங்கு நோக்கினும் சக்தியடா” எனும் முண்டாசுக் கவிஞனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன... அன்னையின் திருமேனிப் பிரகாசமே எல்லாவிடத்திலும் தனக்குத் தென்படுவதாக உரைக்கும் அபிராமிப் பட்டரின் இப்பாடல் நம் பக்தியின் பலத்தை அதிகரிக்கும்... பாடிப் பாருங்கள். பக்தியில் இன்புறுங்கள்...
மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

கருத்துகள் இல்லை: