திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 83&84

பாடல் எண்பத்து மூன்று
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே

விளக்கம் : தேன் சொரியும் புது மலர்களைக் கொண்டு மணம் வீசும் உன் திருவடித்தாமரைகளை இரவும் பகலும் வணங்கும் வலிமையுடையோர், அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக்கூடிய இந்திர பதவியையும், ஐராவதம் எனும் வெண்ணிற யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகு வச்சிராயுதத்தையும், கற்பக வனத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்..
அன்னையின் திருவடியை இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையோர் எனக்குறிப்பிடுவது அது அத்தனை எளிய காரியமல்ல என்பதைக் காட்டுகின்றது. பாச பந்தங்கள் அறுத்து அன்னையை மட்டுமே எந்நேரமும் தொழுது கொண்டிருக்கும் வல்லமை அவள் அடியார்களுக்கு அவள் அருளால் மட்டுமே கிட்டும். அது ஒரு தெய்வீக அழைப்பு.. அவ்வழைப்பை அன்னை அளித்தால் மானுடன் ஒருவன் அவள் திருவடிகளை எந்நேரமும் தொழும் பக்தன் ஆகின்றான். அவன் எந்தவொரு சுகத்திற்காகவும் யாரிடத்தும் செல்லவோ வேண்டுவதோ வேண்டியதில்லை.. அவனே அனைத்தும் உடையவனாகின்றான். இந்திரபதவி என்பது கிடைத்தற்கரிய வரம். இந்திர பதவியில் இருக்கும் இந்திரன் அமரர்கள் அனைவருக்கும் தலைவனாகின்றான். அது ஒரு பதவி மட்டுமே.. அப்பதவியில் அவனது பதவிக்காலம் முடிந்தவுடன் இன்னொருவன் இந்திரன் ஆகின்றான். இப்படி அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அனைத்து அமரர்களும் இந்திரனது கட்டுப்பாட்டில் வருவதால், இயற்கையின் செயல்கள் அவனது கட்டுப்பாட்டில் வருகின்றன. அத்தகைய பதவி அன்னையை அல்லும் பகலும் இறைஞ்சுவோரிடத்துள்ளது எனப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். இதன் மறைபொருள் என்னவெனில், அன்னையின் அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கிட்டும். இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் அவர்தம்மை நெருங்காது என்பதாகும்.
"விரவும் புது மலர் இட்டு " தேன் சொரியும் புத்தம் புது மலர்களை இட்டு "நின் பாத விரைக்கமலம்" மணம் வீசும் உனது திருவடித்தாமரைகளை "இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் " இரவிலும் பகலிலும் வணங்கிடும் வலிமை படைத்தோர் "இமையோர் எவரும் பரவும் பதமும்  " அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக் கூடிய இந்திர பதவியையும், "அயிராவதமும் " அவ்விந்திரனுக்குச் சொந்தமான ஐராவதம் எனும் வெள்ளையானையையும், "பகீரதியும்" ஆகாய கங்கையையும், "உரவும் குலிசமும் " வலிமை மிக்க வஜ்ராயுதத்தையும், (வஜ்ராயுதம் என்பதற்கு அழகிய தமிழாக்கம் குலிசம்), "கற்பகக் காவும் " நினைத்தன நினைத்த பொழுதில் கிட்டும் கற்பக வனத்தையும் "உடையவரே" கொண்டவர்களாக இருப்பார்கள்... அவர்கள் என்றும் யாரிடத்தும் சென்று எதையும் இரங்கிப் பெறவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அனைத்தும் அவர்தம் உடைமையாக இருக்கின்றது... இதுவே அன்னையின் அன்பர்களுக்குக் கிட்டும் பெருவரம். ஆயினும் அவர்கள் இதையெல்லாம் மேலாக எண்ணுபவர்களா? ஒருபோதும் இல்லை... அவர்தமக்கு அன்னையின் திருவடிகளை விடுத்து வேறு எந்த செல்வமும் பெரிதல்ல...

பாடல் எண்பத்து நான்கு
உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

விளக்கம் :  உலகத்தோரே.... அனைத்தையும் உடையவளும், அசையும் செம்மையான பட்டாடை அணிந்தவளும், ஒளிரும் நிலவைனையணிந்த செம்மையான சடையைக் கொண்டவளும், வஞ்சகர்களின் நெஞ்சத்தில் தங்காதவளும், வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளும், எங்கள் சிவபெருமானின் இடப்பாகத்தமர்ந்தவளும், இவ்வுலகில் இனிமேல் என்னைப் பிறக்காதிருக்கச் செய்தவளுமாகிய அன்னை அபிராமியை நீங்களும் மீண்டும் பிறவாதிருக்கும்படி பார்த்திடுங்கள். வணங்கிடுங்கள்.
அழகிய வர்ணனைப் பாடல் இது... பட்டரின் மொழி அழகிய விளையாட்டை ஆடியிருக்கின்றது.. தான் மீண்டும் பிறப்பதில்லை என்பது அபிராமிப்பட்டரின் அழுத்தமான நம்பிக்கை. உலகின் மக்களுக்கு அறிவுரை தருகின்றார். மீண்டும் பிறவாதிருக்கும் நிலை வேண்டுமெனில் எங்கள் அபிராமியைக் காணுங்கள். அவள் திருவுருவைத் தியானியுங்கள். அவளை வணங்குங்கள். அவளே உங்களுக்குப் பிறவாவரம் அருள்வாள்.
"உடையாளை " அனைத்தையும் உடையவளை..."ஒல்கு செம்பட்டுடையாளை" அசையும் செம்மையான பட்டுடை அணிந்தவளை... "ஒளிர்மதி செஞ்சடையாளை" ஒளிரும் நிலவினை அணிந்த செம்மையான சடையை உடையவளை.. "வஞ்சகர் நெஞ்சு அடையாளை" வஞ்சகரது நெஞ்சத்தில் தங்காதவளை... "தயங்கு நுண்ணூல் இடையாளை " வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளை... "எங்கள் பெம்மான் இடையாளை" எங்கள் சிவபெருமானது இடப்பாகத்து அமர்ந்தவளை... "இங்கு என்னை இனிப் படையாளை" இவ்வுலகத்தில் இனிமேல் என்னைப் படைக்காதவளை.. என் பிறவிப் பிணியை முடித்தவளை... "உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே" உங்களையும் மீண்டும் படைக்காதபடிக்கு ... நீங்கள் மீண்டும் பிறவாத படிக்கு... பாருங்கள்.. தியானியுங்கள்.. வணங்குங்கள்...
பிறவிப் பிணியை அறுக்கும் சக்தி படைத்தவள் பிறப்பைக் கொடுத்த ஆதிபராசக்தியே... அவளையே எண்ணித் தியானித்திருக்கும் போது நம் பிறவிப் பிணியை அவள் நீக்குகின்றாள்.  தமிழ்ப்பாக்கள் புனைய விரும்புவோர் விரும்பிப் படிக்க வேண்டிய பாடல் இது. தமிழ்ச் சொற்களை எத்தனை அழகாகக் கையாண்டிருக்கின்றார் பட்டர்.  காணுங்கள்.. மீண்டும் ஒருமுறை ஓதி இன்புறுங்கள்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.  மீண்டும் சந்திப்போம். நன்றி......

கருத்துகள் இல்லை: