திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 49 & 50

பாடல் நாற்பத்தொன்பது



குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட


வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து


அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்


நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே



விளக்கம் : நரம்பைக் கொண்டு இசையை எழுப்பும் இசைக்கருவிகளின் இசையாய் நின்ற அபிராமி அன்னையே... இந்த உடலில் குடியிருக்கும் உயிரானது காலதேவன் கொடுத்த காலக்கெடு முடிந்தவுடன் அவன் அழைக்க வரும்போது அஞ்சி நடுங்கும்.. அவ்வமயம் நீ வளையல்கள் அணிந்த உனது அழகிய திருக்கரங்களை அசைத்து, அரம்பை முதலிய தேவமாதர்கள் சூழ வந்து நின்று அஞ்சாதே என்பாய்..

முன்னர் பலமுறை அன்னையே.. நான் மரிக்கும் தருவாயில் உன் கணவரோடு வந்து காட்சியளிப்பாய். திருமணக்கோலத்தில் வந்து காட்சிதருவாய்... என்னை அஞ்சாதே என்பாய் என்று பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அரம்பை முதலிய தேவமகளிரோடு வந்து காட்சியளிப்பாய்.. என்னை அஞ்சாதே என்பாய் என்கிறார்..



"நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே" நரம்பினால் ஆன இசைக்கருவிகளில் இசையாய் நின்ற எங்கள் அபிராமி அன்னையே... "குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி " உடம்பை அடிப்படையாகக் கொண்டு குடிபுகுந்த உயிர்... ஆன்மா... ஆன்மாவுக்கு என்றென்றும் அழிவில்லை... ஆன்மாவானது இறைவனோடு ஒன்றியிருக்கின்றது.. பின்னர் உலகத்தில் பிறப்பெடுத்து ஒரு உடம்பில் தங்கி பூலோக வாழ்வை அனுபவிக்கின்றது... அச்சமயம் உயிரானது உடம்போடு கொண்ட பந்தம் நெருக்கமாகிவிடுகின்றது. அவ்வமயம் உயிருக்குத் தெரிவதில்லை.. இது நமது நிரந்தரமான இடமல்லவென்று... எனவே நிரந்தரமற்ற இவ்வுடலைப் பேணுவதிலும், அவ்வுடலின் இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலுமே உயிரின் கவனம் செல்கிறது.. எனவேதான் மரணம் நேரும்போது அச்சம் மனத்தில் குடி கொள்கிறது. இதைத்தான் "வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும்" உடம்புக்கென்ற ஒரு காலக்கெடுவை காலதேவன் நிர்ணயித்துள்ளான்.. அந்த காலக்கெடு முடியும்போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவன் வந்து அழைத்துச் சென்று விடுகிறான். கோபம் நிறைந்த காலதேவன் தான் கொடுத்த வரம்பு நிறைவடையும்போது வந்து அழைக்கின்றான். அப்போதுதான் உயிரானது அஞ்சி மறுகுகிறது என்கிறார்... "அப்போது " அந்த சமயத்தில் "வளைக்கை அமைத்து" வளையல்களை அணிந்த உனது அழகிய திருக்கரத்தை அசைத்து... "அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து " அரம்பை முதலிய தேவ மகளிர் புடைசூழ வருவாய்.. வந்து "அஞ்சல் என்பாய்" அஞ்சாதே மகனே என்றிடுவாய்... மரணபயத்தை.. இசையாகிய நீயே போக்குவாய்... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்.



பாடல் ஐம்பது

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச


சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு


வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று


ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே



விளக்கம் : அன்னை அபிராமியானவள் உலக நாயகி, பிரம்மசக்தியாகத் திகழ்பவள், திருமாலின் சக்தியுமானவள், அழகிய திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள், சம்புவான சிவனின் சக்தி.. சங்கரனின் மனைவி.. அழகு நிறைந்தவள், கொடிய நச்சினை வாயில் கொண்ட பாம்பினைக் கொண்டிருப்பவள், பலவிதமான மாலைகளை அணிந்த மாலினி.. உலகை இரட்சிக்கும் வாராகி, திரிசூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், மாதங்க முனிவரின் மகளாக உதித்தவள் என்ற பலவிதமான புகழினைக் கொண்டவள்.. அவளது திருப்பாதங்களே நமக்கு என்றென்றும் அரண்.

அன்னையின் பல்வேறு திருநாமங்களைப் பாடும் இப்பாடல் மிகவும் அருமையானது.. மீண்டும் மீண்டும் பாடத்தோன்றுவது..

"நாயகி" உலகத்தின் நாயகியானவள்... "நான்முகி" நான்முகனான பிரம்மனின் சக்தியாகவிளங்குபவள்.. "நாராயணி" நாரணனின் சக்தியாக விளங்குபவள்.. (நாராயணனின் தங்கையானவள் என்றும் சொல்வார்கள்) "கை நளின பஞ்ச சாயகி.." நளினமான திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள்.. அவ்வைந்து மலரம்புகளைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கின்றோம்.."சாம்பவி" சம்புவான சிவபெருமானின் சக்தி... "சங்கரி.." சங்கரனின் மனைவி... "சாமளை.." அழகிய வடிவுடையவள்..."சாதி நச்சு வாயகி " கொடிய நச்சு நிறைந்த வாயையுடைய பாம்பினைக் கொண்டவள்.. பாம்பு ரதமேறும் பார்வதியானவள்.. "மாலினி .." பலவித மாலைகளை அணிந்தவள்.. "வாராகி" உலகைக் காக்கும் வராக உருவினள்,.. "சூலினி" திரிசூலமேந்தும் மாகாளி.."மாதங்கி" மாதங்க மாமுனிவர் செய்த தவத்தால் அவருக்கு மகளாகப் பிறந்தவள். " என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே" என்று பல்வேறு புகழ்ப்பெயர்களைக் கொண்ட எங்கள் அபிராமியன்னையின் திருப்பாதங்களே எங்களுக்கு அரண்.. பாதுகாவல்...

இந்த பாடலை கண்கள் மூடி ஒருமுறை பாடிப் பாருங்கள்.. அன்னையின் பல்வேறு திருவுருவங்கள் நம் கண்ணெதிரே தோன்றி வியப்பளிக்கும்..

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்..

கருத்துகள் இல்லை: