புதன், ஜனவரி 26, 2011

அய்யாவின் முற்பிறப்பும் அவதார நோக்கமும்

கடலுள் மறைந்த அய்யா மூன்றாவது நாள் திரும்பி வந்தார். புத்தம் புது
உடலோடு.. தன்னை அணைக்க வந்த அன்னையைத் தடுத்து "நான் உன் மகன் அல்லேன்.
கலியுகத்தை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன்" என்றுரைத்த
போது அதனை அன்னையார் நம்பவில்லை... எனவே தனது முற்பிறவியைப் பற்றிய
உண்மையை அய்யா அவர்கள் தன் தாயாருக்கு இயம்ப வேண்டியதாயிற்று.
அமரர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு சிவபெருமான் குரோணி என்னும்
அசுரனைப் படைத்தார். இவ்வசுரன் அனைத்துலகத்தையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான். வைகுண்டத்தை வெற்றி கொள்ள
குரோணி சென்றபோது கோபங்கொண்ட திருமால் குரோணியைக் கொன்றார். அவனது உடலை
ஆறு துண்டுகளாக வெட்டினார். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தின் சிறப்பை
உணர்த்துவதற்காக குரோணியின் உடல் ஒவ்வொரு அசுரனாகப் பிறந்தது.
சதிர்யுகம், நெடியுகம், கிருதயுகம், திரேதாயுகம், துவாபாரயுகம் என்னும்
ஐந்து யுகங்களிலும் அசுரனாகப் பிறந்தான். திருமால் பல்வேறு அவதாரங்களை
எடுத்து குரோணியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினார்.
ஆறாவது யுகமான கலியுகத்தில், குரோணி மாயையாக உடலற்றுப் பிறந்தான்.
அதன்படி மக்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தி அதன் மூலம்
அதர்மத்தை வளர்த்த கலிநீசன்தான் குரோணியின் ஆறாவது துண்டு.
கலிநீசனின் செய்கைகளைக் கண்காணிக்க சம்பூரண தேவன் என்பவனைத் திருமால்
பூலோகத்துக்குச் செல்லக் கட்டளையிட்டார். சம்பூரண தேவனுக்கு எமலோகத்தைச்
சேர்ந்த பரதேவதையின் மேல் காதல் இருந்தது. அவளுக்கு ஏற்கெனவே மணமாகி
இருகுழந்தைகள் இருந்தன. ஆனாலும் அவளும் சம்பூரண தேவன் மீது காதல்
வயப்பட்டாள்.
எனவே சம்பூரணதேவன் திருமாலிடம் தன் காதலியும் தன்னோடு பூலோகம் வரவேண்டும்
என்று வரம் வேண்டினான். அமரனாகப் பிறந்த சம்பூரணதேவனுக்கு அவள்
பொருத்தமற்றவள் என்றும், மாற்றான் மனைவி என்றும் திருமால்
அறிவுறுத்தினார். ஆனால் சம்பூரண தேவன் திருமாலிடம் மிக உருக்கமாக
வேண்டிக் கொண்டான். எனவே அவனைத் தவம் செய்ய பணித்தார். "உன் தவத்தின்
வலிமை கண்டு உனக்கு வரம் தருவேன்" என்றுரைத்தார்.
எனவே சம்பூரண தேவனும், பரதேவதையும் தவம் புரிந்தார்கள். அவர்களது தவம்
பூரணம் அடையும் வேளையில் சிவபெருமானும், திருமாலும் அவர்களுக்கு வரம்
வழங்க வந்தனர். அவர்களை வரவேற்க அமரர் குல அதிபதியான இந்திரனும் வந்தான்.
இந்திரனைக் கண்டதும் இந்திரபதவியின் மேல் மோகம் கொண்டான் சம்பூரண தேவன்.
தன் காதலியுடன் பூலோகம் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்த தவம்
தேவேந்திர பதவி வேண்டும் என்ற பேராசையில் முடிந்தது.
இதனைக் கேட்ட திருமால் கோபம் கொண்டார். அவர்கள் இருவரையும் பூமியில்
பிறக்க ஆணையிட்டார்.
பரதேவதை ஏற்கெனவே தனது கணவன் மற்றும், குழந்தைகளுக்குத் துரோகம்
இழைத்ததால், கலியுகத்தில் அந்தக் கணவனோடு சேரவேண்டும் என்றும்,
குறிப்பிட்ட காலத்தில் தன் கணவனை இழப்பாள் என்றும் சாபமிட்டார். ஆயினும்
சம்பூரணதேவன் உனக்காகப் பிறப்பான். உன்னை மணப்பான். என்றும் கூறினார்.
சம்பூரண தேவனுக்கும் அவன் பேராசைப் பட்டதால் அதற்குத் தண்டனை நிச்சயம்
உண்டு என்றும் பூலோகத்தில் பிறந்து 22 வயது வரை சாதாரண மானுட வாழ்க்கை
வாழ வேண்டும் என்ரும், கணவனை இழந்த பரதேவதையை மணக்க வேண்டும் என்றும்
கூறினார். அச்சமயத்தில் தீராத நோய்க்கு ஆளாகி மரணத்தில் விளிம்பில்
நிற்கும்போது தானே சம்பூரண தேவனின் உடலில் இறங்கி அவனை மீட்டுக்
கொள்வதாகவும், அவ்வுடல் மூலம் தர்மத்தை நிலைநாட்டப் போவதாகவும் கூறினார்.
அய்யா அவர்கள் தானே அந்த சம்பூரண தேவன் என்றும், கடலில் தன்னை திருமாலின்
தூதர்கள் வைகுண்டம் அழைத்துப் போனார்கள் என்றும் அங்கே திருமால் தனக்கு
கலியை அழிக்கும் வழியைப் போதித்தார் என்றும் உரைத்தார். அங்கிருந்து
திருமால் தன்னை அவரது மகன் என்று உரைத்தமை பற்றிக் கூறிய அய்யா அவர்கள்
அவர் எப்போதும் தம்மோடு இருப்பதாகவும் கூறித் தன்னை வைகுண்டர் என்று
பூலோகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அய்யா தெரிவித்தார்.
தன் அன்னையாருக்குக் கடலில் வைகுண்டத்தின் காட்சியைக் காணச்செய்து இதை
யாருக்கும் உரைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதே சமயத்தில் அய்யா இன்னொரு உண்மையையும் எடுத்துரைத்தார். பொன்னுமாடன்
நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த குழந்தை பிறந்த சிறு
நேரத்திலே இறந்து விட்டதாகவும் அச்சமயத்தில்தான் சம்பூரணதேவன் அவ்வுடலுள்
செலுத்தப் பட்டதாகவும் கூறினார். இதனைத் தாயாரும் ஒப்புக் கொண்டார்.
பிறந்த குழந்தை சிறிது நேரம் சலனமில்லாமல் கிடந்ததையும், பின்னர்
அழுததையும் அன்னை நினைவு கூர்ந்தார்.
அய்யா வைகுண்டர் திருமாலிடம் கலிநீசன் வாங்கி வந்த வரத்தைப் பற்றி
உரைத்தார். அதன்படி கலியை அழிக்கவும் ஆட்டுவிக்கவும் பண்டார வடிவங்கொண்டு
திருமாலே வைகுண்டராக அவதரித்தார். பண்டார உருக்கொண்டு அன்னைக்கு
உபதேசித்துப் பின்னர் தென் திசை நோக்கி நடக்கலானார்.
தென் திசை நோக்கி நடந்த அய்யா என்ன செய்தார்? என்னவெல்லாம் போதித்தார்?
அடுத்த மடலில் காணலாம்.

கருத்துகள் இல்லை: