திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 85&86

பாடல் எண்பத்தைந்து
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே
விளக்கம் : பார்க்கும் திசைகளெல்லாம் பாசமும் அங்குசமும், பனி போன்ற சிறகுகள் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் ஐந்து மலர்க்கணைகளும், கரும்பு வில்லும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுர சுந்தரி அபிராமியின் திருமேனியும், அவளது சிறு இடையும், குங்கும நிறக்கச்சையணிந்த திருமுலைகளும், அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையையுமே காண்கின்றேன்...
"எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாடினானே தமிழ்க்கவிஞன் அவனது வரிகள் நினைவுக்கு வருகின்றன. காணும் திசையெல்லாம் உந்தன் திருவுருவேயன்றி வேறொன்றும் காண்கிலேன் அம்மையே... என்னிலும் உன்னைக் காண்கின்றேன்.. எல்லோரிலும் உன்னைக் காண்கின்றேன்.. அம்மையே... நீயே எல்லாம்.. சர்வம் சக்தி மயம்.... இதுதான் அபிராமிப் பட்டரின் எண்ணம்..பக்திக் கடலில் மூழ்கியிருக்கும் பரம பக்தனுக்கே இவ்வெண்ணம் சாத்தியமாகும்... அவ்வண்ணம் இருந்ததால்தான் அபிராமிப் பட்டரைப் பித்தனென்று உலகம் இகழ்ந்தது... ஆயினும் தன் பக்திநெறியினின்று பின் வாங்காது என்றென்றும் அன்னையின் திருவுருவைத் தொழுதேத்தித் தன் பக்தியின் பெருமையை அகிலம் அறியச் செய்தார் அவர்.

"பார்க்கும் திசைதொறும் " நான் பார்க்கின்ற திசைகளெல்லாம் ?பாசாங்குசமும்" பாசமும், அங்குசமும், "பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் " பனி போன்ற மெல்லிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் புத்தம்புதிய மலர்களாலான ஐந்து அம்புகளும், "கரும்பும்" கரும்பு வில்லும் "என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும்" என் துன்பத்தையெல்லாம் போக்கிடும் திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருமேனியும், "சிற்றிடையும்" அவளது சிறிய இடையும் "வார்க்குங்கும முலையும் " குங்கும நிறக்கச்சையணிந்த அவளது திருமுலைகளும் "முலைமேல் முத்து மாலையுமே" அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையும் ஆகிய இவற்றையே காண்கின்றேன்.. வேறெந்த காட்சிகளும் என் கண்களுக்குப் புலப்படவில்லை..
அர்ச்சுனன் கவனமெல்லாம் குறிவைத்தடிக்க வேண்டிய பொருளின் மீதிருந்ததால் அவன் வில்லுக்கொரு விஜயன் எனப் பெயரெடுத்தான்.. அபிராமிப் பட்டரின் கவனமெல்லாம் அன்னை அபிராமியின் மேலிருந்ததால் அவர்தம் பக்தியால் புகழ்பெற்றார். அர்ச்சுனன் கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை.. அபிராமிப்பட்டருக்கோ காண்பதெல்லாம் அன்னையன்றி வேறில்லை...

பாடல் எண்பத்தாறு
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே
விளக்கம் : பாலையும், தேனையும், பாகினையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே... கோபங்கொண்ட காலதேவன், விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை என் மேல் விடும்போது, திருமால், பிரம்மன், வேதங்கள், அமரர்கள் அனைவரும் தேடியும் காணக் கிடைக்காத உன் திருப்பாதங்களையும், வளையணிந்த உன் திருக்கரங்களயும் கொண்டு எனக்குக் காட்சியளிப்பாய்...
மீண்டும் ஒருமுறை தனது மரணவேளையைப் பற்றிப் பாடுகின்றார் பட்டர். ஆனால் இப்போது அவரது பாடலின் தொனி இனிமையாகவும், குதூகலம் நிறைந்தும் காணப்படுவதை நம்மால் உணர இயலுகின்றது. கடந்த பாடலில் எல்லாவிடத்தும் உன்னையே காண்கின்றேன் என்றுரைத்த பட்டர் இப்பாடலில், யாருக்கும் தென்படாத உன் திருப்பாதங்களையும், அழகிய வளையணியும் திருக்கரங்களையும் கொண்டு நான் மரணமடையும் வேளையில் என் முன்னே வந்து நில் என்றுரைக்கின்றார். ஆஹா எத்தனை இனிமையான பாடல் இது...கண்கள் மூடிப் பாடலைப் பாடி இன்புற்று மகிழுங்கள்..
"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே " பாலையும், தேனையும், பாகையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே... "தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே" என முருகன் மீது புதுக்கவிஞன் ஒருவன் பாடினாலில்லையா... அவனுக்கு முருகனின் சொற்களை விடுத்து வேறெதுவும் இனிமையில்லை... அபிராமிப் பட்டருக்கு அன்னையின் சொற்கள் பால், தேன், சர்க்கரைப் பாகு இவற்றைப் போன்ற இனிமை நிறைந்தது.. "மால் அயன் தேட" திருமாலும், பிரம்மனும் தேடும். "மறை தேட" வேதங்கள் தேடும் "வானவர் தேட" அமரர்கள் அனைவரும் தேடும்.. "நின்ற காலையும்" இப்படி அனைவரும் தேடி நிற்கும் உந்தன் திருப்பாதங்களையும், "சூடகக் கையையும் கொண்டு" வளையணிந்த உந்தன் திருக்கரங்களையும் கொண்டு "வெங்காலன்" கோபங்கொண்ட காலதேவன் "கதித்த கப்பு வேலை " விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை "என் மேல் விடும்போது" என்னை நோக்கி செலுத்தும் வேளையில், நான் மரணமடையும் வேளையில் "வெளி நில் கண்டாய்" நீ வந்து காட்சியளித்து அருள வேண்டும்.
எத்தனை அதிகாரமாக "வெளி நில் கண்டாய்" எனக் கட்டளையிடும் தொனியில் உரைக்கின்றார். பக்தி அதிகமாகும் வேளையில் அன்னையின் மேல் உரிமையும் அதிகமாகின்றது.. நம் தாயிடம் நாம் எதையும் கேட்பதற்காக இரந்து நிற்பதில்லை.. "சாப்பாடு வை" என்றுதான் சொல்லுவோமே தவிர, "அம்மா.. பசிக்குது... சாப்பாடு போடுங்க" என்று சொல்வதில்லை... அதே தொனியில்தான் அபிராமிப் பட்டரும் உலகின் தாயான அன்னை அபிராமியைத் தான் மரணமடையும்வேளையில் வந்து நில் என்று அழைக்கின்றார்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..

கருத்துகள் இல்லை: