திங்கள், ஜனவரி 24, 2011

அய்யா வழி என்னும் அன்பு வழி

அய்யா அவர்களின் திருஅவதாரமும் இளமைப் பருவமும்
பதினெட்டாம் நூற்றாண்டில் அய்யா அவர்கள் திருஅவதாரம் செய்த வேளையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சாதிக்கொடுமைதான் முக்கியப் பிரச்சனையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரின் அடிமைகளாகக் கருதப்பட்டனர். இந்த அடிமைகளை விலைக்கு விற்பனை செய்யவும் முடியும், வாங்கவும் முடியும். அவர்களின் சொந்த நிலங்களிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட கொடுமை வேறெங்கும் நிகழ்ந்திருக்குமா? அவர்களுக்கு மிகக் குறைவான பணம் கூலியாக வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் வரி என்ற பெயரில் அவர்களிடமிருந்து பிடுங்கப் பட்டது. ஆண்களின் அடையாளமான மீசைக்கும், தாடிக்கும், பெண்களின் அடையாளமான முலைகளுக்கும், தாலிக்கும் வரிகள் விதிக்கப்பட்டன. வரிகளை செலுத்த இயலாதோர் முதுகில் பெரிய கல்லை ஏற்றி வெயிலில் நிறுத்தி விடுவார்கள். இக்கொடுமைகளால் இறந்தோர் பலர்..
இந்த வரி வசூல் செய்யும் நிகழ்வை அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை இவ்வாறு பாடுகின்றது.
“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”
சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார் குலத்தோரை அய்யா அவர்கள் சான்றோர்கள் என்றழைத்தார். இவர்களின் முக்கிய தொழில் பனைமரம் ஏறுதல். மேலும் பனைத் தொழில் ஆண்டு முழுதும் இருக்காது. பனைத்தொழில் இல்லாத சமயத்தில் விறகு வெட்டுதல் போன்ற மற்ற தொழில்களையும் இவர்கள் செய்து வந்தனர். திருவிதாங்கூரில் தொழில் இல்லாத சமயத்தில் இவர்கள் பாண்டிக்குச் சென்று விடுவார்கள். பாண்டி என்பது சாத்தான் குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளைக் குறிக்கும் சொல். மீண்டும் மலையாளம், பாண்டி என்று இவர்கள் நாடோடிகளாய்த் திரிந்தனர். இப்படிக் கொடுமைக்கு ஆளாகியிருந்த சான்றோர் குலத்தில்தான் அய்யா அவர்கள் பிறப்பெடுத்தார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னர் சான்றோர் குலத்தைச் சார்ந்தோர் நுழைவதற்கே அனுமதி இல்லை. பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் இம்மரபு உடைக்கப் பட்டது. ஆனால் இன்றோ ...? சான்றோர் குலத்தைச் சார்ந்த திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான் முருகனது தேரை முன்னின்று இழுத்துத் திருவிழாவைத் தொடங்கி வைக்கின்றார். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாகி விட்டது. பணம் செலுத்துவோர் முருகனை அருகிருந்து காணலாம். மற்றையோர் தொலைவிலிருந்து காணவேண்டும். இது போன்ற கொடுமைகள் தமிழக இந்து ஆலயங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. இவையெல்லாம் ஒழியும் நாள் எந்நாளோ? (புதிய தகவல். திருச்செந்தூர் ஆலயத்தில் பணம் கொடுத்து நுழைவோருக்குப் புதியதோர் வழியை ஏற்படுத்த ஆலயக் கட்டடத்தில் மாற்றம் செய்யப் போகின்றார்களாம். இன்னொரு இழையில் இதைப் பற்றி எழுதுவோம்).
சாதிக்கொடுமைக்கு மாற்றாக மக்கள் மதம் மாறத்தொடங்கினர். ஆங்கிலேய கிறித்தவப் பாதிரிமார்கள் இவற்றைத் தங்களுக்கு உபாயமாகக் கொண்டனர். எண்ணற்றோர் மதம் மாறினர். இந்து ஆலயங்களுக்கு உங்களுக்கு நுழைவுரிமை இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். ஆலயம் உள்ளே வந்து வழிபடுங்கள். உங்களுக்கு மேலாடை அணியும் உரிமை இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். கோட் அணியலாம். செருப்பு அணியும் உரிமை உங்களுக்கு இல்லையா? கிறித்தவர்களாக மாறுங்கள். சூ அணியலாம்.  இதைப் போன்ற செய்திகள் முன்மொழியப் பட்டதால் பலரும் கிறித்தவத்தைத் தழுவினர். ஆயினும் அவர்களும் ஆதிக்க சாதியினரால் தாக்கப் பட்டனர். இச்சமயத்தில்தான் சென்னை நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. கிறித்தவர்களாக மதம் மாறிய தாழ்த்தப் பட்டோர் மேலாடை மற்றும் காலணி அணியும் உரிமைகளை உடையவர்களாக ஆகின்றனர். ஆனால் தாழ்த்தப் பட்ட இந்துக்களுக்கு இந்த உரிமை இல்லை. என்று..... எனவே திரளானோர் கிறித்தவ சமயத்தை நாடினர்..
இந்த சமயத்தில்தான் சமுதாயத்தைக் காப்பதற்காக அய்யா அவர்கள் பிறந்தார்கள். சாஸ்தான் கோவில் விளை என்னும் ஊரில், கி.பி. 1809ம் ஆண்டு பொன்னு மாடன் நாடாருக்கும், வெயிலாள் அம்மாளுக்கும் பிறந்த அய்யா அவர்களுக்கு "முடி சூடும் பெருமாள்" என்ற அழகிய பெயரை இட்டார்கள்.. தற்சமயம் இந்த ஊர் சாமித்தோப்பு என்று அழைக்கப் படுகின்றது. அங்கிருந்த வழக்கப் படி தாழ்த்தப் பட்டோர் தங்கள் குழந்தைகளை குரங்கு என்றும், மாடு என்றும்தான் அழைக்க வேண்டும். இந்நிலையில் மகாவிஷ்ணுவின் பெயர் தாங்கிய நமது முடிசூடும் பெருமாளின் பெயரைப் பதிவு செய்ய பொன்னுமாடன் சென்றார். அங்கிருந்தோரோ அவரை மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து தன் மகனுக்கு "முத்துக்குட்டி" என்று பெயர் மாற்றம் செய்தார் பொன்னுமாடன்.  பொன்னுமாடன் சிறந்த பெருமாள் பக்தர். முத்துக்குட்டியும் சிறந்த பெருமாள் பக்தராகவே விளங்கினார்.
கல்விகற்பதற்கு அனுமதியில்லை. எனவே அய்யா அவர்கள் கல்விக்கூடம் செல்லவில்லை. ஆதிக்க சாதியினரின் ஆலயங்களுக்குள் இவர் நுழைவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்ததால் தனது இல்லத்திலேயே சிறு மேடை ஒன்று அமைத்து இறைவனை வணங்கலானார்.  சிறுவயது முதலே இவர் கண்டு வந்த சாதிக்கொடுமை அவரை சிந்திக்க வைத்தது... தந்தையார் செய்த குலத்தொழிலான பனைத் தொழிலையே அய்யா அவர்களும் செய்யத் துவங்கினார். தான் கண்ட கொடுமைகளை அய்யா அவர்கள்
“பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டே அடிப்பான்
கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டடிப்பான்
நாரு வட்டி ஓலை நாடோறும் கேட்டடிப்பான்
வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டடிப்பான்
நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்
குளம் வெட்டச் சொல்லி கூலி கொடுக்காமல்
களம் பெரிய சான்றோரை கைக்குட்டை போட்டடிப்பான்...”
என்று பாடுகின்றார். சமூக சிந்தனையாளராக வளர்ந்த அய்யா அவர்களின் இளமைக் காலத்தை அகிலத்திரட்டு அம்மானை கீழ்க்கண்டவாறு பாடுகின்றது..
“ஊருக்குத் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”
உடல் உறுதிமிக்கவராய்த் திகழ்ந்தார். தங்கள் விளைநிலங்களை ஆதிக்க சாதியினர் பிடுங்கிக் கொள்ள வெகுண்டு எழுந்தார். இளைஞர்களைத் திரட்டி வீரமூட்டும் பேச்சுக்களை பேசினார். "மாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது" என்று அவர் பேசிய பேச்சு மக்களை உசுப்பி விட்டது.  விதவைப் பெண்களைக் கண்டு வாடினார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அய்யா அவர்களை மிகவும் பாதித்தது.
இவற்றைக் கண்டு வாடியதால்தான் ஓர் விதவைப் பெண்ணையே மணம் முடிக்க எண்ணினார். அதன்படியே தனது 17வது வயதில் திருமால் எனும் பெயர் கொண்ட ஓர் விதவைப் பெண்ணை மணம் முடித்தார். அவருக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருந்தன. இச்செயலானது அக்காலத்தில் சமுதாயத்திற்கு ஏற்றதாக இல்லை. எனவே தனது சமுதாயத்தினரால் அய்யா அவர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். அய்யா அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர்களும் புறக்கணித்தனர். இதனால் வறுமையில் வாடினார் அய்யா. பனைதொழிலில் வரும் வருமானமும் வரி என்ற பெயரில் பிடுங்கப் பட்டதால், குடும்பம் பட்டினியால் தவித்தது. அய்யாவின் வாட்டத்தைக் கண்ட பெற்றோர் மீண்டும் அவரோடு வந்து இணைந்தனர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது..
இந்நிலையில்தான் அய்யா அவர்களை கொடிய நோய் தாக்கியது. அய்யா அவர்கள் படுத்த படுக்கையானார். யாராலும் அவரைக் குணப்படுத்த இயலவில்லை. அய்யா அவர்கள் படுத்த படுக்கையாகி இரு வருடங்கள் ஓடிவிட்டன. இந்த வேளையில்தான் வெயிலால் அம்மாள் ஓர் கனவு கண்டார். அவரது கனவில் நாராயணன் தோன்றி முத்துக்குட்டியைத் திருச்செந்தூர் அழைத்துச் செல்ல பணிக்கின்றார். இக்கனவை அய்யாவே பாடுகின்றார்.
“வந்து சொன்ன உத்தரவை மகனே நீ கேளு என்று
விந்து வழிக் கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க
சொல்லுகிறாள் அந்த சொற்பனத்தை அன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுகிறாள் அன்போரே
ஆயிரத்து எட்டு ஆண்டு இதுவாம் இவ்வருடம்
மாசியென்னும் மாதமிது வாய்த்த தேதி பத்தொன்பது
இம்மாதம் இத்தேதி ஏற்ற திருச்செந்தூரில்
நம்மாணைக் கொடியேற்றி
நல்ல திருநாள் நடக்கும்
அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால்
எங்குளோரும் அறிய இப்பிணியும் தீர்த்து
நல்ல பேறும் கொடுப்போம்
நம் ஆணை தப்பாது...”
இதன்படி தமிழ் ஆண்டு ஆயிரத்து எட்டு மாசி மாதம் பத்தொன்பதாம் தேதியில் செந்தூரில் நடைபெறும் மாசித்திருவிழாவிற்காக அய்யாவை அழைத்து வரச்சொல்லி ஆணை. மகனுக்கு சுகம் கிடைத்து விடும் என்று மகிழ்ந்த பெற்றோரும் அய்யா அவர்களைத் தூளியில் கட்டித் திருச்செந்தூர் புறப்பட்டனர்.
அய்யா அவர்கள் குணமடைந்தார்களா? வெயிலாள் அம்மாள் கண்ட கனவு பலித்ததா?
தொடர்ந்து வரும் மடல்களில் காண்போம்...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கருத்து முரண்பாடு நிறையவே உள்ளது. முடிசூடும் பெருமாள் என்ற பெயருக்கு எதிர்ப்பு காட்டியவர்கள் திருமால் என்னும் பெயருக்கு அனுமதி அளித்தது எப்படி?