செவ்வாய், ஜனவரி 25, 2011

கடலுற்சென்று மீண்ட அய்யா வைகுண்டரானார்

அய்யா அவர்களுக்கு வந்த நோய் அவரை மிகவும் பாதித்த படியால் இரண்டு ஆண்டுகள் அய்யா படுக்கையில் இருந்தார். இச்சமயத்தில்தான் அய்யாவின் அன்னையின் கனவில் நாராயணர் தோன்றி அய்யாவை செந்தூருக்கு அழைத்து வரச்செய்தார். தமிழ் 1008ம் ஆண்டு மாசி மாதத்திருவிழாவிற்கு திருச்செந்தூருக்கு அய்யா அவர்கள் எடுத்துச் செல்லப்பட்டார். தூளியிலே அவரைக் கட்டி சுமந்து கால்நடையாகவே திருச்செந்தூர் சென்றனர்.
திருச்செந்தூரை அடைந்தவுடன் அவரைக் கடலில் நீராட்ட விரும்பினார் அன்னை வெயிலாள் அம்மாள். ஆனால் அய்யாவால் எழுந்து நடக்க இயலாது அல்லவா? எனவே ஓர் பாத்திரத்தில் கடல் நீரைக் கொண்டு வந்து அய்யாவின் மேல் தெளித்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. யாரும் எதிர்பாராத வேளையில் அய்யா எழுந்து கடலை நோக்கி ஓடினார். சமுத்திரராஜன் அய்யாவை உள்ளே இழுத்துக் கொண்டான்.
அன்னைக்கு மகன் எழுந்து நடந்த மகிழ்ச்சி... ஆனால் உள்ளே சென்ற அய்யா திரும்பி வரவில்லை. அனைவரும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ஆனால் அய்யா திரும்பவில்லை. அன்னை வெயிலாள் அம்மாள் அழுது புலம்புகின்றார். அய்யாவின் மனையார் திருமாலம்மாளும் புலம்புகின்றார். ஆனால் அய்யா வரவில்லை. ஏற்கெனவே தீராத நோயில் விழுந்த என் மகனை இந்தக் கடல் கொண்டு சென்றுவிட்டதே... அவன் இறந்திருப்பான் என்றே தந்தை பொன்னுமாடன் முடிவு செய்தார்.
அய்யாவின் உடலைத் தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். எங்கெங்கு தேடினும் அய்யாவின் உடலும் கிடைக்கவில்லை. இதனால் உடன் வந்த உறவினர்கள் ஊருக்குத் திரும்பலாம் என அறிவுறுத்தினர். ஆனால் அய்யாவின் அன்னையோ தான் திரும்பப் போவதில்லை என்று திடமாக மறுத்து விட்டார். மகனை இழந்த துக்கத்தில் தாயின் மனநிலை பேதலித்து விட்டதாக எண்ணி உறவினர்கள் திரும்பிச் சென்றனர்.
அன்னையோ தன் மகனுக்காகக் காத்திருந்தார். மூன்றாவது நாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாசி மாதம் 20ம் நாள் அய்யா அவர்கள் கடலிலிருந்து வெளிப்பட்டார்கள். புத்தம் புது உடலோடு....
இந்நிகழ்வை அகிலத்திரட்டு அம்மானை இவ்வாறு தெரிவிக்கின்றது...
“கடலை மிகத்தாண்டிக் கரையதிலே செல்லும் முன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறையம் இட்டனரே
ஆவலாதியாக அபயமிட்டர் தேவரெல்லாம்
வைகுண்டருக்கே அபயம் முறையம் இட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
தேவாதி தேவரெல்லாம் பூச்சொறிய
கடலன்னை கைதாங்கி கரையில் விட்டது முத்துக்குட்டியை...
இல்லையில்லை... வைகுண்டரை!”
முத்துக்குட்டியாக கடலுற்சென்ற அய்யா, வைகுண்டராகத் திரும்பினார்.
இனி உன் மகன் திரும்பப் போவதில்லை என உறவினர்களின் மொழி தனது செவியில் விழுந்து கொண்டிருந்த வேளையில் நோய் நீங்கி புது மனிதனாகத் தன் மகனைக் கண்ட வெயிலாளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஓடோடிச்சென்றாள். தன் மகனை ஆவியோடு அணைத்துக் கொள்வதற்கு ஓடிச்சென்ற அன்னையைத் தடுத்து நிறுத்தினார் அய்யா.
"நான் உன் மகனில்லை... கலியை அழித்துத் தருமயுகத்தை நிலைநாட்ட வந்த நாராயணன் - வைகுண்டர்" என்று தன் அன்னைக்கு உரைத்தார்.
"இதென்ன சோதனை... நான் காண்பது என் மகன் முத்துக்குட்டியல்லவா? மகனே இந்த இடத்திலல்லவா நான் உன்னைத் தொலைத்தேன்.? இங்கே பார். உன்னை நாங்கள் கட்டிக் கொண்டு வந்த தூளி... " என்றெல்லாம் மன்றாடினாள். ஆனால் அய்யாவோ...
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"


என்றுரைத்தார். ஆயினும் அன்னையால் நம்ப இயலவில்லை.. எனவே அவருக்குத் தனது முற்பிறப்பின் கதையை உரைக்கத் துவங்கினார் அய்யா...
அய்யா அவர்கள் அன்னைக்குக் கூறிய கதை என்ன? அய்யாவின் திருஅவதார நோக்கம் என்ன? தொடர்ந்து வரும் மடல்களில் காண்போம்..

கருத்துகள் இல்லை: