திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 77&78

பாடல் எழுபத்தேழு
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே
விளக்கம் : அபிராமி அன்னையே... உன்னை பைரவி என்றும் பஞ்சமி என்றும் பாசம், அங்குசம், ஐவகை மலரம்புகள் ஏந்தி வஞ்சகர் உயிரை உண்ணும் சண்டி தேவி என்றும், காளிதேவி என்றும், ஒளி வீசும் கலை பொருந்திய வயிரவி என்றும், அனைத்து மண்டலங்களிலும் இயங்கும் மாலினி என்றும், திரிசூலம் ஏந்தும் திரிசூலி என்றும், வராகி என்றும் உனது திருநாமங்கள் குற்றமற்ற வேதங்களில் சொல்லப்ப் பட்டுள்ளன.. அவற்றையே உனது அடியார்கள் போற்றுவார்கள்.
அன்னையின் திருநாமங்களைப் போற்றும் பாடல் இது.. எதிரிகளின் அச்சம் நீங்குவதற்கு இப்பாடலைத் தினமும் ஓத வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு.  அன்னையின் திருநாமங்கள் என்றென்றும் நம் மனத்தில் நிற்கவும் இப்பாடலினை ஓதலாம்.
"பயிரவி" பைரவி என்றும்..  "பஞ்சமி" பஞ்சமி என்றும்.. "பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி " பாசம், அங்குசம், ஐவகை மலரம்புகள் ஏந்தி வஞ்சகர் உயிரை உண்ணும் உயர்வான சண்டி தேவி என்றும்... "காளி" காளி என்றும் "ஒளிரும் கலா வயிரவி" ஒளி பொருந்திய கலைகள் கொண்ட வயிரவி என்றும்.. "மண்டலி மாலினி" சூரிய சந்திர மண்டலங்களின் நாயகியாக விளங்கும் மாலினி என்றும்... "சூலி" திரிசூலம் ஏந்தும் சூலி என்றும் "வராகி" வராக முகம் கொண்ட வராகி "என்றே" என்றெல்லாம் "செயிர் அவி நான்மறை சேர்" குற்றங்கள் இல்லாத நால்வகை வேதங்களில் சேரும் அதாவது வேதங்களில் இடம்பெறும்... "திருநாமங்கள்" உனது திருநாமங்களை... "செப்புவரே" உனது அடியார்கள் சொல்லுவார்கள்..
மீண்டும் மீண்டும் ஓதிப்பாருங்கள். அன்னையின் திருநாமங்கள் நம் மனத்திலுள்ள அச்சத்தை நீக்கித் தெளிவினைத் தருவதை உணருங்கள். எதிரிகளிடமிருந்து அன்னை நம்மைக் காத்தருளட்டும்

பாடல் எழுபத்தெட்டு
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே


விளக்கம் : போற்றத்தக்க பொற்கலசம் போன்ற திருமுலைகள் மேல் மணம் வீசும் சந்தனத்தைப் பூசிய அபிராமி அன்னையே... நீ அணிகின்ற முத்துக்களால் ஆன காதணியும், வைரத்தால் ஆனக் குண்டலமும், கருணைமிகு உனது கடைக்கண்களையும், குளிர்ச்சியை சிந்தும் நிலவினைப் போன்ற உனது திருமுகத்தையும் கொண்ட உனது அழகிய திருவுருவினை எனது இரு விழிகளிலும் எழுதி வைத்தேன்...
அன்னையின் அழகிய திருவுருவை வர்ணணை செய்யும் பாடல் இது.. என் கண்களில் எப்போதும் நிலை நிற்கும் வண்ணம் உனது அழகியத் திருவுருவை என் மனத்தில் வரைந்து வைத்தேன்.. ஆகையால் எப்போதும் நீ எந்தன் விழிகளை விட்டு மறைவதில்லை... தாயே...உன் பேரழகுத் திருவுரு எப்படி என்னை விட்டு நீங்கும்?
"செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்" போற்றத்தக்க பொற்கலசங்களைப் போன்ற உனது திருமுலைகளின் மேல் "அப்பும் களப அபிராம வல்லி"  மணம் வீசும் சந்தனத்தைப் பூசிய அபிராமி அன்னையே... "அணி தரளக் கொப்பும்" நீ அணிகின்ற முத்தாலான காதணிகளும், "வயிரக் குழையும்" வைரத்தால் ஆன குண்டலங்களும், "விழியின் கொழுங்கடையும்" கருணை மிகு உந்தன் கடைக்கண் பார்வையும், "துப்பும் நிலவும்" குளிர்ச்சியை உமிழும் நிலவையொத்த உனது அழகிய திருமுகமும் "எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே" எந்தன் இருவிழிகளிலும் என்றென்றும் நான் கண்டுகொண்டிருக்கும் வண்ணம் எந்தன் மனத்தில் வரைந்து வைத்தேன்...
அன்னையின் அழகிய திருவுருவை நம் கண்களால் காணாது இருக்க இயலுமா??
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம். நன்றி.

கருத்துகள் இல்லை: