திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 75&76

நண்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மேலும் அபிராமியைக் காண வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்து பெருக்கெடுத்து ஓடுகின்றது. எனவே நவம்பர் இறுதி ஞாயிற்றுக் கிழமை அல்லது டிசம்பர் முதல் ஞாயிற்றுக் கிழமை திருக்கடவூர் செல்லலாம் என எண்ணியுள்ளேன். அதற்குள்ளாக இவ்வந்தாதியுரைகளும் பூர்த்தியாகி விடும். எங்கள் மகள் பிறந்தும் நாற்பது நாட்கள் கடந்துவிடும். எனவே நண்பர்களுடன் சென்று அபிராமியைக் கண்டு பின்னர் கொண்டாடலாம் என்று எண்ணுகிறேன்.. எனவே நண்பர்கள் அனைவரையும் திருக்கடவூருக்கு அழைக்கின்றேன். அமிர்தகடேசுவரர் உடனுறையும் அபிராமியைக் கண்டு வணங்கி ஆசி பெற்று வரலாம். பெங்களூரிலிருந்து திருக்கடவூருக்கு எப்படிச் செல்லவேண்டுமென்பதை அறிந்தோர் சொல்லுங்கள்.. பெரியோர்கள் என்றைக்குச் செல்லலாம் என்பதைச் சொல்லுங்கள்.. (இத்திங்களின் இறுதி ஞாயிறு அல்லது வருந்திங்களின் முதல் ஞாயிறு). மேலும் பெங்களூரு நண்பர்கள் இத்திங்கள் இறுதி ஞாயிறன்று எங்கள் இல்லத்துக்கு வருகின்றீர்களா? ஒரு சந்திப்பும் ஆகும்... பதில் எழுதுங்கள்... ஹரிகி, ஸ்வர்ணா, ஷைலஜா ஆகியோரை மட்டுமே பெங்களூர் நண்பர்களாக அறிகின்றேன். மேலும் நமது குழுமங்களில் பெங்களூரைச் சேர்ந்த நண்பர்கள் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டு  எழுதினால், சந்திப்பு மிகவும் இனிமையாக இருக்கும்... தங்களின் மேலான பதிலை எதிர் நோக்குகின்றேன். நன்றி... தொடர்ந்து அபிராமியைக் கவனிப்போம்..
பாடல் எழுபத்தைந்து
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே
விளக்கம் : பெரிய மலைகளையும், பொங்கும் கடலையும், பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்தவளும், மணம் வீசும் மலர்களைத் தன் கூந்தலில் அணிந்தவளுமான அபிராமியின் திருமேனியை எண்ணித் தியானித்திருக்கும் அன்பர்கள், கற்பக மரத்தின் நிழலிலே தங்குவார்கள். மீண்டும் பிறப்பற்ற நிலை எய்துவார்கள்.
கடந்த பாடலில் அன்னையை எண்ணி வணங்குவோர் வேறெந்த போகத்தையும் விரும்புவதில்லை எனவுரைத்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், அன்னையின் திருவுருவை எண்ணித் தியானிப்போருக்கு நினைப்பதையெல்லாம் உடனே வழங்கும் கற்பக மரத்தின் நிழலில் தங்கும் பேறு கிட்டும் என்று உரைக்கின்றார். அன்னையின் அருள் அத்தகையது."மால் வரையும்" பெரிய மலைகளையும்,  " பொங்கு உவர் ஆழியும் "  உவர்ப்புச் சுவை நீரைக் கொண்ட அலை பொங்கும் கடல்களையும், "ஈரேழ் புவனமும்" பதினான்கு உலகங்களையும் "பூத்த" பெற்றெடுத்த "உந்திக்" வயிற்றினையுடையவளும், "கொங்கு இவர் பூங்குழலாள்" மணம் வீசும் மலர்களைத் தனது கூந்தலிலே சூடியவளுமான அபிராமி அன்னையின் "திருமேனி குறித்தவரே" திருமேனியை எண்ணித் தவமியற்றுபவர்கள்... தியானித்திருப்பவர்கள்..."தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்" நினைத்ததை நினைத்த பொழுதிலேயே வழங்கிடும் கற்பக மரத்தின் நிழலிலே தங்கும் பேற்றினைப் பெறுவார்கள்..  "தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை" தங்களுக்கு மறு பிறப்பின்றி.... மீண்டும் பெற்றெடுக்க ஒரு தாய் இல்லாது... இருப்பார்கள்.. அவர்களுக்கு மீண்டும் பிறவி வாய்க்காது....

பாடல் எழுபத்தாறு
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

விளக்கம் : வண்டுகள் கிண்டுவதால் தேன் வெளியேறும் கொன்றைப் பூக்களைச் சூடும் சிவபெருமானது உடம்பின் ஒரு பாகத்தைப் பறித்து அவ்விடத்துக் குடிபுகுந்த ஐவகை மலரம்புகளைக் கொண்ட பைரவித் தாயே... எங்கள் அபிராமியே... உனது திருக்கோலத்தையே என் மனத்தில் எப்போதும் நிறுத்தி தியானித்திருக்கின்றேன்.. உனது திருவருளால், கூற்றுவன் என்னை அழைக்க வரும் வழியைக் கண்டுபிடித்து அதனை மறித்து விட்டேன்... இனி எனக்கு மரணமில்லை அன்னையே...
சத்தியத்தை உரைக்கும் பாடல் இது... அபிராமிப் பட்டர் மறைந்து விட்டாரா? இல்லவே இல்லை...தனது அழகிய தமிழ்ப் பாமாலைகளால் இன்றும் நம் இதயத்துள் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார். திருக்கடவூர் உள்ள வரை.... அகிலத்தை ஆளும் அபிராமி இருக்கும் வரை.... என்றும் இளமை குன்றாத சங்கத்தமிழ் இருக்கும் வரை.... அவர் என்றென்றும் நிலைத்திருப்பாரன்றோ...? ஆகவேதான் மிகவும் தைரியமாக.. அன்னையே... உனது திருவருள் கொண்டு காலதேவன் வரும் வழியை அடைத்து விட்டேன்.... என்று பகர்கின்றார்... இந்த பாடலைத் தினமும் பாடிவந்தால்... நமக்குச் சொந்தமான பொருள் ஏதாவது காணாமல் போயிருந்தாலோ அல்லது நமக்கு வந்து சேர வேண்டிய பொருள் வருவதில் தாமதமாகியிருந்தாலோ,..அது விரைவில் நம்மை வந்து சேரும் எனப் பெரியோர்கள் மொழிவார்கள்...
"வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் " வண்டுகள் கிண்டுவதால் வெறியூட்டும் தேன் வெளியேறும் கொன்றைப் பூக்களைத் தன் திருச்சடையில் அணிந்த சிவபெருமானின்.... எத்தனை அழகிய வர்ணனை... கொன்றைப் பூக்களைச் சடைக்கணிந்த எம்பிரான் திருமுடிகள்... அப்பூக்களிடம் தேனெடுக்க படையெடுக்கும் வண்டுக் கூட்டம்...இவற்றால் வெளியேறி வழியும் தேன்... அட.. அட... கற்பனையில் எண்ணினாலே களிப்பூட்டும் காட்சியது... "ஒரு கூற்றை மெய்யில் பறித்தே " உடம்பின் ஒரு பாகத்தைப் பறித்து.... பெண்ணுரிமை கேட்கும் அன்புச் சமுதாயமே...அன்று ஈசன் தானாக முன்வந்து அன்னைக்கு அரும்பாகத்தைத் தந்து விடவில்லை...அன்னை அதனைப் பறித்து கொண்டாள்... ஏனெனில் ஈசனைப் படைத்தவளும் அவளேயன்றோ... ? ஆனால் இன்றைக்கோ இந்தியத் திருநாட்டில் மூன்றில் ஒரு பங்கிடத்தைக் கூட மகளிருக்குப் பெற்றுத்தர போராட வேண்டியுள்ளது... ஆனால்... அன்றே அன்னையானவள் சரிபாதியிடத்தைத் தனக்கெனப் பறித்துக் கொண்டாள்.."குடி புகுதும்" அவ்விடத்திற் குடி புகுந்த... "பஞ்ச பாண பயிரவியே..." ஐவகை மலரம்புகளை ஏந்தும் பைரவித் தாயே.. பைரவி என்பது அன்னையின் இன்னொரு திருநாமம்.. பைரவன் ஈசனது திருவவதாரம்... அவனது இடப்பாகத்தைப் பறித்து அவ்விடத்துக் குடிபுகுந்ததால் அன்னை பைரவி எனும் திருநாமத்தைப் பெற்றாள்.. பஞ்ச பாணங்களை ஏந்தும் விளக்கத்தை முன்னரே கேட்டிருக்கின்றோம் அல்லவா? "குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்" உனது திருக்கோலத்தையே என் மனத்தில் எப்போதும் நிறுத்தி தியானித்திருக்கின்றேன்... அன்னையும் தந்தையும் சரிபாதியாய்த் தோன்றும் சிவசக்தித் திருவுருவை... திருக்கோலத்தையே... எல்லா பொழுதுகளிலும் என் மனத்தில் நிலைநிறுத்தி தியானித்திருக்கின்றேன்... "நின் குறிப்பு அறிந்து" உனது திருவருட்குறிப்பினை அறிந்து... "மறலி வருகின்ற நேர் வழி" மரணதேவன் வருகின்ற வழியினை... "மறித்தேன்" மறித்து விட்டேன்... காலதேவன் வரும் வேளை உனது திருமணக்கோலத்தில் வந்து நின்று திருவருள் புரிந்து அஞ்சாதே மகனே என்று என்னை ஆற்றவேண்டும் என வேண்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்துத் தானே மரணம் வரும் வழியை அறிந்து கொண்டு அதனை அடைத்தும் விட்டதாகப் பகர்வது சற்றே விழியை உயர்த்த வைக்கின்றது... இதுதான் பக்தியின் பாதை... பக்தன் தான் பக்தி செய்யும் துவக்க நாட்களில், அன்னையை இறுகப் பற்றிக் கொள்கிறான்.. தன் பயத்தைத் தெளிவிக்க வேண்டுகின்றான்.. பக்தி நெறியில் வளர வளர அச்சம் மறைகின்றது.. அன்னையானவள் தெளிவைத் தந்தருள்கின்றாள்.. அவ்வமயம் எல்லாம் புலப்படுகின்றது... எதிர்வருந்துன்பங்களிடமிருந்து எங்ஙனம் தப்புவது என்பதை அன்னையின் திருவருட்குறிப்பு பக்தனுக்கு உணர்த்துகின்றது... எனவே தனது பக்தியெனும் சக்தியால் அத்துன்பங்கள் தனக்கு வராமல் தடுத்தும் விடுகின்றான்... உண்மையான பக்தி கொள்வோர்க்கு இது சாத்தியமே... இதை அபிராமி அந்தாதியைக் கொண்டு உணரலாம்... மரணதேவன் வரும் வழியைத் தானே அடைத்து விட்டதாக அபிராமிப் பட்டர் உரைப்பது அவரது தைரியத்தை... பேராற்றலை... அப்பேராற்றல் பெற அவர் கொண்ட பெரும்பக்தியை உணர்த்துகின்றது... நாமும் அபிராமி மேல் அளவற்ற பக்தி கொள்வோம். வரும் துன்பங்களிலிருந்து உய்வோம்... அன்னையே நம்மைக் காத்து வழி நடத்தட்டும்... ஓம் சக்தி...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. மிகச் சிறந்த கல்வி ஞானம் கொண்ட பெரியோர்களெல்லாம் இதைப் படித்து வருகின்றீர்கள்.. அடியேனின் கருத்தில் பிழையிருந்தால் மன்னித்து... சரியான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.. மேலும் அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வெவ்வேறு பலன்கள் உள்ளன.. அவற்றுள் அடியேன் அறிந்தவை சில மட்டுமே... அவற்றை இவ்வுரைகளில் தெரியப் படுத்தியும் வருகின்றேன்.. முற்றும் அறிந்தோர் தயவு செய்து அவற்றைப் பட்டியலிட்டுப் பதிவு செய்யும்படி அன்போடு வேண்டுகின்றேன்... நன்றி...

கருத்துகள் இல்லை: