திங்கள், ஜனவரி 24, 2011

அபிராமி அந்தாதி 69 & 70

பாடல் அறுபத்தொன்பது
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
விளக்கம் : பூவினைச்சூடிய குழலினையுடைய அன்னை அபிராமியின் கடைக்கண்கள், எல்லா செல்வங்களையும் தரும், நற்கல்வி தரும், ஒரு நாளும் தளர்ச்சியடையாத திட மனத்தினைத் தரும், தெய்வீக வடிவினைத் தரும், மனத்தில் வஞ்சமில்லாத சுற்றத்தைத் தரும், நல்லவை எல்லாவற்றையும் தரும். அன்னையின் அடியவர்களுக்கு பெருமையைத் தரும்.

மிகச்சிறந்த பாடல் இது.. பள்ளி நாட்களில் மனப்பாடச் செய்யுளாகக் கற்றது. அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை ஓதவேண்டும். எல்லாவளமும் பெறலாம்.
"பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே" பூவினைத் தன் கூந்தலிலே அணிந்த அன்னை அபிராமியின் கடைக்கண்கள்.."தனம் தரும்" எல்லாவித செல்வங்களையும் அள்ளித்தரும். "கல்வி தரும்" சிறந்த கல்வியைத் தரும். "ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் " ஒரு நாளும் தளர்ச்சியடையாத திடமான மனத்தினைத் தந்திடும். "தெய்வ வடிவும் தரும் " தெய்வீகமான வடிவழகைத் தரும். "நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் " நெஞ்சத்தில் வஞ்சமில்லா நல்ல சுற்றத்தைத் தரும். "அன்பர் என்பவர்க்கே" அன்னையின் அன்பர்களுக்கு "கனம் தரும்" பெருமையைத் தரும்.
இந்த கால கட்ட சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளைப் பாருங்கள்.. முதலில் எல்லாவித செல்வங்களையும் அன்னையின் திருக்கண்களின் கடைப்பார்வை தந்திடும். செல்வம் இருந்தால் மட்டுமே நற்கல்வி கிட்டும் இந்த காலத்தில்... நற்கல்வியும், செல்வமும் இருந்தால், தளர்ச்சியற்ற மனது தானே வந்து சேரும். தெய்வீகமான வடிவழகை அன்னையின் கடைக்கண்கள் தரும். தெய்வீக வடிவுடையோரிடம் நட்பு பூணுவோர் மனத்தில் வஞ்சம் இருக்காது.. வஞ்சமற்ற மனமுடையோரின் நட்பை அவளது கடைக்கண்களே தரும். இவை எல்லாம் கிட்டிய பின்னர் நல்லன எல்லாம் தாமே தேடி ஓடிவரும். பின்னர் ஒரு புள்ளி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.. "அன்பர் என்பவர்க்கே கனம் தரும் " எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லா சுற்றம், நல்லன எல்லாம் அன்னையின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள் சிறிதளவு தன் திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து விடும்.. ஆனால் நற்பெருமையானது யாருக்குக் கிடைக்கும்? அன்னையிடத்து அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே கிட்டும். அவள் யாரிடத்து அன்பு செலுத்துகிறாளோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும்... செல்வம் அதிகமிருந்தால் பெருமை கிட்டும்... ஆயினும் எங்காவது ஓர் மூலையில் யாராவது ஒருவர் நம்மைப் பற்றி குறைபட்டுக் கொண்டிருப்பார்.. நற்கல்வி கிட்டினால் பெருமை கிட்டும். ஆயினும் அகங்காரம் மனத்தில் குடி கொண்டு அப்பெருமையைத் தகர்த்துவிடும். தளர்ச்சியற்ற மனதிருந்தாலும் அகங்காரமே நம் மனத்தில் குடியேறும். தெய்வீகமான அழகைப் பெற்றிருந்தால் நம் மனத்தின் நிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அது அகங்காரத்தின் மொத்த உருவமாய்த் திகழும். நெஞ்சில் வஞ்சமற்ற சுற்றம் கிடைத்தாலும், நம் மனத்தில் வஞ்சம் புகுந்து அவர்தம்மை ஏய்க்க வாய்ப்பு தேடும்.. நல்லன எல்லாம் கிட்டிய பின்னரும் நற்பெருமை என்பது கிடைப்பது கடினமே.. ஆனால் அன்னையின் மேல் அளவற்ற பக்தி செய்யும் அன்பர்களுக்கு இவை எல்லாவற்றிற்கும் மேலான "கனம்" நற்பெருமை கிட்டும்.. அபிராமிப் பட்டர் தனது செல்வங்களால் அறியப் படுகின்றாரா? அவர் தமது கல்வியால் அறியப் படுகின்றாரா? தளர்வற்ற தம் மனத்தால் அறியப் படுகின்றாரா? தனது தெய்வீக வடிவழகால் அறியப் படுகின்றாரா? தனது வஞ்சமற்ற சுற்றத்தால் அறியப்படுகின்றாரா? தான் பெற்ற நல்லன எல்லாவற்றாலும் அறியப்படுகின்றாரா? இல்லவே இல்லை... அன்னை அபிராமியின் மீது தான் கொண்ட அளவற்ற அன்பால்... அன்னையின் அன்பன் என்றே அறியப் படுகின்றார். அக்கனத்தைக் கொடுத்தது அன்னை அபிராமியின் கடைக்கண் பார்வை மட்டுமல்ல... அவளும் அபிராமிப் பட்டர் மீது கொண்ட அன்பே... நாமும் அன்னையின் கடைக்கண் பார்வையை வேண்டி எல்லாம் பெற்று அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பை நாமும் பெற்று கனம் பெற்று இன்புறுவோம். அதுவே என்றும் நிலைத்திருக்கும்..
பாடல் எழுபது.
கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே
விளக்கம் : அன்னை அபிராமியே.. பாடல் இன்புறும் குரலும், இன்னிசை எழுப்பும் வீணையைத் தாங்கிய திருக்கரங்களும், அழகிய திருமுலைகளும் கொண்டு மண் மகள் இன்புறும் பச்சை வண்ணத்தில் மதங்க மாமுனியின் குலத்தில் தோன்றிய எம் தலைவியே உன் பேரழகை மீனாட்சி எனும் திருவுருவில் மதுரையம்பதியில் என் கண்கள் இன்புறும் வண்ணம் கண்டேன்..
ஆஹா... இத்திருப்பாடலைப் பாடும்போது நம்மையறியாமல் அன்னை மீனாட்சியின் திருவுருவத்தை நம் கண்கள் கண்டுவிடுகின்றன... கடம்ப வனம் என்பது நான்மாடக் கூடலான மதுரையம்பதியைக் குறிக்கும். அன்னையானவள் பாண்டி நாட்டின் பெருமையை உலகறியச் செய்ய அவ்விடத்து மலையத்துவசனுக்கு மகளாக... தடாதகைப் பிராட்டியாக அவதரித்தாள். பச்சை நிறங்கொண்ட பேரழகியான அவள் பொருட்டு ஈசனும் சொக்கநாதனாக வந்தருளி அவளை மணம் புரிந்து மதுரை மாநகருக்கு மாமன்னன் ஆனான். சொக்கனும், மீனாட்சியும் குடியிருக்கும் மதுரை மாநகரத்தின் அழகே அழகு.. அவ்விடத்து அன்னை மீனாட்சியின் பேரழகைக் காண நமக்குக் கண்கள் கோடி வேண்டும். அத்திருக்காட்சியையே தனது கண்கள் களிக்கும்படி கண்டதாக அபிராமிப் பட்டர் உரைக்கின்றார். கண்கள் எப்போது களிக்கின்றன? அழகிய திருக்காட்சிதனைக் காணும்போது...  அதுவும் அன்னை மீனாட்சியின் பேரழகைக் கண்ட கண்கள் வேறெவ்விடத்தும் இன்புறுவதில்லை...
"பண் களிக்கும் குரல்" பாடலே இன்புறும் குரலையும், ... பாடலைக் கேட்டால் நாம் இன்புறுகின்றோம்.. ஆனால் அப்பாடலையே இன்புறச் செய்யும் இனிய குரலினையுடையவள் அன்னை மீனாட்சி.... "வீணையும் கையும்"... இன்னிசை எழுப்பும் வீணையை ஏந்திய திருக்கரங்களையும், "பயோதரமும்" அழகிய திருமுலைகளையும், "மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி " மண்மகள் இன்புறும் பச்சை வண்ணத்தையும் கொண்டு... மண்மகள் இன்புறும் இடமானது விவசாயம் செய்யும் பூமி... அவ்விடத்தில்தான் மண்மகள் இன்புறுகிறாள். போற்றப் படுகின்றாள். நமக்கெல்லாம் வாரி வாரி அன்னத்தை அளிக்கின்றாள்... அவள் இன்புறும் வண்ணம் பச்சை வண்ணம்.. பச்சை வண்ணத் திருமேனியைக் கொண்டவள் அன்னை மீனாட்சி... "மதங்கர் குலப் பெண்களில் எம்பெருமாட்டி தன் பேரழகே" மாதங்க மாமுனியின் குலப் பெண்ணாகத் தோன்றிய எங்கள் தலைவி அன்னை மீனாட்சியின் பேரழகை... "கடம்பாடவியில்" கடம்ப வனத்தில்... மதுரை மாநகரில் "கண் களிக்கும்படி கண்டு கொண்டேன்" எந்தன் கண்கள் இன்புறும் வண்ணம் கண்டேன்...
எத்தனை முறை பாடினாலும் சலிப்பு தட்டாமல் அன்னையானவள் மீனாட்சியாக நம் கண்கள் களிக்கும்படி காட்சி தருகின்றாள்.. நாமும் மதுரை மாநகரம் சென்று அன்னை மீனாட்சியின் பேரழகைக் கண்டு களிப்போம்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி

கருத்துகள் இல்லை: