செவ்வாய், ஜூன் 14, 2011

இரவின் மடியில்.......

2.
என்றைக்கும் இல்லாதத் திருநாளாக அன்றைக்கு எங்கள் இல்லத்துக் கருப்புத்
தொலைபேசி இனிமையான இசையை ஒலித்தது... இதென்ன விந்தை என்று வியந்தபடியே
எடுத்துக் காதில் வைத்தால் அந்தக் காதல் தேவதை..... அந்த கருப்புத்
தொலைபேசி அவளது அழகிய குரலைச் சுமந்து வந்தது. அன்று அது தானொலித்ததும்
இசையே.... சுமந்து வந்த குரலும் தேனிசையே...
"நான் உங்கள் குரலுக்கு ரசிகை" என்று சொன்னவளின் குரலுக்கு நான்
ரசிகனாகிப் போனேன்..
இந்த பூவுலகம் படைக்கப் பட்டது எங்களுக்காகத்தான் என்றும் நாங்கள் இருவர்
மட்டுமே இறைவனால் படைக்கப் பட்ட காதலர்கள் என்றும் பேசி மகிழ்ந்தோம்.
காதல் என்னும் பேருலகில் காலடி எடுத்து வைக்கும் கவிதைகளானோம்....
விண்ணும் மண்ணும் எங்களுக்காகவே.... எங்கள் காதல் மொழிகளைக்
கேட்பதற்காகவே காத்திருப்பதாகத் தோன்றியது....
அவள் மொழி கேட்டபின் என் தாய்மொழியில் நான் பிதற்றியவை எல்லாம் கவிதைகளாயின...
வள்ளுவனின் காமத்துப் பாலைத் தீண்டத்தகாது என்று ஒதுக்கி வைத்த நான்,
அவள் மூலம் அன்றைக்கு மூன்றாம் பாலின் சுவையுணர்ந்தேன்....
வானவியல் கற்றுத் தந்த பேராசிரியையால் தினமும் இரவில் வான் நோக்கி
கணக்குப் போடும் நண்பர்களுடன் அன்றைக்கு அமர்ந்திருந்தேன்... இன்றைக்கு
இந்த நட்சத்திரம் இந்தத் திசையில் தெரியும்... நிலவிலிருந்து இத்தனைத்
தொலைவில் கண்டால் குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காணலாம்... வானவியல்
கற்கும் ஆவலோடு இரவில் மொட்டைமாடியில் வாசம்....
அன்றைக்கென்னவோ பேராசிரியை கற்றுத் தந்த வானவியல் மறந்தேன்....
எனக்கென்னவோ நிலவு அவள் முகத்தைப் பிரதிபலித்தது.... எந்த ஒளியியலும்
கற்றுத்தராத புதிய பாடம் இது....
விண்மீன்களெல்லாம் அவள் உடுத்தியிருந்த ஆடையின்மேல் தீட்டப்பட்ட வண்ண
ஓவியங்களாகத் தெரிந்தன...
வானவியலுக்கும், ஒளியியலுக்கும் அப்பாற்பட்ட காதலியல் இது...
பார்க்குமிடங்களிலெல்லாம் அவளது தோற்றத்தையே கண்ட எனது கண்கள் தன்
பார்வைத்திறனை இழந்து விடவில்லை...
வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேச்சு....
தினமும் கல்லூரியில் கண்களால் பேச்சு....
அவள் செல்லும் வழியில் நின்று நோக்குவேன் யான்... என்னைக் கண்டதும் அவள்
முகத்தில் தோன்றும் குதூகலத்தைக் காண்பதற்காகவே.......
சிறுமுறுவல்.... பெருங்கவிதை அது....
விழிகளின் மொழிகளோ புதுக்கவிதை.....
நாட்கள் சென்றன....
காதல் வளர்ந்தது....
கவிதைகள் புதிது புதிதாய் பிறந்தன....
அவளின் வண்ணச்சீறடிகளைப் பற்றித் தாங்கும் மண்மகளைப் பாடினேன்....
அவளின் வண்ணக் கூந்தலை அழகு செய்யும் பூக்களைப் பாடினேன்....
அவளின்அழகுக் கரங்கள் அருமையாய் சுமக்கும் புத்தகங்களைப் பாடினேன்....
என்னோடு வந்தாள்...
எனக்காகவே வந்தாள்....
"வாழ்க்கை ஓடத்தில் பயணிக்க நீங்கள்தான் மாலுமி... நான் மட்டுமே பயணி..."
என்றாள்...
ஊடலே இல்லாத கூடலா???
எங்கள் காதலியலில் ஊடல் பாடம் கற்கும் வேளை வந்தது....

2 கருத்துகள்:

Kousalya Raj சொன்னது…

தொலைபேசி பேசி இந்த அளவுக்கு வளர்ந்து விட்டதா...ம்...ஒ.கே ஒ.கே அட அதுக்குள்ளே ஊடல் வந்துவிட்டது...

...தொடருகிறேன் !

இனிமையாக செல்கிறது.

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

ஹா... ஹா... ஹா... நான் போன தலைமுறையில் பிறந்திருந்தால் கடிதங்களைக் கொண்ட காதல் பிறந்திருக்கும்...
இன்றைய தலைமுறையில் பிறந்திருந்தால் அலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் என்று காதல் வளர்ந்திருக்கும்...
நான் வளர்ந்த காலத்தில் தொலைபேசி அங்காடிகள்தான் தெருக்கள் முழுக்க நிறைந்திருந்தன.... எனவே இந்தக் கதை அதைப் பற்றித் தொடர்கின்றது.....
நன்றி கௌசல்யா...