திங்கள், ஜூன் 13, 2011

இரவின் மடியில்.......

இரவு நீண்டு வெளிச்சத்தை முற்றும் இழந்து விட்டிருந்தாள் பூமித்தாய்...
இரவே உன் மடியில் நான் படுத்துறங்கும் வேளையில் மட்டும் அந்த நினைவுகள்
மீண்டும் முளைத்தெழுகின்றனவே.... உலகெங்கும் உல்லாசத்தைக் கொடுக்கும்
இரவுகள் எனக்கு மட்டும் வேதனையை அள்ளித் தரும் கொடுமையை
என்னவென்றுரைப்பது....
பூமாதா நீ வெளிச்சத்தை இழந்தாய்.... நான் நிம்மதி இழந்தேன்... உறக்கத்தை
இழந்தேன்....
பகலில் வெளிப்படாத அந்த நினைவுகள் உலகம் உறங்கும் இந்த இரவுகளில் மட்டும்
வெளிப்பட்டு என்னை வஞ்சிப்பதன் காரணம்???
நினைவுகளை சற்றே பின்னோக்கி நகர்த்தினேன் என் காதல் காலத்தைக் காண....
விளையாட்டுப் பருவம் அது...
வேடிக்கையே பொழுதாய் கழியும் தருணங்கள்....
பள்ளிக்குச் செல்லும்போது உடன் வரும் கல்லூரி அண்ணன்மார்கள், உடன்
பயிலும் பெண்களைப் பற்றி விசாரிக்கும் போது கேவலமாய் அவர்களைப் பார்த்த
காலமது...
ஆங்காங்கே நின்று கண்களாலேயே கடலை போடும் மாமேதைகளின் தனி உலகத்தைப்
பற்றி வியந்த நேரமது....
நாம் என்றைக்கும் இந்த பெண்களின் கண்வலைகளில் சிக்கி விடக்கூடாது
என்பதில் உறுதியாய் இருந்தது மனது.... (நம்மை எவள் ஏறெடுத்துப் பார்க்கப்
போகிறாள் என்ற எண்ணமும்...)
இந்த இதயத்தை உடைப்பதற்கும் புறப்பட்டு வந்தன இரு விழிகள்...
பள்ளி முடிந்து கல்லூரிப்பருவம்...
கலைகளின் திருவிழா....
கலைகளை ஊக்குவிக்கும் திறமைகள் திருவிழா....
கலைப்போட்டிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன....
ஓவியப்போட்டிக்கு நாம் கிறுக்கியிருந்த ஓர் ஓவியம் பரிசுக்குரியதாய் ஆனது
ஆச்சரியம்...
சொற்பொழிவுப் போட்டி.....
அனைத்துத் தரப்பினரும் தங்கள் சொற்பொழிவைப் பொழிய, நம்மை அழைத்தபோது மேடை
ஏறினேன்... என்னை மறந்தேன்... கொடுத்த தலைப்பு "வல்லரசை உருவாக்குவதில்
இளைஞர்களின் பங்களிப்பு"
"ஊழலை ஒழிப்பதில்தான் வல்லரசின் அடித்தளம்... ஊழலை ஒழிப்பதற்கு இளைஞர்கள்
முன்வந்தால் வல்லரசை உருவாக்கி விடலாம்" என்ற சாராம்சத்தில் மொழிந்தேன்..
வெடித்தேன்....
உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது... கரவொலிகள் ஒலித்தன... மேடையை
விட்டு இறங்கி எனது இருக்கைக்கு வரும் வழியில்தான் சந்தித்தேன் அந்த
இருவிழிகளை.... என்னைக் கொன்ற அந்த அம்புகளை.....
இதென்ன.......
எனக்குள் ஓர் மாற்றம்....
எனது விழிகளும் என்னையறியாது இடப்பக்கம் திரும்பி அவளைத் தேடின....
அவள் யார் அறியேன்... அவள் பேரென்ன அறியேன்.... ஆயினும் இவள் ஏன் என்னை
ஈர்க்கிறாள்... ? அதுவும் அறியேன்....
அவளும் நம்மை நோக்கிட விழியின் மொழிகள் புரிந்ததில், எனது மொழிகளை நான்
மறந்து போனேன்...
சற்று நேரத்திற்கெல்லாம் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப் பட்டன....
சிறுகதை, கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில்
பரிசுக்குத் தேர்வானோர் பட்டியலில் எனது பெயர் வாசிக்கப் பட, அவள் மிக
உற்சாகமாய் கரங்களைத் தட்டினாள்....
அரங்கத்தோரில் அத்தனைக் கரவொலிகளின் மத்தியிலும் அவளது கரங்களிலிருந்து
எழுந்த ஒலிகள் தனியாக என் செவிகளில் வந்து விழுந்தன....
கண்களாலேயே வாழ்த்து சொன்னாள்.... அந்த கவிதையின் பொருளும் புரிந்தது....
என்னை மறந்து நின்றேன்...
இதயத்தை உடைத்த இரும்பு விழிகளை, அவளது இனிக்கும் விழியின் மொழிகளை
அறிந்த மனது அவளையே பார்த்துக் கொண்டிருக்கத் துடித்தது.....
விழா முடிந்தது....
அவள் சென்று விட்டாள்....
இனி அவளை எங்கே காண்பது?
காதலிக்கும் தோழர்களின் மனத்தவிப்பு அன்றுதான் புரிந்தது...
நானும் அவளும் ஒரே கல்லூரியானாலும், காணும் பெண்டிரில் அவளை எப்படிக்
கண்டுபிடிப்பது??
சிரமமான காரியமல்லவா??
பூவையரைத் தேடிச்செல்லும் காளையரைக் கிண்டலடித்த மனது இன்று ஒரு
பூவைக்காகத் தவித்தது....
தவித்த மனதின் தாகத்தையும் அவளே தீர்த்தாள்..
நோயுமானாள் நோய்க்கு மருந்துமானாள் என்னும் பொருளில் வள்ளுவன் பாடிய
குறளுக்கு இலக்கணமானாள்... என் குரலுக்கு ரசிகையானாள்..
பசலை என்னைப் பற்றுதற்கு முன்னர், அவளது அழைப்பு வந்தது எங்கள்
இல்லத்துத் தொலைபேசிக்கு..

6 கருத்துகள்:

Kousalya Raj சொன்னது…

கவிதை நடை அழகு...! சொற்களை கையாண்ட விதம் மிக ரசிக்க வைத்தது...

இறுதியில் அடுத்து என்ன ஆகும் என்ற ஆவலை தூண்டிவிட்டது !

வாழ்த்துக்கள்

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

நன்றி.....கௌசல்யா....

Blossom in your Smile சொன்னது…

very nice...your love for tamil..amazing..good work keep it up
karthika

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

thanks akka....

kamal சொன்னது…

ஒன்று முதல் பாகம் ஏழு வரை படித்த பின்பு நானே இந்த கதையின் நாயகன் ஆனேன்.

கடலின் ஆழத்தில் மூழ்கிய பொருள் (காதல்) பின்பு சூழப்பட்டது "இருளில்" (கண்டறியப்படாத ஆழம்)
இங்கு நாயகனின் "இரவின் மடியில்" ...!

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

நன்றி தலைவர் அவர்களே.... தங்கள் பாராட்டுக்குப் பின்னர் வேறு என்ன வேண்டும்??? தங்களைக் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..