வெள்ளி, ஜனவரி 13, 2012

வா வா தை மகளே!!!


எற்றைக்கும் குன்றாத புகழோடு - எமை
ஏற்றாளும் எம் அன்னைத் தமிழோடு
வற்றாத நல்லுள்ளம் தான் கொண்டு நமைப்
பெற்றோரும்  உற்றாரும் வாழ்ந்தோங்க
செந்தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் அது
சிந்தையினில் தந்திடுமாம் புத்துணர்வு.

வளமோடு வாழ்வு தர வா வா தை மகளே!
உளமெலாம் பொங்கும் வழி தா தா தமிழ் மகளே!!
புலியெனவே தமிழ் மறவர் தமது நிலையறிந்திடவே
வலிமை தரும் நல்ல தினம் தந்திடு எம் தை மகளே!.

செந்தமிழில் வைதாலும் நல்வரமே தந்திடுவான்
சுந்தரனாம் எங்களன்பு சங்கரனின் தாள் பணிதும்.
வல்வினைகள் தன்னோடு வருவினைகள் மாய்த்திடவே
நல்லதிந்த நாளினிலே நமக்கருளைத் தந்திடுவான்..

மலைமகளாம் எங்களன்னை மீனாளின் தாள் பணிதும்.
கலைகளெலாம் தோன்றிடவே காத்தருள்வாள் கடைக்கண்ணால்..
மாமதுரை தனையாளும் மதங்கர் குலத் தலைமகளே
தாமாளும் தண்டமிழர் நாடிதனைக் காத்திடுவாள்..

தரணியில் தமிழிசை பாடி தைமகளை வரவேற்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
அடியேன் மற்றும் இல்லத்தாரின் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை: