வியாழன், ஜனவரி 26, 2012

பாரதக் குடியரசே வாழி!

பாரதக் குடியரசே வாழி!

எங்கும் நிறைந்தருள் தேவி
எனையாளும் பாரத தேவி
நின்றன் இணையடி போற்றும்
கந்தன் வாய்மொழி கேளாய்...

தன்னிலை மறந்தோர் கையில்
நின்றனைத் தந்தோம் யாமே!
தந்ததால் வந்ததே தொல்லை
சொந்தமாம் பாரதம் அவர்க்கே!

எவ்விடம் காணினும் செம்மையென
அவ்விடம் அவரே மொழிந்தார் ஆயின்
இவ்விடம் காணும் ஏழ்மை தனை
எவ்விடம் போவெனச் சொல்வேன்?

அன்னம் சமைத்திட அரிசி அதுபெற
கன்னம் வைத்திடும் கள்வர் மிகை
பொன்னும் பொருளும் போகும் இவ்
வின்னல் களைவார் யாரோ?

பொய்யொடு களவும் சூதும் இங்கு
மெய்யென உள்ளது கண்டே
இன்புறும் மாந்தர் கண்டு இன்று
என்பு தோலானோம் யாமே!

முடியாட்சி முடிந்து  இங்கு
குடியாட்சி வந்த பின்னும்
முடியாத சோகம் இன்னும்
வடியாத நீராய்த் தானே!

மொழியாலே பிளவு சொல்லி
இழிவான நிலைக்குச் செல்லும்
பழி தாங்கும் பரத தேவி
சுழி மீளும் நாள்தான் யாதோ?

எங்கும் சுதந்திரம் என்றிட்ட போது
பொங்கு தமிழர்க்கு இல்லையே ஆழியில்!
நம்மவர் செல்லும் தோணி மீளும்
நம்பிக்கை யில்லை நிதமே!

"என்னவோ குடியரசு தினமாம்"
எதிர் வீட்டுப் பையன் சொன்னான்.
"என்னடா அது?" வென வினவ
"அன்னதும் அரசினர் விடுப்பே"
என்றவன் மொழிந்திடல் கேட்டு
இன்றைக்கு நகைத்தோம் யாமும்
இன்னலைத் தீர்த்திடும் நாளை
என்றைக்குக் காண்போம் நாமும்?

வல்லவர் மட்டும் வாழும் என்றும்
நல்லவர் தீதே காணும் எங்கள்
பரதக் குடியரசே வாழி.......
வாழ்க பாரதம்...

கருத்துகள் இல்லை: