வெள்ளி, ஏப்ரல் 19, 2019

ஒரு தாயின் கண்ணீர்...


ஒரு தாயின் கண்ணீர்...

எழுத்து: மு.கந்தசாமி நாகராசன், சுப்பிரமணியபுரம்.

மலையடிவாரத்தில் கண்ணீரோடு தென்பட்ட அந்தத் தாய் மிகுந்த துக்கத்தோடு காணப்பட்டாள்.  உலகுக்கே காப்பாளனாக இருப்பான் என்று முன்னறிவிக்கப்பட்ட தன் மகன் கொடுங்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட வேதனையை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. கண்ணீர்ப் பெருக்கெடுக்க நடைபெறும் காட்சிகளைக் காணலானாள்.
பட்டினி கிடந்த உடம்பு, சாட்டைகளால் அடிக்கப்பட்டு வேதனையுடன், தன் எடையை விட பன்மடங்கு அதிக எடைகொண்ட அந்த மரச் சிலுவையைப் பாரம் தாளாமல் தூக்கிக் கொண்டு செல்லும் தன் மகனைக் கண்டதும் அவள் இதயம் நொறுங்குண்டது.
“என் செல்வமே... இந்தக் காட்சியைக் காணவா உன்னை நான் பெற்றேன்.. தெய்வமே என்ன இது சோதனை.....” என்று அவள் துடிதுடித்தாள். பன்னிரண்டு வயதில் ஆலயத்தில் உள்ள பெரிய மனிதர்களுடன் அவர்களுக்கு இணையாக வேதங்களைக் குறித்து விவாதித்த போது பெருமையடைந்த மனது, இறைவன் திருவருளால் தன் மகன் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைக் கண்டு பெருமையடைந்த மனது, தன் மகன் செல்லும் வழிகள் எல்லாம் அவன் போதனைகளைக் கேட்க ஓடி வரும் மக்களைக் கண்டு பெருமையடைந்த மனது, இன்று இறைவனுக்கு எதிராவும்  அரசனுக்கு எதிராகவும் குற்றமிழைத்தான் என்று மரணதண்டனை விதிக்கப்பட்டமை கண்டு தாங்க முடியவில்லை.
உன் கேள்விகளுக்குப் பதிலுரைக்கும் பெரியோர் இல்லையே மகனே.... உனைக் காண ஓடிவரும் கூட்டத்தினருக்கும் உனக்களிக்கப்பட்ட தண்டனையைத் தடுக்க திராணியில்லையே மகனே....
உலகின் பாரம் சுமப்பேன் என்ற உன்னை சிலுவை சுமக்கச் செய்த மதியீனரை மரணம் கூட மன்னிக்காதே மகனே...
மாந்தர் உள்ளம் தவிர்த்து நீ களவாடியது என்ன மகனே?? இக்கள்வருடனே உனக்கு மரணதண்டனையா??
“இதோ போகின்றானே.... இவன் என் மகன்” என்று புலம்பித் துடித்துக் கொண்டே பின் தொடர்ந்தாள்....
“மகனே..... நீ நம் இனத்திற்குத் தலைவனாவாய் என்று நீ குழந்தையாய் இருந்தபோது உன் பாதங்களை முத்தமிட்ட பெரியோர்களின் வாக்கு என்னவாயிறு மகனே....”
“பலமுறை உன்னைத் தேடி வந்தேனே... என் மகனே.... என் தந்தையின் விருப்பத்தின்படி செய்கிறவரே என் தாய் என்று என்னைக் காண மறுத்து விட்டாயே என் மகனே....”
            “அரச கிரீடம் தரிப்பாய் என்று ஆசை கொண்டேனே என் மகனே....  முட்கிரீடம் உனக்களித்து உன்னை இரத்தத்தில் காணவா வாழ்ந்தேன்....”
            அழுகையுடன் பின் தொடர்கின்றாள்..... 
            கொல்கதா மலையுச்சி......
            அன்னையின் மைந்தன் சுமந்து வந்த சிலுவையைக் கீழே கிடத்தி அதன் மேல் அவனைக் கிடத்தி, அவனது கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்படுகின்றன.
            ஒவ்வொரு அடியும் அன்னையின் இதயத்தில் சம்மட்டியாய் இறங்குகின்றது...
            சிலுவையின் மேல் இவன் இயேசு... யூதர்களின் அரசன் என்று எழுதிய சீட்டு.... சிலுவையில் தொங்கிய வண்ணம் இரு கள்வர்களுக்கு மத்தியில் தன் மைந்தன்...
            அவன் கண்கள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன..... வலியால் துடிக்கின்றான்... தாயால் காண இயலாத வேதனை.... ஓடி வந்து அருகில் நின்று துடிக்கின்றாள்....
            தன் தாயைக் கண்டதும் ஈசனின் மனவேதனை அதிகரிக்கின்றது.... தாயே.... முப்பத்து மூன்று ஆண்டுகள் என்னை வளர்த்தாயே.... கண்ணின் மணி போல் பாதுகாத்தாயே.... உனக்கென்று நான் என்ன விட்டுச் செல்கின்றேன் தாயே..... எல்லாம் முடிந்து விட்டது தாயே.... என் அன்புத் தாயே... உனக்கென்று நான் என்ன தர முடியும்.....
            தன் அன்புக்கினிய தோழனை அழைத்தான்.... “அம்மா.... அதோ உம் மகன்... நண்பனே இதோ உன் தாய்”  என்று அவர்களை இணைத்தான்...
            அம்மா... இத்தனை நாட்கள் என்னை இதயத்தில் சுமந்தீர்கள்.... இனி இவன் உங்களுக்கு ஆறுதலாக இருப்பான் அம்மா.... எனக்காகக் கலங்க வேண்டாம்..... என் தந்தையின் விருப்பப்படியே இது நடந்தது அம்மா... கலங்காதே தாயே....
            “உன் இதயத்தை ஒரு பட்டயம் உருவிப் போடும்” என்று தன் மகன் சிறுவயதில் இருக்கும்போது ஒரு பெரியவர் கூறிய சொல் அன்னையின் நினைவுக்கு வந்தது.
            மகனே... இதுதானா அந்தப் பட்டயம்????? ஊரெல்லாம் சென்று யூத இனத்து அரசனாவான் என்று முன்னறிவிக்கப்பட்டாயே.... இன்று இந்த சிலுவை மரத்தில் இவன் யூதர்களின் அரசன் என்று கேலியாக தீட்டியுள்ளார்களே..... மகனே.....
            சிறுவயதிலெல்லாம் உனக்கான தீங்குகள் முன்னறிவிக்கப்பட்டு உன்னைக் காக்க நாங்கள் எங்கெங்கெல்லாமோ திரிந்தோமே..
            இன்று உன்னைக் காக்கமுடியாமல் தவிக்கின்றேனே.. மகனே...
“பரலோகத் தந்தை மகன் இன்று
படுபாவி...
படு பாவங்கள் செய்திட்ட
பரபாஸோ நீதிமான்...
அன்பு வழி ஈந்த
உனையே சிலுவையேற்றிய
உலகத்தில் என்ன நீதியுண்டு மகனே!
ஈசனையே மகவாய்
ஈன்றேனென்ற பெருமை கொண்ட
இதயத்தை
ஈட்டியால் துளைத்துப் போட்டனரே!
கொடிய பிலாத்துவே...
என் மகனுக்கு
எதிராய் சதிசெய்த கொடுங்கூட்டமே...
இன்னமும் என் மகன்
இரக்கமே கொண்டுளான்....
தந்தையே இவர்களை
தண்டனைக்குத் தப்பிவியும் என்றானே..
அறியீரா மூடரே....”

அன்னையின் கண்ணீர் புவிதொட்டது..... விண்ணகமும் மண்ணகமும் அன்னையின் சோகம் கண்டு ஆட்டம் கண்டது...
தாயின் வேதனை ஈசனின் மனதை உருக்கியது....
“அம்மா .... எனக்காக அழவேண்டாம்.... அனைத்தும் தந்தையின் விருப்புடனே நடக்கின்றது அம்மா....”
கொடியோன் ஒருவன் வந்தான்....
“இன்னுமா நீ உயிரோடு இருக்கின்றாய்?” ஈட்டியை எடுத்து விலாவில் குத்தினான்...
வலி தாளாது துடித்தான் ஈசன்...
“தந்தையே.... எனை ஏன் கைவிட்டீர்?” அவன் எழுப்பிய குரல் அகிலமெங்கும் ஒலித்தது...
அண்டசராசரங்கள் ஸ்தம்பித்தன...
“எல்லாம் முடிந்தது.... தந்தையே.... எனை ஏற்றுக் கொள்ளும்...” அன்புத் தாயின் பார்வையில் அன்பெனும் பணியாற்ற வந்த ஈசன் உயிர் அந்த சிலுவையில் பிரிந்தது....
அன்னையின் கண்களை யார் துடைக்கக் கூடும்??
அன்னைக்கு யார் ஆறுதல் சொல்லக் கூடும்??
மண்ணுலகோர் உய்ய புதியதோர் நீதி சொன்ன உத்தமனின் தாய் அழுதால் உலகம் தாங்குமா?
அன்பு மட்டுமே உலகநீதி.... இதுவே அவன் கொள்கை....
உன்னை அடித்தால், மகிழ்வோடு ஏற்றுக் கொள்.... உன்னை அலைக்கழித்தால் மகிழ்வோடு பின் தொடர்.... எல்லாம் வல்ல ஈசன் உலகத்தில் நீர் சுமக்கும் பாடுகளுக்கு மறுமையில் நன்மை அளிப்பார்....
பாவங்களை வெறுத்தொதுக்குங்கள்.... பாவிகளை அல்ல.....
அன்றொரு நாள் ஒரு விபச்சாரியைக் கொலை செய்யச் சென்ற கூட்டத்தாரை நோக்கி...
“உங்களில் யார் மனத்தளவிலும் மாசில்லாதவனோ அவனே இவளைக் கல்லெறியும் தகுதியுடையான்” என்று வெட்கித் தலைகுனியச் செய்து அவளை அப்பாவிகளிடமிருந்தும், பாவத்திடமிருந்தும் மீட்டான்...
ஏழைகள் மீது இரக்கம் காட்டவும், தீண்டாமை எனும் துயர் ஒழிக்கவும் தானே முன்னோடியாயிருந்து அவ்வண்ணமே வாழ்ந்து காட்டிய உத்தமன்...
இவன் என் மகனல்லவா??
பன்னிரண்டு வயதில், ஆகமங்கள் அனைத்தையும் இவனுக்குப் போதித்தது யார் என்று அன்றைய நாளில் எனைக் கேட்ட பெரியோர் முன்னிலையில் பேருவகை அடைந்தேன்...
மகனே..... என்னை மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்று விட்டாயே....
உனை நம்பிய இக்கூட்டத்தார் இனி என்றுனைக் காண்பார் மகனே....
உன் தந்தையின் விருப்பு அதுவென்றால் அவ்வாறே ஆகட்டும் என்றாயே மகனே...
உலகோர் துயர் உன் தந்தைக்கு எட்டாதா?
என் மகனைப் பிரிந்து வாடும் என் கண்ணீர் உன் தந்தையின் பாதங்களைத் தொடாதா?
உனை மட்டுமே நம்பி உலகின் காரியங்கள் விடுத்து வந்த உத்தம அடியார்களின் துக்கம் உன் தந்தையின் செவிகளில் விழாதா மகனே....
அன்னையின் கண்ணீர்... அகிலத்தின் கண்ணீர்.....
உத்தமியின் கண்ணீர்.... உலகத்தின் கண்ணீர்....
பத்தினியின் கண்ணீர்.... பக்தர்களின் கண்ணீர்....

அன்னையின் கண்ணீர் துடைக்க ஈசன் மீண்டு வருவான்..... அவன் வரும் நாளைக் காண அன்னை எதிர்பார்த்திருந்தாள்....
அன்னை அவனைக் கண்ட காட்சி மற்றொரு பதிவில்...
வாழ்க ஈசன் புகழ்..... வளர்க அன்னையின் அன்பு....


கருத்துகள் இல்லை: