புதன், ஏப்ரல் 24, 2019

அன்னை ஈன்ற மரணத்தை வென்ற ஈசன்...


அன்னை ஈன்ற மரணத்தை வென்ற ஈசன்...
(அருட்தந்தை திரு. ஜோசப் அவர்களின் உதவியுடன்...)
எழுத்து - மு. கந்தசாமி நாகராஜன்
          சுப்பிரமணியபுரம்.

இறை மைந்தனின்
இரத்தம் புவி தொட்டது....
இரக்கமே வடிவான ஈசன்
இறந்தானென்று சொல்லக் கேட்டு
பிறந்தார் முதல் துறந்தார் வரை துடித்தனர்.
அன்னையோ அருகிருந்து அழுது கொண்டிருந்தாள்.
இறைவனே..... என் திருமகன் மீது உம் திருமுகம் காட்டுவாயா....
அவன் அடைந்த வேதனை என்னை சுக்குநூறாய் உடைத்துவிட்டதய்யா...
நீரே ஆணையிட்டீர் உம் மகனை சுமக்க....
இன்றோ நீரே அவனை என்னிடமிருந்து பறித்து விட்டீரே....
தன்னை அடித்த பாவிகளின் தாயாக என்னை இருத்திய மைந்தன் மீது உம் திருமுகம் காட்டுமய்யா...
அன்னையின் கண்ணீர் நிற்கவில்லை..
மாந்தர்களின் நேசன்
மண்ணின் காவலன்
அன்புக்குரியவன்
அவனியின் தலைவன்
ஈசனின் உயிர் நீத்த உடல் அந்தக் குருசிலிருந்து இறக்கப் பட்டது.
அன்னையின் மடிமீது அமர்த்தப்பட்டது..
அவன் அடைந்திருந்த காயங்கள்....
இரத்தத்தால் நிறைந்திருந்த திருமுகம்....
முட்கள் பதிக்கப்பட்ட சிரசு...
கருணையே உருவான கண்கள் இரத்தக் குளங்கள்....
அடிக்கப்பட்டதால் சருமம் கிழிந்து..... எலும்புகள் தெரிந்து....
அன்னையின் மடிமீது கிடத்தப்பட்ட ஈசனை...
அவன் அடியாரெல்லாம் வந்து கண்டனர்....
அன்னையின் கண்ணீரைக் கண்டதும் அவர்கள் கண்களும் குளமாகின...
தாயே... உன் திருக்குமரனைக் காக்கத் தவறிய பாவிகள் நாங்கள்....
எங்கள் மேல் இரக்கம் காட்டு.....
கதறுகின்றனர்.....
அன்னை அமைதியாக இருக்கின்றாள்...
ஈசனின் பூதவுடல் அவளிடமிருந்து பெறப்பட்டு அடக்கம் செய்யப்படுகின்றது....
தான் முன்னறிவித்த வண்ணம் தன் மகன் மீண்டு வருவான் என்று அன்னை காத்திருக்கின்றாள்...
அவளோடு அவன் அடியாரும்....
அன்னையின் காத்திருப்பு ஆண்டவன் அறியாததா?
மூன்றாம் நாள்....
ஈசனின் கல்லறை திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்த அடியார்கள் திக்கற்றுத் தவித்தனர்...
அடியார்க் கூட்டத்தில் அன்புப் பெண்ணொருத்தி....
ஆண்டவனைக் காணாமல் அரற்றிக் கொண்டிருந்தாள்...
அவள் பின்னே வந்து நின்றான் ஈசன்...
அவனே தன் ஆண்டவன் என்று அறியாத அன்புப் பெண்ணும்....
தன் ஆண்டவனைத் தேடுகிறேன் என்று அழுகையோடே கூறினாள்....
அவள் பெயரை ஆண்டவன் அன்போடு உதிர்த்த போது
அவனை உற்று நோக்கி ஈசனென்று கண்டாள்....
நான் மரணத்தை வென்று எழுந்தேன்.....
என் தந்தையின் விருப்பம் நிறைவேற்றினேன்...
விரைவில் என் தந்தை இருக்குமிடம் செல்வேன்...
நம் அடியார்க்கு இதை அறிவித்து விடு....
பகர்ந்த ஆண்டவன் உடன் மறைந்தான்..
தான் கண்ட தெய்வம் குறித்து
அடியார்க் கூட்டம் வந்து பகர்ந்தாள்
அன்புப் பெண்.....
அக்கூட்டத்திலே அன்னையும் வீற்றிருந்தாள்...
தன் மகன் மீண்ட செய்தி கேட்டு ஆனந்தம் கொண்டாள்...
இறைவன் திருவருளால் மகன் மீள்வான் என்பதில் அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள்..
யூதருக்கு அரசனாக...
மாந்தருக்கு ஆண்டவனாக....
என்றென்றும் நிலைத்திருக்கும் ஈசன்....
என் மகன் உயிர்த்தான்....
அன்னை மகிழ்ந்தாள்....
அண்டம் மகிழ்ந்தது....
உயிரோடு எழுந்த ஈசன்.....
அன்பர் அனைவருக்கும் காட்சி தந்தான்....
காட்சி தந்த வேளையே.... தன் தந்தையிடம் ஏகிச் சென்றான்...
மனுக்குலம் வாழ நல்வழி புகன்ற ஈசனின் அன்னை......
தன் மைந்தனுக்கு மட்டுமல்லாது....
மாந்தர் அனைவருக்கும் தாயாக.....
வீற்றிருந்து அருள் புரிகின்றாள்.....
அன்னையின் திருவடி போற்றி...... ஆண்டவன் திருநாமம் போற்றி.....
வாழ்க.... வாழ்க....

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான பதிவு..வாழ்த்துக்கள் அண்ணா.. வேறு கோணத்தில் அழகாக சிந்துத்துள்ளீர்கள்..

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

நன்றி.... அனைத்தும் இறைவன் திருவருளே.... தங்கள் பெயர்?