திங்கள், டிசம்பர் 23, 2019
வியாழன், டிசம்பர் 12, 2019
புதன், ஏப்ரல் 24, 2019
அன்னை ஈன்ற மரணத்தை வென்ற ஈசன்...
அன்னை ஈன்ற
மரணத்தை வென்ற ஈசன்...
(அருட்தந்தை
திரு. ஜோசப் அவர்களின் உதவியுடன்...)
எழுத்து - மு. கந்தசாமி நாகராஜன்
சுப்பிரமணியபுரம்.
இறை மைந்தனின்
இரத்தம் புவி
தொட்டது....
இரக்கமே வடிவான
ஈசன்
இறந்தானென்று
சொல்லக் கேட்டு
பிறந்தார் முதல்
துறந்தார் வரை துடித்தனர்.
அன்னையோ
அருகிருந்து அழுது கொண்டிருந்தாள்.
இறைவனே..... என்
திருமகன் மீது உம் திருமுகம் காட்டுவாயா....
அவன் அடைந்த
வேதனை என்னை சுக்குநூறாய் உடைத்துவிட்டதய்யா...
நீரே ஆணையிட்டீர்
உம் மகனை சுமக்க....
இன்றோ நீரே அவனை
என்னிடமிருந்து பறித்து விட்டீரே....
தன்னை அடித்த
பாவிகளின் தாயாக என்னை இருத்திய மைந்தன் மீது உம் திருமுகம் காட்டுமய்யா...
அன்னையின்
கண்ணீர் நிற்கவில்லை..
மாந்தர்களின்
நேசன்
மண்ணின் காவலன்
அன்புக்குரியவன்
அவனியின் தலைவன்
ஈசனின் உயிர்
நீத்த உடல் அந்தக் குருசிலிருந்து இறக்கப் பட்டது.
அன்னையின்
மடிமீது அமர்த்தப்பட்டது..
அவன்
அடைந்திருந்த காயங்கள்....
இரத்தத்தால்
நிறைந்திருந்த திருமுகம்....
முட்கள்
பதிக்கப்பட்ட சிரசு...
கருணையே உருவான
கண்கள் இரத்தக் குளங்கள்....
அடிக்கப்பட்டதால்
சருமம் கிழிந்து..... எலும்புகள் தெரிந்து....
அன்னையின்
மடிமீது கிடத்தப்பட்ட ஈசனை...
அவன்
அடியாரெல்லாம் வந்து கண்டனர்....
அன்னையின்
கண்ணீரைக் கண்டதும் அவர்கள் கண்களும் குளமாகின...
தாயே... உன்
திருக்குமரனைக் காக்கத் தவறிய பாவிகள் நாங்கள்....
எங்கள் மேல்
இரக்கம் காட்டு.....
கதறுகின்றனர்.....
அன்னை அமைதியாக
இருக்கின்றாள்...
ஈசனின் பூதவுடல்
அவளிடமிருந்து பெறப்பட்டு அடக்கம் செய்யப்படுகின்றது....
தான்
முன்னறிவித்த வண்ணம் தன் மகன் மீண்டு வருவான் என்று அன்னை காத்திருக்கின்றாள்...
அவளோடு அவன்
அடியாரும்....
அன்னையின்
காத்திருப்பு ஆண்டவன் அறியாததா?
மூன்றாம்
நாள்....
ஈசனின் கல்லறை திறக்கப்பட்டிருந்ததைக்
கண்டு திகைத்த அடியார்கள் திக்கற்றுத் தவித்தனர்...
அடியார்க்
கூட்டத்தில் அன்புப் பெண்ணொருத்தி....
ஆண்டவனைக்
காணாமல் அரற்றிக் கொண்டிருந்தாள்...
அவள் பின்னே
வந்து நின்றான் ஈசன்...
அவனே தன் ஆண்டவன்
என்று அறியாத அன்புப் பெண்ணும்....
தன் ஆண்டவனைத்
தேடுகிறேன் என்று அழுகையோடே கூறினாள்....
அவள் பெயரை
ஆண்டவன் அன்போடு உதிர்த்த போது
அவனை உற்று
நோக்கி ஈசனென்று கண்டாள்....
நான் மரணத்தை
வென்று எழுந்தேன்.....
என் தந்தையின்
விருப்பம் நிறைவேற்றினேன்...
விரைவில் என்
தந்தை இருக்குமிடம் செல்வேன்...
நம் அடியார்க்கு
இதை அறிவித்து விடு....
பகர்ந்த ஆண்டவன்
உடன் மறைந்தான்..
தான் கண்ட
தெய்வம் குறித்து
அடியார்க்
கூட்டம் வந்து பகர்ந்தாள்
அன்புப்
பெண்.....
அக்கூட்டத்திலே
அன்னையும் வீற்றிருந்தாள்...
தன் மகன் மீண்ட
செய்தி கேட்டு ஆனந்தம் கொண்டாள்...
இறைவன்
திருவருளால் மகன் மீள்வான் என்பதில் அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள்..
யூதருக்கு
அரசனாக...
மாந்தருக்கு
ஆண்டவனாக....
என்றென்றும்
நிலைத்திருக்கும் ஈசன்....
என் மகன்
உயிர்த்தான்....
அன்னை
மகிழ்ந்தாள்....
அண்டம்
மகிழ்ந்தது....
உயிரோடு எழுந்த
ஈசன்.....
அன்பர்
அனைவருக்கும் காட்சி தந்தான்....
காட்சி தந்த
வேளையே.... தன் தந்தையிடம் ஏகிச் சென்றான்...
மனுக்குலம் வாழ
நல்வழி புகன்ற ஈசனின் அன்னை......
தன் மைந்தனுக்கு
மட்டுமல்லாது....
மாந்தர்
அனைவருக்கும் தாயாக.....
வீற்றிருந்து
அருள் புரிகின்றாள்.....
அன்னையின்
திருவடி போற்றி...... ஆண்டவன் திருநாமம் போற்றி.....
வாழ்க....
வாழ்க....
வெள்ளி, ஏப்ரல் 19, 2019
ஒரு தாயின் கண்ணீர்...
ஒரு தாயின் கண்ணீர்...
எழுத்து: மு.கந்தசாமி நாகராசன், சுப்பிரமணியபுரம்.
மலையடிவாரத்தில்
கண்ணீரோடு தென்பட்ட அந்தத் தாய் மிகுந்த துக்கத்தோடு காணப்பட்டாள். உலகுக்கே காப்பாளனாக இருப்பான் என்று
முன்னறிவிக்கப்பட்ட தன் மகன் கொடுங்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு
மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட வேதனையை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
கண்ணீர்ப் பெருக்கெடுக்க நடைபெறும் காட்சிகளைக் காணலானாள்.
பட்டினி
கிடந்த உடம்பு, சாட்டைகளால் அடிக்கப்பட்டு வேதனையுடன், தன் எடையை விட பன்மடங்கு
அதிக எடைகொண்ட அந்த மரச் சிலுவையைப் பாரம் தாளாமல் தூக்கிக் கொண்டு செல்லும் தன்
மகனைக் கண்டதும் அவள் இதயம் நொறுங்குண்டது.
“என்
செல்வமே... இந்தக் காட்சியைக் காணவா உன்னை நான் பெற்றேன்.. தெய்வமே என்ன இது
சோதனை.....” என்று அவள் துடிதுடித்தாள். பன்னிரண்டு வயதில் ஆலயத்தில் உள்ள பெரிய
மனிதர்களுடன் அவர்களுக்கு இணையாக வேதங்களைக் குறித்து விவாதித்த போது பெருமையடைந்த
மனது, இறைவன் திருவருளால் தன் மகன் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைக் கண்டு
பெருமையடைந்த மனது, தன் மகன் செல்லும் வழிகள் எல்லாம் அவன் போதனைகளைக் கேட்க ஓடி
வரும் மக்களைக் கண்டு பெருமையடைந்த மனது, இன்று இறைவனுக்கு எதிராவும் அரசனுக்கு எதிராகவும் குற்றமிழைத்தான் என்று
மரணதண்டனை விதிக்கப்பட்டமை கண்டு தாங்க முடியவில்லை.
உன்
கேள்விகளுக்குப் பதிலுரைக்கும் பெரியோர் இல்லையே மகனே.... உனைக் காண ஓடிவரும்
கூட்டத்தினருக்கும் உனக்களிக்கப்பட்ட தண்டனையைத் தடுக்க திராணியில்லையே மகனே....
உலகின்
பாரம் சுமப்பேன் என்ற உன்னை சிலுவை சுமக்கச் செய்த மதியீனரை மரணம் கூட மன்னிக்காதே
மகனே...
மாந்தர்
உள்ளம் தவிர்த்து நீ களவாடியது என்ன மகனே?? இக்கள்வருடனே உனக்கு மரணதண்டனையா??
“இதோ
போகின்றானே.... இவன் என் மகன்” என்று புலம்பித் துடித்துக் கொண்டே பின்
தொடர்ந்தாள்....
“மகனே.....
நீ நம் இனத்திற்குத் தலைவனாவாய் என்று நீ குழந்தையாய் இருந்தபோது உன் பாதங்களை
முத்தமிட்ட பெரியோர்களின் வாக்கு என்னவாயிறு மகனே....”
“பலமுறை
உன்னைத் தேடி வந்தேனே... என் மகனே.... என் தந்தையின் விருப்பத்தின்படி செய்கிறவரே
என் தாய் என்று என்னைக் காண மறுத்து விட்டாயே என் மகனே....”
“அரச கிரீடம் தரிப்பாய் என்று ஆசை கொண்டேனே என்
மகனே.... முட்கிரீடம் உனக்களித்து உன்னை
இரத்தத்தில் காணவா வாழ்ந்தேன்....”
அழுகையுடன் பின் தொடர்கின்றாள்.....
கொல்கதா மலையுச்சி......
அன்னையின் மைந்தன் சுமந்து வந்த சிலுவையைக் கீழே கிடத்தி
அதன் மேல் அவனைக் கிடத்தி, அவனது கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு அடியும் அன்னையின் இதயத்தில் சம்மட்டியாய்
இறங்குகின்றது...
சிலுவையின் மேல் இவன் இயேசு... யூதர்களின் அரசன் என்று
எழுதிய சீட்டு.... சிலுவையில் தொங்கிய வண்ணம் இரு கள்வர்களுக்கு மத்தியில் தன்
மைந்தன்...
அவன் கண்கள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன..... வலியால்
துடிக்கின்றான்... தாயால் காண இயலாத வேதனை.... ஓடி வந்து அருகில் நின்று
துடிக்கின்றாள்....
தன் தாயைக் கண்டதும் ஈசனின் மனவேதனை அதிகரிக்கின்றது....
தாயே.... முப்பத்து மூன்று ஆண்டுகள் என்னை வளர்த்தாயே.... கண்ணின் மணி போல்
பாதுகாத்தாயே.... உனக்கென்று நான் என்ன விட்டுச் செல்கின்றேன் தாயே..... எல்லாம்
முடிந்து விட்டது தாயே.... என் அன்புத் தாயே... உனக்கென்று நான் என்ன தர
முடியும்.....
தன் அன்புக்கினிய தோழனை அழைத்தான்.... “அம்மா.... அதோ உம்
மகன்... நண்பனே இதோ உன் தாய்” என்று
அவர்களை இணைத்தான்...
அம்மா... இத்தனை நாட்கள் என்னை இதயத்தில் சுமந்தீர்கள்....
இனி இவன் உங்களுக்கு ஆறுதலாக இருப்பான் அம்மா.... எனக்காகக் கலங்க வேண்டாம்.....
என் தந்தையின் விருப்பப்படியே இது நடந்தது அம்மா... கலங்காதே தாயே....
“உன் இதயத்தை ஒரு பட்டயம் உருவிப் போடும்” என்று தன் மகன்
சிறுவயதில் இருக்கும்போது ஒரு பெரியவர் கூறிய சொல் அன்னையின் நினைவுக்கு வந்தது.
மகனே... இதுதானா அந்தப் பட்டயம்????? ஊரெல்லாம் சென்று யூத
இனத்து அரசனாவான் என்று முன்னறிவிக்கப்பட்டாயே.... இன்று இந்த சிலுவை மரத்தில்
இவன் யூதர்களின் அரசன் என்று கேலியாக தீட்டியுள்ளார்களே..... மகனே.....
சிறுவயதிலெல்லாம் உனக்கான தீங்குகள் முன்னறிவிக்கப்பட்டு
உன்னைக் காக்க நாங்கள் எங்கெங்கெல்லாமோ திரிந்தோமே..
இன்று உன்னைக் காக்கமுடியாமல் தவிக்கின்றேனே.. மகனே...
“பரலோகத் தந்தை மகன் இன்று
படுபாவி...
படு பாவங்கள் செய்திட்ட
பரபாஸோ நீதிமான்...
அன்பு வழி ஈந்த
உனையே சிலுவையேற்றிய
உலகத்தில் என்ன நீதியுண்டு
மகனே!
ஈசனையே மகவாய்
ஈன்றேனென்ற பெருமை கொண்ட
இதயத்தை
ஈட்டியால் துளைத்துப்
போட்டனரே!
கொடிய பிலாத்துவே...
என் மகனுக்கு
எதிராய் சதிசெய்த
கொடுங்கூட்டமே...
இன்னமும் என் மகன்
இரக்கமே கொண்டுளான்....
தந்தையே இவர்களை
தண்டனைக்குத் தப்பிவியும்
என்றானே..
அறியீரா மூடரே....”
அன்னையின் கண்ணீர்
புவிதொட்டது..... விண்ணகமும் மண்ணகமும் அன்னையின் சோகம் கண்டு ஆட்டம் கண்டது...
தாயின் வேதனை ஈசனின் மனதை
உருக்கியது....
“அம்மா .... எனக்காக
அழவேண்டாம்.... அனைத்தும் தந்தையின் விருப்புடனே நடக்கின்றது அம்மா....”
கொடியோன் ஒருவன்
வந்தான்....
“இன்னுமா நீ உயிரோடு
இருக்கின்றாய்?” ஈட்டியை எடுத்து விலாவில் குத்தினான்...
வலி தாளாது துடித்தான்
ஈசன்...
“தந்தையே.... எனை ஏன்
கைவிட்டீர்?” அவன் எழுப்பிய குரல் அகிலமெங்கும் ஒலித்தது...
அண்டசராசரங்கள்
ஸ்தம்பித்தன...
“எல்லாம் முடிந்தது.... தந்தையே....
எனை ஏற்றுக் கொள்ளும்...” அன்புத் தாயின் பார்வையில் அன்பெனும் பணியாற்ற வந்த ஈசன்
உயிர் அந்த சிலுவையில் பிரிந்தது....
அன்னையின் கண்களை யார்
துடைக்கக் கூடும்??
அன்னைக்கு யார் ஆறுதல்
சொல்லக் கூடும்??
மண்ணுலகோர் உய்ய புதியதோர்
நீதி சொன்ன உத்தமனின் தாய் அழுதால் உலகம் தாங்குமா?
அன்பு மட்டுமே உலகநீதி....
இதுவே அவன் கொள்கை....
உன்னை அடித்தால்,
மகிழ்வோடு ஏற்றுக் கொள்.... உன்னை அலைக்கழித்தால் மகிழ்வோடு பின் தொடர்....
எல்லாம் வல்ல ஈசன் உலகத்தில் நீர் சுமக்கும் பாடுகளுக்கு மறுமையில் நன்மை
அளிப்பார்....
பாவங்களை
வெறுத்தொதுக்குங்கள்.... பாவிகளை அல்ல.....
அன்றொரு நாள் ஒரு
விபச்சாரியைக் கொலை செய்யச் சென்ற கூட்டத்தாரை நோக்கி...
“உங்களில் யார்
மனத்தளவிலும் மாசில்லாதவனோ அவனே இவளைக் கல்லெறியும் தகுதியுடையான்” என்று வெட்கித்
தலைகுனியச் செய்து அவளை அப்பாவிகளிடமிருந்தும், பாவத்திடமிருந்தும் மீட்டான்...
ஏழைகள் மீது இரக்கம்
காட்டவும், தீண்டாமை எனும் துயர் ஒழிக்கவும் தானே முன்னோடியாயிருந்து அவ்வண்ணமே
வாழ்ந்து காட்டிய உத்தமன்...
இவன் என் மகனல்லவா??
பன்னிரண்டு வயதில், ஆகமங்கள்
அனைத்தையும் இவனுக்குப் போதித்தது யார் என்று அன்றைய நாளில் எனைக் கேட்ட பெரியோர்
முன்னிலையில் பேருவகை அடைந்தேன்...
மகனே..... என்னை மீளாத்
துயரில் ஆழ்த்திச் சென்று விட்டாயே....
உனை நம்பிய இக்கூட்டத்தார்
இனி என்றுனைக் காண்பார் மகனே....
உன் தந்தையின் விருப்பு
அதுவென்றால் அவ்வாறே ஆகட்டும் என்றாயே மகனே...
உலகோர் துயர் உன்
தந்தைக்கு எட்டாதா?
என் மகனைப் பிரிந்து
வாடும் என் கண்ணீர் உன் தந்தையின் பாதங்களைத் தொடாதா?
உனை மட்டுமே நம்பி உலகின்
காரியங்கள் விடுத்து வந்த உத்தம அடியார்களின் துக்கம் உன் தந்தையின் செவிகளில்
விழாதா மகனே....
அன்னையின் கண்ணீர்...
அகிலத்தின் கண்ணீர்.....
உத்தமியின் கண்ணீர்....
உலகத்தின் கண்ணீர்....
பத்தினியின் கண்ணீர்....
பக்தர்களின் கண்ணீர்....
அன்னையின் கண்ணீர் துடைக்க
ஈசன் மீண்டு வருவான்..... அவன் வரும் நாளைக் காண அன்னை எதிர்பார்த்திருந்தாள்....
அன்னை அவனைக் கண்ட காட்சி
மற்றொரு பதிவில்...
வாழ்க ஈசன் புகழ்.....
வளர்க அன்னையின் அன்பு....
வெள்ளி, பிப்ரவரி 02, 2018
அலைகளும் என் நினைவுகளும்....
குறுமணலில் கால் பதித்தவளாய்
நின்றேன்.. நடந்தேன்... அமர்ந்தேன்...
அலைகள் என்னை வந்து முட்டிச் சென்றன...
ஏதோ என்னிடம் பேசுவதற்காக...
நானும் அமர்ந்தேன் அதை வினவுவதற்காக....
பார்த்தேன்... புரிந்தேன்... உணர்ந்தேன்....
நானும் கடலும் ஒன்றுதான்...
அதன்
அலைகளும் ஓய்வதில்லை...
என்
நினைவுகளும் ஓய்வதில்லை...
-
எழுதியது... கெத்சியாள் இருதயராஜ்.
ஞாயிறு, ஜூன் 16, 2013
குருத்தோலை
குருத்தோலை
-
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம் – 628702.
பழைய நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த என்னை,
நடத்துனரின் அந்த கணீர் குரல் தட்டி
எழுப்பியது.
“சாத்தாங்குளம் எல்லாம் எறங்குங்க!”
இந்த மண்ணை மிதித்து, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு
மேலாகி விட்டது. விபத்தில் தனது தந்தை, தாயைப் பறிகொடுத்து அனாதையாய் நின்ற என்
காதலியைக் கரம்பிடித்த நாளில், தந்தையுடன் ஏற்பட்ட தகராறால் “இனிமேல் இந்த ஊரை
வந்து எட்டிப்பாத்தேன்னா கேளுங்க!” என்று வீம்புடன் வெளியேறிய அந்த நாள்
நினைவுக்கு வந்தது.
கடந்த வாரம் வரைக்கும் ஊரைப்பற்றிய நினைவே இல்லை. கடந்த
வாரத்தில் என்னுடைய பேரன் வந்து “தாத்தா, நம்ம பக்கத்து வீட்டு சுரேஷ் அவங்க
வில்லேஜிக்குப் போய்ட்டு வந்தானாம். அவங்க சொந்தக்காரங்களப் பத்தியெல்லாம்
சொல்லிட்டிருந்தான் தாத்தா. நம்ம வில்லேஜ் எங்கே இருக்கு?” என்று அவன் கேட்ட
பின்னர்தான் ‘அடடா இத்தன வருஷமா நாம நம்ம ஊரப்பத்தி நெனக்கவே இல்லியே’ என்று
மனதில் உரைத்தது.
எனது மகன் கூட “டாடி. அடுத்த வாரம் நாம எல்லாம் சேர்ந்து
போய்ட்டு வரலாம்” என்று கூறினான். ஆனால் நானோ பிடிவாதமாக, “மொதல்ல, நான் போய்ட்டு
வந்துடறேண்டா. அப்புறமா நாம எல்லாம் ஒருவாட்டி போய்ட்டு வரலாம்” என்று கூறிவிட்டு,
புறப்பட்டு வந்து விட்டேன்.
ஊர் மிகவும் மாறி விட்டிருந்தது. புதிதாக ஓர் பேருந்து
நிலையம். அங்கிருந்து வீட்டிற்குச் செல்லும் வழி நன்றாகவே நினைப்பு இருந்தது.
ஏனெனில் இங்கிருந்த கரையடி குளத்தில்தான் நான் நீந்திப் பழகினேன்.. என் மனைவியின்
வீடும் இதற்கு அருகில் உள்ள வடக்குத் தெருவில்தான் இருந்தது. அவளைப்
பார்ப்பதற்காகவே அடிக்கடி இந்த குளக்கரைக்கு வந்து காத்து கிடப்பேன்.. பசுமை
நிறைந்த அந்த நினைவுகளை அசைபோட்டபடி, இப்போது நம் வீட்டில் யாரெல்லாம்
இருப்பார்களோ, அப்பா, அம்மா இன்னும் வயதாகி எப்படி இருப்பார்களோ, அண்ணன் அவரை
நன்றாகக் கவனித்துக் கொண்டிருப்பானோ இல்லையோ என்று மலையளவு கேள்விகள் மனதில்.
சரி வீட்டிற்குச் செல்லலாம் என்று நகர ஆரம்பித்த போது,
“ஐயா, சாப்பிட எதாச்சும் வாங்கிக் குடுங்க ஐயா,”
ஏற்கெனவே பரிச்சயமான குரல் போன்று இருந்தது. அந்த
முதியவரால் படுத்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது.
அவருக்கு அருகே தட்டுமுட்டு சாமான்கள். அந்த குடத்தில் இருக்கும் நீரையாவது
குடிக்கலாம் என்று எண்ணியபடியே அவர் அதை இழுத்த போது அந்த வெறும் குடம் காற்றில்
பறந்து ஓடியது.
“இருங்க ஐயா. நான் உங்களுக்கு கடையில எதாச்சும் வாங்கித்
தாறேன்.” சொல்லியபடியே அருகிலிருந்த உணவகத்தை நோக்கி நடந்தேன்.
உணவக வாசலில் ஓர் மூதாட்டி, அங்கிருந்தவனிடம் கெஞ்சிக்
கொண்டிருந்தாள். “தம்பி மிஞ்சிப் போனது எதாச்சும் இருந்தா, கொடுய்யா... ஒன் கால்ல
விழுறேன்”
“போம்மா அந்தப் பக்கம், தெனந்தோறும் வந்து தொல்லை பண்ற.. போ
போ..” அவனோ அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.
“பசில உயிரு போதுய்யா.... எதாச்சும் கொடுய்யா” அவளோ விட்ட
பாடில்லை....
இறுதியில் இரங்கிய அவன் இரு இட்லிகளை எடுத்துக் கொடுத்தான்.
“தம்பி அஞ்சி இட்லி பார்சல் பண்ணிக் குடுங்க” என்று அவனிடம்
கூறியபடி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
பார்சல் கட்டி வந்தவுடன் அந்த பெரியவரிடம் சென்று
கொடுத்துவிட்டு திரும்பும்போதுதான் கவனித்தேன் அவரது கையில் இருந்த அந்த
முத்திரைப் பச்சையை.
இந்த முத்திரை....?
இதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே...
“ஐயா நீங்க சாமிநாதன் ஐயாதான?”
“எம் பேரே மறந்து போய் ரொம்ப நாளாச்சி ஐயா! முன்னாடி
எல்லாம் அதுதான் என் பேரு.... ஆனா இங்க இருக்கிறவங்களுக்கே எம்பேரு மறந்து போயிருக்குமே! உங்களுக்கு எப்படித் தெரியும்?” அந்த பெரியவர்
கேட்டபோது என் கண்கள் என்னையறியாமல் குளமாகின.
அந்த நாட்களில் சாமிநாதனை அறியாதவர்கள் இருக்க முடியாது.
சாத்தான்குளம் பண்ணையாரின் ஒரே மகன் அவர். நான் காதல் மணம் புரிவதற்கும் அவரே
தைரியம் அளித்தார். அவருடையதும் காதல் திருமணம்தான்.
எனது சிறுவயதில் இந்த குளக்கரையில் அடிக்கடி அவரை அவரது
காதலியுடன் பார்த்திருக்கின்றேன். எங்கள் வட்டாரமே கண்ட முதல் கலப்புக் காதல் அது.
எனக்குத் தெரிந்து திருமணத்தில் முடிந்த முதல் காதலும் அதுவே.
சாமிநாதன் தன் காதலியின் மீது உயிரையே வைத்திருந்தார்.
“பாவி முடிவான். அவ என்ன கேட்டாலும் வாங்கிக்
குடுத்துருதாம்லே” என்று ஊரே பேசிக்கொண்ட்து. அவர் மனைவி கேட்ட எந்த ஒரு
பொருளையும் அவர் மறுத்ததாக சரித்திரமே இல்லை...
இன்று....
இவர் ஓர் பிச்சைக்காரனை விட கேவலமாக.... என்னதான்
நடந்திருக்கும்...??
அவர் அருகே அமர்ந்து என்னைப் பற்றிச் சொன்னேன். அவருக்கும்
என்னை நினைவிருந்தது.
“நம்ம சுந்தர பாண்டி அண்ணாச்சி மவனா? அடயாளமே தெரியலியே
ராசா. நல்லா இருக்கியா?” என்று என்னைப் பற்றிக் கேட்டபடியே இட்லியை உண்ண
ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னைப் பக்கவாதம்
தாக்கியதாகவும், அதன் பின்னர் சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்யும்படி மகன்கள்
வற்புறுத்தியதால், தனக்கென்று எதையும் வைக்காமல், எல்லாவற்றையும் பாகம்
பிரித்துவிட, தனது மகன்கள் தனது சொத்துக்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, தன்னையும்
தன் மனைவியையும் தெருவில் விட்டு விட்டதாகக்
கூறினார்.
எனக்கோ அழுகை வந்து விட்டது.
“இங்கே பாரு ராசா.... இவளக் கல்யாணம் பண்ணுனப்போ
எப்படியெல்லாம் சண்ட நடந்துச்சி... இவள விட்டுக் கொடுக்காம... இவளுக்குன்னு
என்னெல்லாம் செஞ்சேன்... ஆனா பாரு... இந்த பாழாப் போன பசி எங்க காதலப் பிரிச்சிடிச்சி...
அங்க பாரு .. அங்கன தனியா உக்காந்து திங்கா...... என்ன செய்ய ராசா... அவளயும்
குத்தம் சொல்ல முடியுமா? அவள மகராணி மாதி தாங்கினேன்.... “ என்று அவர் சொல்லச்
சொல்ல என் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் பீறிட்டன.
தனக்கென்று கிடைத்த எதையும் தன் மனையாளுக்கே முதலில்
கொடுக்க வேண்டும் என்று விரும்பி, தன் காதலியைத் தன் கண்களாகப் பாவித்த இந்த மகாக்
காதலன் காட்டிய திசை நோக்கினேன்.... அந்த அழகுக் காதலி இன்று அழுக்கு
மூதாட்டியாய்.... உணவகத்தின் அருகில் அமர்ந்து கிடைத்த இட்லியை உண்டு
கொண்டிருந்தாள்.
கண்கள் பனித்த நிலையில் என் இல்லம் இருந்த திசை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன். புதிதாக ஆரம்பித்திருந்த பெட்ரோல் பங்க் தாண்டியதும் அடுத்த
சந்தில், ஓர் ஜோடி..
“ஏட்டி இங்க பாருட்டி... நேத்து திருனெவேலிலருந்து
உனக்குன்னு வாங்கிட்டு வந்த இருட்டுக்கட அல்வாட்டி...நான் கொஞ்சம் கூட திங்காம
உனக்க்குன்னு கொண்டாந்திருக்கேன். இந்தா...”
அந்த இளைஞன் தன் காதலிக்கு அன்பின் அல்வாவைத் தந்து
கொண்டிருந்தான்...
அட... குருத்தோலை...
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012
வியாழன், ஜனவரி 26, 2012
பாரதக் குடியரசே வாழி!
பாரதக் குடியரசே வாழி!
எங்கும் நிறைந்தருள் தேவி
எனையாளும் பாரத தேவி
நின்றன் இணையடி போற்றும்
கந்தன் வாய்மொழி கேளாய்...
தன்னிலை மறந்தோர் கையில்
நின்றனைத் தந்தோம் யாமே!
தந்ததால் வந்ததே தொல்லை
சொந்தமாம் பாரதம் அவர்க்கே!
எவ்விடம் காணினும் செம்மையென
அவ்விடம் அவரே மொழிந்தார் ஆயின்
இவ்விடம் காணும் ஏழ்மை தனை
எவ்விடம் போவெனச் சொல்வேன்?
அன்னம் சமைத்திட அரிசி அதுபெற
கன்னம் வைத்திடும் கள்வர் மிகை
பொன்னும் பொருளும் போகும் இவ்
வின்னல் களைவார் யாரோ?
பொய்யொடு களவும் சூதும் இங்கு
மெய்யென உள்ளது கண்டே
இன்புறும் மாந்தர் கண்டு இன்று
என்பு தோலானோம் யாமே!
முடியாட்சி முடிந்து இங்கு
குடியாட்சி வந்த பின்னும்
முடியாத சோகம் இன்னும்
வடியாத நீராய்த் தானே!
மொழியாலே பிளவு சொல்லி
இழிவான நிலைக்குச் செல்லும்
பழி தாங்கும் பரத தேவி
சுழி மீளும் நாள்தான் யாதோ?
எங்கும் சுதந்திரம் என்றிட்ட போது
பொங்கு தமிழர்க்கு இல்லையே ஆழியில்!
நம்மவர் செல்லும் தோணி மீளும்
நம்பிக்கை யில்லை நிதமே!
"என்னவோ குடியரசு தினமாம்"
எதிர் வீட்டுப் பையன் சொன்னான்.
"என்னடா அது?" வென வினவ
"அன்னதும் அரசினர் விடுப்பே"
என்றவன் மொழிந்திடல் கேட்டு
இன்றைக்கு நகைத்தோம் யாமும்
இன்னலைத் தீர்த்திடும் நாளை
என்றைக்குக் காண்போம் நாமும்?
வல்லவர் மட்டும் வாழும் என்றும்
நல்லவர் தீதே காணும் எங்கள்
பரதக் குடியரசே வாழி.......
வாழ்க பாரதம்...
எங்கும் நிறைந்தருள் தேவி
எனையாளும் பாரத தேவி
நின்றன் இணையடி போற்றும்
கந்தன் வாய்மொழி கேளாய்...
தன்னிலை மறந்தோர் கையில்
நின்றனைத் தந்தோம் யாமே!
தந்ததால் வந்ததே தொல்லை
சொந்தமாம் பாரதம் அவர்க்கே!
எவ்விடம் காணினும் செம்மையென
அவ்விடம் அவரே மொழிந்தார் ஆயின்
இவ்விடம் காணும் ஏழ்மை தனை
எவ்விடம் போவெனச் சொல்வேன்?
அன்னம் சமைத்திட அரிசி அதுபெற
கன்னம் வைத்திடும் கள்வர் மிகை
பொன்னும் பொருளும் போகும் இவ்
வின்னல் களைவார் யாரோ?
பொய்யொடு களவும் சூதும் இங்கு
மெய்யென உள்ளது கண்டே
இன்புறும் மாந்தர் கண்டு இன்று
என்பு தோலானோம் யாமே!
முடியாட்சி முடிந்து இங்கு
குடியாட்சி வந்த பின்னும்
முடியாத சோகம் இன்னும்
வடியாத நீராய்த் தானே!
மொழியாலே பிளவு சொல்லி
இழிவான நிலைக்குச் செல்லும்
பழி தாங்கும் பரத தேவி
சுழி மீளும் நாள்தான் யாதோ?
எங்கும் சுதந்திரம் என்றிட்ட போது
பொங்கு தமிழர்க்கு இல்லையே ஆழியில்!
நம்மவர் செல்லும் தோணி மீளும்
நம்பிக்கை யில்லை நிதமே!
"என்னவோ குடியரசு தினமாம்"
எதிர் வீட்டுப் பையன் சொன்னான்.
"என்னடா அது?" வென வினவ
"அன்னதும் அரசினர் விடுப்பே"
என்றவன் மொழிந்திடல் கேட்டு
இன்றைக்கு நகைத்தோம் யாமும்
இன்னலைத் தீர்த்திடும் நாளை
என்றைக்குக் காண்போம் நாமும்?
வல்லவர் மட்டும் வாழும் என்றும்
நல்லவர் தீதே காணும் எங்கள்
பரதக் குடியரசே வாழி.......
வாழ்க பாரதம்...
வெள்ளி, ஜனவரி 13, 2012
ஓர் இசைப்பாட்டு (பொங்கல் வாழ்த்துக் கவிதை.. ஐயா நடராசனிடமிருந்து)
கல்பட்டு நடராசன் அவர்கள்.. நண்பர்களுக்கா அன்னாரது கவிதை....
From: Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
அபிராமி மகன் கந்த சாமி
நாக ராஜன் அழைத்தால்
சிவகாமி பேரன் கல்பட்டு
நட ராஜன் நானும் அழைத்திடல் வேண்டாமோ
அத் தை மகளை
வா வா தை மகளே வா வா
வா வா என் அத்
தை மகளே வா வா
சிந்தை யெல்லாம் உன் மேல் வைத்தேன்
முந்தைப் பிறவியில் நீ யெந்தன்
இல்லாளாய் இருந்திருக்க வேண்டும்
இத் தை பிறந்தால்
உன் கை பிடிப்பேன்
சொத்தாய் நானுனைக் காப்பேன்
வா வா தை மகளே வா வா
வா வா என் அத்
தை மகளே வா வா
--
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
வா வா தை மகளே!!!
எற்றைக்கும் குன்றாத புகழோடு - எமை
ஏற்றாளும் எம் அன்னைத் தமிழோடு
வற்றாத நல்லுள்ளம் தான் கொண்டு நமைப்
பெற்றோரும் உற்றாரும் வாழ்ந்தோங்க
செந்தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் அது
சிந்தையினில் தந்திடுமாம் புத்துணர்வு.
வளமோடு வாழ்வு தர வா வா தை மகளே!
உளமெலாம் பொங்கும் வழி தா தா தமிழ் மகளே!!
புலியெனவே தமிழ் மறவர் தமது நிலையறிந்திடவே
வலிமை தரும் நல்ல தினம் தந்திடு எம் தை மகளே!.
செந்தமிழில் வைதாலும் நல்வரமே தந்திடுவான்
சுந்தரனாம் எங்களன்பு சங்கரனின் தாள் பணிதும்.
வல்வினைகள் தன்னோடு வருவினைகள் மாய்த்திடவே
நல்லதிந்த நாளினிலே நமக்கருளைத் தந்திடுவான்..
மலைமகளாம் எங்களன்னை மீனாளின் தாள் பணிதும்.
கலைகளெலாம் தோன்றிடவே காத்தருள்வாள் கடைக்கண்ணால்..
மாமதுரை தனையாளும் மதங்கர் குலத் தலைமகளே
தாமாளும் தண்டமிழர் நாடிதனைக் காத்திடுவாள்..
தரணியில் தமிழிசை பாடி தைமகளை வரவேற்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
அடியேன் மற்றும் இல்லத்தாரின் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ஞாயிறு, டிசம்பர் 25, 2011
கிறிஸ்துமஸ் கதை நண்பர்களுக்காக....
நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..
எமது பள்ளி நாட்களில் பகிரப்பட்ட கதையொன்றை நண்பர்களுக்காக இவ்விடத்துப் பகிர்கின்றேன்..
ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய நாடகத்துக்காக பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது..
இயேசுவின் பிறப்பு பற்றிய சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், என்றென்றும் தெவிட்டாத அவ்வின்பத் தேனை மீண்டும் ஒருமுறை சுவைப்போமே...
யோசேப்பு என்ற தச்சருக்கும், மரியாள் என்ற கன்னிகைக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது... இச்சமயத்தில் இறைவனுடைய திருவருளால் கன்னிமரியாள் கர்ப்பமுற்றாள். திருமணமாகாமல் தான் கர்ப்பமுற்ற காரணம் குறித்து பயந்த சமயத்தில் இறைத்தூதன் அவள் முன் தோன்றி அவளைத் தேற்றினார். தூய ஆவியானவரின் திருவருளால் அவள் கர்ப்பமுற்றதாகவும், இறைமைந்தனே அவளுக்குப் பிறக்கப் போகதாகவும் அறிவித்தார்.
இதை அறியாத யோசேப்பு, மரியாளைத் திருமணம் செய்யாமல் தள்ளிவிடலாம் என்று எண்ணுகையில் இறைத்தூதர் அவருக்கும் வெளிப்பட்டு அவரையும் தேற்றினார். யோசேப்பும் கன்னி மரியாளை ஏற்றுக் கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வேளையில் தங்கள் சொந்த ஊருக்கு அவர்கள் இருவரும் பயணப்பட்டனர்.
அந்த மார்கழி மாத பனியிரவில் அவர்கள் பயணம் செய்யும் போது மரியாளுக்கு பிரசவ வலி எடுத்தது... சத்திரங்கள் எதிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. கடைசியாக தேவ மைந்தன் ஓர் மாட்டுக் கொட்டிலில் மரியாளுக்கு மகனாகப் பிறந்தார்.... தேவதூதர்கள் அவர் பிறந்ததை அனைவருக்கும் அறிவிக்க, அனைவரும் கொண்டாடினர்..
இந்த சம்பவத்தை நாடகமாக அரங்கேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது... அந்த கிறிஸ்துமஸ் மாலை வேளையும் வந்தது...
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது...
மரியாள் கருவுற்றது, தேவதூதன் தேற்றியது.. யோசேப்பு அவளை ஏற்றுக் கொண்டது... இப்படி எல்லாம் நல்லபடியாக நடந்தது..
யோசேப்பு மரியாளை அழைத்துக்கொண்டு பயணம் செய்கையில் அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது...
யோசேப்பு அவளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சத்திரத்துக்குச் சென்றார்.. இடமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர்..
மீண்டும் இன்னொரு சத்திரத்துக்குச் சென்றார்.
"ஐயா.. என் மனைவி நிறைமாத கர்ப்பிணி.. அவளுக்குப் பிரசவ வலி வந்து விட்டது. தயவு செய்து இடம் தாருங்கள்"
"இடமில்லை ஐயா... "
"ஐயா.அவள் வலியில் துடிக்கிறாள். கொஞ்சம் கருணை காட்டுங்கள்... "
"உண்மையிலேயே இடமில்லை ஐயா...தயவு செய்து போய்விடுங்கள்"
"ஐயா நிறைமாத கர்ப்பிணி ஐயா.. பிரசவ நேரம் வேறு.. எங்கும் இடம் இல்லை.. எங்கே ஐயா போவோம் நாங்கள்... கொஞ்சம் இடம் தாருங்கள்.."
"இடம் இல்லை ஐயா.. போய்விடுங்கள்..."
"சரி ஐயா. நாங்கள் போகிறோம்.." என்று அவர்கள் திரும்பினார்கள்..
இந்த இடத்தில்தான் நம் கதை முக்கியத்துவம் பெறுகின்றது...
சத்திரக்காரனாக நடித்த மாணவன், யோசேப்பாக நடித்தவனையும், மரியாளாக நடித்தவனையும் கண்டு கலங்கி விட்டான்... மிகவும் உணர்ச்சிவசப் பட்டவனாய்....
"ஐயா கொஞ்சம் நில்லுங்க..."
"என்ன ஐயா..?"
"இந்த சத்திரத்தில் இடம் இல்லை.... ஆனால் எனக்கென்று கொடுக்கப் பட்ட அறையை நான் உங்களுக்குத் தருகின்றேன்.. வாருங்கள்" என்று அவன் அழைக்கவும், நாடகத்தில் நடித்தவர்களும், அங்கிருந்த அத்தனை பார்வையாளர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்....
யாருமே எதிர்பார்க்காத காட்சி அது...
எங்கள் ஆசிரியர் கூறியது இதுதான்.. "யாரும் எதிர்பாராத வேளையில் கதையில் அதைப் போன்ற முடிவெடுத்த மாணவன் முடிவு பார்வையாளர்களைப் பொறுத்தவரை தவறுதான்... ஆயினும், கிறிஸ்துவின் உண்மையான பிறப்பு என்பது அதைப் போன்ற நல்லிதயங்களில்தான் ஜொலிக்கின்றது... அவன் மனதில் இரக்கம் உண்டானது... கதையை மறந்தான்.. தன்னிலை மறந்தான்... அவர்களை அழைத்தான்... மனிதர்களுக்கு நல்வழி காட்டிட இரக்கம் கொண்டுதான் இறைமகன் பூமியில் அவதரித்தார்.... இதைப்போன்ற நல்லிதயங்கள் அனைத்திலும் அவர் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்... எளியோருக்கு இரங்குவதும், உண்மையுள்ளவர்களாக வாழ்வதும் மட்டுமே இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதன் பொருள்... எனவே.. அன்றைக்கு அந்த மாணவன் தன் அறையை இயேசுவின் பெற்றோருக்காகக் கொடுத்த சம்பவத்தைப் போல், நாமும் நம் மனத்தில் இயேசுவுக்கும் அவரது கொள்கைகளுக்கும் இடம் கொடுப்போம்"...
நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. நன்றி ..

செவ்வாய், செப்டம்பர் 27, 2011
பக்தியில் திளைப்போம் நவராத்திரியில்...
அடியேனை வரவேற்றருளிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற நடையில் இத்தொடரை, எளியேன் அளித்திட இயலுமா என்பது ஐயமே... ஆயினும் என்றென்றும் என்னுள்ளே இருந்து எம்மை வழிநடத்தும் அன்னையின் திருப்பாதங்களில் சரணடைந்து அவள் புகழ் பாடுகின்றேன்...
பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பலருடைய வாழ்வை உதாரணம் காட்டலாம்.
கடந்த ஆண்டு திருக்கடவூரில் அன்னை அபிராமியின் திருக்கோவிலில், ஐயா காளைராசன் அவர்களைச் சந்தித்த போது, அன்னார் பகிர்ந்த நிகழ்வொன்றை இவ்விடத்துத் தருகின்றேன்...
அபிராமிப் பட்டர் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு அன்னை அபிராமியையே தனக்குரிய உலகமாகக் கொண்டு வாழ்ந்தார்... அவளைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவர்க்கில்லை... அப்படிப் பட்ட பெரும்பக்திக்குத் அருட்செய்யவே அன்னை தானணிந்த தோடொன்றை வானில் வீசி அமாவாசை இரவை பௌர்ணமியாக்கிக் காட்டினாள்...
ஐயா அவர்கள் இன்னொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டினார்.
கண்ணப்பன் அதுவரை சிவலிங்கம் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து வந்தான்.. சிவலிங்கம் என்றால் என்ன? சிவம் என்றால் என்ன? என்று அவனுக்குத் தெரிந்த முதற்கொண்டு தன் மனத்தில் சிவசிந்தனையன்றி மற்ற சிந்தனைகள் இல்லாது வாழ்ந்தான்.. ஆகவேதான் சைவ சமய நாயகனுக்கு அசைவப் படையலிட்டும் அது ஏற்றுக் கொள்ளப் பட்டது.. அதைத் தொடர்ந்து வந்த சோதனைகளையும் அவன் எதிர்கொண்டு நாயன்மார்களில் ஒருவனாக ஆனான்...
இப்படியாகக் காணும் இடமெல்லாம் இறைவடிவைக் கண்டு தொழும் பக்திக்கு சோதனைகள் வந்தாலும், வலுமிக்க மெய்யான பக்தியால் அச்சோதனைகளே வரலாற்றில் நீடிக்கும் சாதனைகளாக ஆகின்றன..
தசராத் திருவிழாவின் முதல் நாளான இன்று, குலசேகரன் பட்டினத்தில் வீற்றிருந்து உலகாளும் நாயகியான அன்னை முத்தாரம்மன், துர்க்கையாக உற்சவம் வருகின்றாள்...
சும்ப நிசும்பர்களை வதைத்து, மகிடனை அழித்துத் தக்கோரைக் காக்க தேவி கொண்ட வடிவைக் கண்டு உலகமே நடுங்கியது... ஆனால் அன்பே உருவான அன்னை, அத்தகைய கொடிய மனம் படைத்தவளா என்ன? மக்களைக் காக்க அவள் கொண்ட கோலம், அசுரகுணம் கொண்டோரை விடுத்து, என்றென்றும் அவள் மேல் பக்தி கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நல்லதையே நல்கிடும்... இதனை அவள் மேல் அழியாத பக்தி கொண்ட அன்பர்கள் நன்கு உணர்வார்கள். ஆகவேதான், அன்னையின் திருக்கோலம் கண்டு அஞ்சாது அவளிடத்து வரங்கள் கேட்கும் தன்மையைக் கவிஞர்கள் பெற்றிருந்தனர்.
வரங்கள் கேட்பது கவிஞனின் உரிமை... தவறாது அளிப்பது அன்னையின் கடமை...
அப்படி அன்னையின் அருள் பெற்ற மகா கவிஞன் ஒருவனது கவிதையை இவ்விடத்துக் காண்போமா? அனைவருக்கும் தெரிந்த கவிதைதான்... அடிக்கடி படித்த கவிதைதான்... ஆனால் அன்னையின் திருவருளோடு, அவள் திருவடி நிழலில் நின்று பாடிய மகா கவிஞன் என்ன துணிச்சலோடு அவளிடத்து இந்த வினாவை எழுப்பியிருப்பான்??
என்றென்றும் உன் திருப்பாதங்களே சரணமென்றெண்ணி நான் செய்த பூசனைகளுக்கெல்லாம் என்ன பதில் தந்திட்டாயடி காளி? நான் கேட்கும் வரத்தினைத் தந்திட விரைந்து வந்திடுவாய்....இதனைக் கேட்டல் என்றன் உரிமை.... நீ தந்தே ஆள வேண்டும் என்ற மனவுறுதியோடு கேட்ட கவிஞனின் அழியாத மகா கவிதையொன்றைக் காண்போமா?
"விண்ணும் மண்ணும் தனியாளும் -- எங்கள்
வீரை சக்தி நினதருளே -- என்றன்
கண்ணும் கருத்தும் எனக் கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்
பாலை வனத்திலிட்ட நீரோ? -- உனக்கு
எண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி
வில்லாது அகிலம் அளிப்பாயோ?
நீயே சரணமென்று கூவி -- என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி
தாயே எனக்குமிக நிதியும் -- அறந்
தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு
வாயே என்று பணிந்தேத்திப் -- பல
வாறா நினது புகழ் பாடி -- வாய்
ஓயேனாவதுணராயோ?-நின
துண்மை தவறுவதோர் அழகோ?
காளீ வலிய சாமுண்டி -- ஓங்
காரத் தலைவி யென்னிராணி -- பல
நாள் இங்கெனையலைக்கலாமோ? -- உள்ளம்
நாடும் பொருளடைதற்கன்றோ -- மலர்த்
தாளில் விழுந்த பயங்கேட்டேன் -- அது
தாராய் எனில் உயிரைத் தீராய் -- துன்பம்
நீளில் உயிர் தரிக்க மாட்டேன் -- கரு
நீலி என் இயல்பறியாயோ?
தேடிச் சோறு நிதந்தின்று -- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பல செயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வேன் என்று நினைததாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயிராக்கி- எனக்
கேதுங்கவலையறச் செய்து -- மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
தோளை வலியுடைய தாக்கி -- உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் -- கட்டு
மாறா உடலுறுதி தந்து -- சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து -- மத
வேளை வெல்லுமுறை கூறித் -- தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்கள் எல்லாம் -- வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக
நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல
பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை
வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் -- என
விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி
சூழும் வீரமறி வாண்மை
கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி
தாயே உனக்கரியது உண்டோ? -- மதி
மூடும் பொய்ம்மையிருள் எல்லாம் -- எனை
முற்றும் விட்டகல வேண்டும்;
ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை
வாழி, நின்னதருள் வாழி.
ஓம் காளி வலிசாமுண்டீ
ஓங்காரத் தலைவி என்இராணி"
மிக நீண்ட பாடல்... நாடி நரம்புகளில் எல்லாம் மறைந்திருக்கும் நம் சக்தியை தேடி இழுத்துத் திறனாக வெளியேற்றும் கவிதை இது... ஆம்... மறைந்தாலும் என்றைக்கும் தமிழ்த்தாயின் செல்லக் கவிஞனாய், தமிழ் கூறும் நல்லுலகின் கவி வேந்தனாய் நம் மனத்தை ஆளும் மகா கவிஞன் பாரதியின் கவிதை....கண்களை மூடி அன்னை பராசக்தியைத் தியானித்து இக்கவிதையைப் பாடும் வேளை நம்மை அறியாது புத்தொளியொன்று நம் மனத்தில் புகுவதைக் காணலாம்... இப்படி வரங்கேட்ட பாரதிதான் "தசையினைத் தீச்சுடினும் தாய் சிவசக்தியைப் பாடும் நல் வரம்" கேட்டான். அன்னையைப் போற்றி, எனக்குப் பொருள் வேண்டும், புகழ் வேண்டும், அழியாத மகா கவிதையை யான் அருளல் வேண்டும் என்று பாடியோன், அன்னையைப் பாடும் நல் வரங் கேட்கும் தன்மையும் பெற்றிருந்தான்... தான் கேட்ட வரங்களனைத்தும், தனக்கென்று மட்டுமல்லாது, தன்னையீன்ற அன்னை பூமியை வளங்கொள்ளச் செய்திடும் வரமெனக் கேட்டான்.... இவையெல்லாம் அன்னையின் பக்தர்களின் மனத்தன்மை.. காளியை, சாமுண்டியைக் கண்டு அஞ்சாது வரம் கேட்கும் தன்மை, அவள் பக்தர்களுக்குத் தாமே வந்து சேரும்....
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது நம் சொல் வழக்கு.. ஆனால் கம்பனோ அன்னையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவிபாடும் என்று பாடி விட்டான்... அதுதான் அன்னையின் பேரருள்.... அன்னை தானே நேரில் வந்து லீலை செய்து, சமையல் செய்யும் சாதாரண மானுடன் ஒருவனை பெருங்கவியாக்கிய கதையொன்றை நாளை பகிர்கின்றேன்.... (அறிந்தோர்கள் பலரிருக்கும் அவையில் அடியேனின் சொல் அவமாயினும் பொறுத்தருள வேண்டுகின்றேன்..)
"கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே"
- ஸ்ரீ அபிராமிப் பட்டர்...
"நிலையிலா நிழலுலகில்
நித்தம் உந்தன் பதம் தேடும்
பக்தனாய் வாழ்வளிப்பாய் எந்தன்
பகைவர்க்கும் வாழ்வளிப்பாய்..
நித்தம் நித்தம் உனைத்தொழுது
நினதருளே சொந்தமென்னும்
பித்தனாய் வாழும் தன்மை
எத்தனாம் எமக்கும் அருளேன்..."

சனி, ஜூலை 16, 2011
இரவின் மடியில் (நிறைவுப் பகுதி)
இரவின் மடியில் (நிறைவுப் பகுதி)
மஞ்சளாடை உடுத்தி மங்கல நாண்பூட்டி செந்தூரான் ஆலயத்தில் மணம் முடித்து
இல்லம் செல்வதற்காக ஆலயத்திலிருந்து வெளியே வந்தோம்... எங்கள் வாகனம்
அருகில் வந்தது... வாகனத்தில் ஏறும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக அது
நிகழ்ந்தது...
நான் காவல்துறையில் சேர்ந்த பின்னர் எடுத்த களைகளில் ஒன்று
எஞ்சியிருந்ததை மறந்ததன் விளைவு....
முடிகொடுக்கும் மண்டபத்திலிருந்து அவன் ஓடி வந்தான்.... கையில் ஓர் வெட்டரிவாள்...
என்னவென்று சுதாரிக்கும் முன்னராக அவனது கையிலிருந்த அரிவாளை ஓங்கி வீசினான்....
அது என் மீது பட்டு விடும் என்ற அச்சத்தில் என்னைத் தள்ளிய என்
தங்கத்தின் கழுத்தில் வீழ்ந்தது....
மஞ்சளாடை செவ்வாடையாகி மண்ணில் சாய்ந்தது என் உலகம்....
அரிவாளை வீசியவன் ஓட, அவனைத் துரத்தவா??, வீழ்ந்து கிடக்கும் என்
தங்கத்தைக் காணவா??
மனம் மதியற்றுப் போனது...
மண்ணில் சாய்ந்த என் மனையாளை மடிமீது சுமந்தேன்...
"உனக்கொன்றும் ஆகாது கண்ணே.... உன்னை நான் காப்பேன்..." உரைத்தேன்...
வெட்டு கழுத்தில் வீழ்ந்ததால், அவளால் பேச இயலவில்லை....
செய்கைகள் செய்தாள்....
அவளை அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்குச் செலுத்தச் சொன்னேன்...
துடித்தேன்...
கண்மணியே ... தைரியம் கொள்... உனக்கொன்றும் நேராது என்றுரைத்தேன்....
எனக்கு விரித்த வலையில் நீ வீழ்ந்தாயே.... ஐயோ என மனம் நொந்தேன்....
விதி எனக்கெதிராக சதி செய்தது....
மருத்துவமனையை நெருங்கிய நேரத்தில், தன்னறிவு மறந்து விழுந்தாள்...
உள்ளே எடுத்துச் சென்றால், அவளது ஆருயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்
உரைத்தார்....
நொடிந்து விழுந்தேன்....
என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது...
விதியே விதியே.... நீ ஏன் என் வாழ்வில் சதி செய்து போனாய்???
இல்லை... இது பொய்...
என் கண்மணி மரிக்கவில்லை.... அவள் என்னோடு இருக்கும்போது அவளால் எப்படி
மரிக்க இயலும்? இதோ என் தலை முதல் பாதம் வரை எங்கும் நிறைந்திருக்கும்
அவளால் எப்படி என்னைப் பிரிய இயலும்....?
செங்குருதியில் நனைந்த மஞ்சளாடையுடன் பிதற்றினேன்...
கைகளை சுவற்றில் அறைந்து அழுதேன்....
எதிர்ப்பட்டோரையெல்லாம் என் தங்கத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டுத்
தாக்கினேன்...
என்னைப் பிணைத்தார்கள் சங்கிலியில் பித்தனென்று சொல்லி....
என் கண்ணெதிரே என் கணமணியைத் தகனம் செய்தார்கள்...
நெருப்பிலே விழுந்து அழுதேன்... என்னைப் பற்றி இழுத்து ஆறுதல் படுத்தினார்கள்....
என்னை யாரால் ஆறுதல் செய்ய இயலும்?? என் காயத்தை எந்த மருந்துதான் ஆற்றும்??
இதோ இதோ.. இந்த கடற்கரையில்தானே நீயும் நானும் உலவி மகிழ்ந்தோம்...
இன்றைக்கு என்னைப் பிரிந்து நீ மட்டும் எங்கு போனாய்???? என் கண்ணீர்
கடலை நிறைக்குமளவுக்கு அழுதேன்....
ஓடி விளையாடிய இடங்களிலெல்லாம் அவள் முகம் தோன்றி மறைந்தது...
பேசி மகிழ்ந்த இடங்களிலெல்லாம் அவள் குரல் எனக்குத் தெளிவாகக் கேட்டது....
அவளோடு நான் பேசும்போது என்னை உலகத்தோர் பைத்தியம் என்று இகழ்ந்தார்கள்..
ஒரே நிமிடத்தில் அழுகையும் சிரிப்பும் எனக்குள் மாறி மாறி எழுந்தது...
அவள் முகம் தோன்றும்போது சிரித்தேன்... அவள் இல்லாததை எண்ணி அழுதேன்...
அவள் குரல் கேட்கும்போது சிரித்தேன்.... அவள் என்னை விட்டு நீங்கியதை
எண்ணி அழுதேன்...
காதல் வானில் சிறகடித்துப் பறந்த வண்ணப் பறவைகளைப் பிரித்து வேடிக்கை
காட்டும் இறைவனே.... இதே மண்ணில்தானே நீயும் காதல் மணம் புரிந்தாய்.??
காதலின் வலியறியாதவனா நீ????
"கனவுக்குள் நீ வந்து போனாய்.... என்
கவிதைக்குக் கருவாக ஆனாய்...
தொடராதோ நம் காதல் மண்ணில்?
தொலையட்டும் அக்கடவுள் விண்ணில்..." என்று இறைவனை சபித்தேன்....
காணும் முகங்களிலெல்லாம் என் கண்மணியைத் தேடியலைந்தேன்....
தோன்றும் அலைகளிலெல்லாம் அவள் துள்ளலைத் தேடியலைந்தேன்...
அவளை அள்ளியணைத்திடச் செல்கையில் என் கைவிலங்கு என்னைத் தடுத்தது....
அவளை நோக்கி நான் ஓடுகையில் என் கால்விலங்கு என்னைத் தடுத்தது...
இடறி விழுகின்றேன்... மீண்டு எழுகின்றேன்....
என் வேதனை புரிந்தவர் யாருமிலர்...
என் சோதனை தீர்ப்பவர் யாருமிலர்...
காதல் புனிதமானது என்று மொழியும் காதலர்களும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுகின்றனர்...
காதலுக்குக் கவிபாடும் கவிஞர்களும் என்னைக் கண்டால் கலவரமடைகின்றனர்...
விளக்கின் ஒளியில், நிலவின் மடியில் அவள் முகம் தேடித் தேடி என் தேடல்
இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது...
பகலவன் விளக்கில், பரிதியின் மடியில் அவளைத் தேடும் என் தேடலுக்கு விடை
தருவார் யாருமில்லை...
பசியுமில்லை... உணவுமில்லை...
பகலுமில்லை... இரவுமில்லை....
எங்கும், எப்பொழுதும் அவள் முகம் தேடுதல் அன்றி வேறு வேலை எனக்கில்லை.....
ஆறுதல் தேடி இரவின் மடியில் தலைசாய்த்துத் துயில்கின்றேன்.........
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என் தேடல் நிறைவு பெறுமா?????
(முற்றும்)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)